• Welcome to TamilsGuide
செய்திகள் 1

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு ஆதரவு வழங்கப் போவதில்லை - சுவிட்ஸர்லாந்து அரசாங்கம் தெரிவிப்பு

இலங்கை

அரசாங்கத்தினால் ஸ்தாபிக்கப்படவுள்ள உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு ஆதரவு வழங்கப் போவதில்லை என சுவிட்ஸர்லாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் நடைபெற்ற சுவிட்ஸர்லாந்து நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றிய அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் பெபியன் மொலினா, சுவிட்ஸர்லாந்து அரசாங்கம் இலங்கையுடன் பேணிவரும் தொடர்புகள் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார்.

விசேடமாக இலங்கையில் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கும், இமயமலை பிரகடனத்துக்கும் சுவிட்ஸர்லாந்து வழங்கிய ஆதரவு மற்றும் தமிழர் விவகாரத்தில் சுவிட்ஸர்லாந்து அரசாங்கத்தின் நிலைப்பாடு என்று அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு இவ்வருட அமர்வில் சுவிட்ஸர்லாந்து அரசாங்கம் பதிலளிக்கவேண்டியிருந்தது.

அதற்கிணங்க, இவற்றுக்கு பதிலளித்த சுவிட்ஸர்லாந்து அரசாங்கம், இலங்கையில் சமாதான கொள்கைத்திட்டத்தை சுவிட்ஸர்லாந்து நடைமுறைப்படுத்தி வருவதாகவும் தன்னிச்சையாகத் தடுத்துவைக்கப்பட்டிருப்போர் மற்றும் சிறைச்சாலைகளில் சித்திரவதைகளால் பாதிக்கப்பட்டோருக்கு அவசியமான சட்ட உதவிகளை வழங்குவதற்குத் தேவையான ஒத்துழைப்புக்கள் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களுக்கு வழங்கப்பட்டுவருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

மேலும், கருத்து வெளிப்பாட்டுச்சுதந்நிரம் மற்றும் சட்டத்தின் ஆட்சி என்பவற்றை ஊக்குவிப்பதை இலக்காகக்கொண்டு இயங்கிவரும் அமைப்புக்களுடனும் சுவிட்ஸர்லாந்து அரசாங்கம் இணைந்து பணியாற்றி வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்துக்கு சுவிட்ஸர்லாந்து ஆதரவளித்தது.

இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்திருப்பதுடன், பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் முறையற்ற பிரயோகத்தையும சுவிட்ஸர்லாந்து அரசாங்கம் கண்டித்திருக்கின்றது.

இலங்கை அரசாங்கம் உண்மை, ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு ஒன்றை ஸ்தாபிக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருப்பதை சுவிட்ஸர்லாந்து அவதானித்துள்ளது.

எனினும், இந்த ஆணைக்குழுவுக்கு ஆதரவளிக்கும் உத்தேசம் சுவிட்சர்லாந்து அரசாங்கத்துக்கு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் ஜப்பான் தூதரகம் மற்றும் தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகராலயம் ஆகியவற்றுடன் இணைந்து முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையின் ஓரங்கமாக நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்கும், நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்குமான ஆலோசனைத்திட்டம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சுவிட்ஸர்லாந்து தூதரகத்தினால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.

அதேபோன்று கிடைக்கப்பெற்றுள்ள அனைத்து புகலிடக்கோரிக்கைகளும் ஒவ்வொரு விவகாரங்களாகப் பரிசீலனைக்கு உட்படுத்தப்படுகின்றன. கடந்த ஆண்டு 61 பேர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டதுடன், 21 பேர் தமது சுயவிருப்பின்பேரில் சுவிட்ஸர்லாந்தைவிட்டு வெளியேறினர் என்று அப்பதிலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
 

Leave a Reply