• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சோவின் திருட்டுத்தனத்தை கண்டுபிடித்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 

சினிமா

1969 இன் ஆரம்பத்தில் சிவாஜி நடிப்பில் அஞ்சல்பெட்டி 520 அன்பளிப்பு, காவல் தெய்வம், குருதட்சணை, தங்கச்சுரங்கம் படங்கள் வெளியாகியிருந்த நிலையில், ஆறாவது படமாக ஆகஸ்ட் 8 ஆம் தேதி நிறைகுடம் வெளியானது.

முக்தா சீனிவாசனின் முக்தா ஃபிலிம்ஸ் நகைச்சுவைப் படங்களுக்கு பெயர் போனது. அவர்களுக்கு சிவாஜியை வைத்து படம் செய்ய ஆசை. முக்தா சீனிவாசன் மீது அன்பு கொண்ட சிவாஜியும் கேட்டதும் கால்ஷீட் கொடுத்துவிட்டார். அந்தப் படம்தான் 53 வருடங்களுக்கு முன் 1969 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 8 ஆம் தேதி இதே நாளில் வெளியான நிறைகுடம் திரைப்படம்.

படம்  ஜாலியாக ஆரம்பித்து பிறகு சீரியஸாக போகும். இதில் சிவாஜி மருத்துவக்கல்லூரி மாணவராக நடித்தார். முக்தா ஃபிலிம்ஸ் அவரை வைத்து எடுக்கும் முதல் படம் என்பதாலும், முக்தா சீனிவாசன் மீது கொண்ட அன்பாலும் வழக் கமாக வாங்குவதைவிட குறைவான சம்பளத்தையே சிவாஜி பெற்றுக் கொண்டார்.

சிவாஜியுடன் உயர்ந்த மனிதன் படத்தில் ஜோடியாக நடித்த வாணிஸ்ரீ நிறைகுடத்தின் நாயகி. காதலிக்க நேரமில்லை படத்தின் தெலுங்குப் பதிப்பில் நாயகியின் தோழியாக நடித்த வாணிஸ்ரீயை இயக்குனர் ஜோசப் தளியத் தனது படத்தில் நாயகியாக அறிமுகப்படுத்தினார்.

குறுகிய காலத்திலேயே வாணிஸ்ரீ தமிழின் முன்னணி நடிகையானார். அதற்கு பந்தா இல்லாத அவரது பண்பு முக்கிய காரணம். படப்பிடிப்புத்தளத்தில் அது வேண்டும் இது வேண்டும் என்று கெடுபிடி செய்வதில்லை. பெரும்பாலும் யூனிட்டில் தரும் உணவையே எடுத்துக் கொள்வார். விசேஷமாக வேண்டும் என்று அடம்பிடிப்பதில்லை. நிறைகுடத்தில் இவருக்கு கண் பார்வை போய்விடும். கண் தெரியாதவராக எப்படி நடிக்க வேண்டும் என்று  சிவாஜி கணேசன்தான் சொல்லித்தந்தார் என ஒரு பேட்டியில் வாணிஸ்ரீ குறிப்பிட்டுள்ளார்.

நிறைகுடத்தின் கதை இயக்குநர் மகேந்திரனுடையது. அதற்கு திரைக்கதை, வசனம் சோ எழுதினார். மருத்துவம் சம்பந்தப்பட்ட வசனங்களை ஜகதீசன் என்ற மருத்துவரிடம் கேட்டு எழுதினார் சோ. அப்போது சிவாஜி படம் என்றால், அவர் அதிரடியாக வசனம் பேசும் காட்சிகள் இருக்க வேண்டும் என்று விநியோகஸ்தர்கள் விரும்புவர். அதற்காகவே சமூக கதை கொண்ட படங்களிலும், சிவாஜி நாடகத்தில் நடிப்பது போல் காட்சி வைத்து, அதில் சிவாஜிக்கு சரித்திர வேடம் தந்து படபட வசனங்கள் பேச வைத்துவிடுவார்கள்.

நிறைகுடத்திற்கும் அப்படியொரு காட்சியை கேட்டிருக்கிறார்கள். திருமணமானதும் மனைவி வாணிஸ்ரீயை சிவாஜி வர்ணிப்பது போல் காட்சி. அதற்காக சோ எழுதிய வசனங்களை இயக்குநர் முதற்கொண்டு அனைவரும் பாராட்டினர். படப்பிடிப்புக்கு வந்த சிவாஜியும் அந்த வசனங்களை மனப்பாடம் செய்தார்.  ஆனால், அவருக்கு சந்தேகம். சோவை அழைத்து, நீதான் இந்த வசனத்தை எழுதினாயா என்று கேட்டிருக்கிறார். சோவும் ஆம் என்றிருக்கிறார். படவா உண்மையைச் சொல்லு என்று சிவாஜி மறுபடி கேட்க, குறிப்பிட்ட அந்தக் காட்சிக்கான வசனத்தை மட்டும் கவிஞர் கண்ணதாசனிடம் எழுதி வாங்கியதாக சோ கூறியுள்ளார். இந்தத் திருட்டுப்பய என்ன பண்ணிருக்கான்  பார்த்தீங்களா என்று சிவாஜி சொன்ன பிறகே, இயக்குநர் முதற்கொண்டு அனைவருக்கும் விஷயம் தெரிந்திருக்கிறது.

நிறைகுடம் படத்துக்கு வி.குமார் இசையமைத்தார். சிவாஜி நடிப்பில் அவர் இசையமைத்த ஒரே படம் அதுதான். 1969 இன் ஆரம்பத்தில் சிவாஜி நடிப்பில் அஞ்சல்பெட்டி 520 அன்பளிப்பு, காவல் தெய்வம், குருதட்சணை, தங்கச்சுரங்கம் படங்கள் வெளியாகியிருந்த நிலையில், ஆறாவது படமாக ஆகஸ்ட் 8 ஆம் தேதி நிறைகுடம் வெளியானது. இதையடுத்து அதே வருடம் சிவாஜி நடிப்பில் தெய்வமகன், சிவந்த மண் படங்கள் வெளியாகின. இத்தனை படங்களுக்கு நடுவிலும் நிறைகுடம் நன்றாக ஓடி வெற்றியை பதிவு செய்தது.

நன்றி  திருமிகு vinothini andisamy

Leave a Reply