• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அதிகரிக்கும் வெப்பநிலையால் நீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம்

இலங்கை

நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் நீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் முதல் நாட்டின் பல பகுதிகளில் கடுமையான வெப்பமான காலநிலை நிலவி வருவதுடன், அது மேலும் ஒரு மாதத்துக்கு தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனால் கொழும்பு உட்பட பல பகுதிகளில் நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் அடிக்கடி நீர் விநியோகமும் துண்டிக்கப்படுதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பிரதிப் பொது முகாமையாளர் அனோஜா களு ஆராச்சி கோரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கான முக்கியமான நீர் ஆதாரமான களனி ஆற்றின் நீர் மட்டம் குறைந்து வருவதே இதற்கு முக்கிய காரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வறட்சியாக காலநிலையால் ஆற்றில் நீர்வரத்து குறைந்துள்ளதால் குடிநீர் விநியோகப்பதிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இந்த சவாலை எதிர்கொள்ள, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை களனி ஆற்றின் குறுக்கே தற்காலிக் தடுப்பு சுவரை அமைக்கும் பணியை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், நாட்டில் உள்ள முக்கிய நீர்த்தேக்கங்களின் நீரின் கொள்ளளவு பாரியளவில் குறைவடைந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, மலையகத்திலுள்ள முக்கிய நீர்த்தேக்கங்களான லக்சபான, விமலசுரேந்திரா, காசல்ரீ, நேர்டன் மற்றும் மவுசாகலை உட்பட பல்வேறு நீர்த்தேக்களில் நீரின் மட்டம் குறைந்துள்ளது.

அதேபோன்று வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஏனைய மாகாணங்களிலும் இம்முறை மழை வீழ்ச்சி குறைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. காலநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக இவ்வாண்டு வெப்பநிலை அதிகமாக பதிவாகும் ஆண்டாக காணப்படும் எனவும் சூழலியலாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில், நாட்டின் சில பகுதிகளில் இன்று பிற்பகல் மழை அல்லது இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.இதன்படி மேல், தென், சபரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அத்தோடு, மேல், சபரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் பனிமூட்டத்துடன் கூடிய காலநிலை நிலவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a Reply