• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தாலி வாங்க பணம் கேட்ட வசனகார்த்தா.. 

சினிமா

தாலி வாங்க பணம் கேட்ட வசனகார்த்தா.. தான் கொடுக்காமல் அண்ணனை வைத்துக் கொடுத்த எம்.ஜி.ஆர். இப்படி ஒரு சென்டிமெண்ட்டா?

இந்தியர்கள் எப்பொழுதுமே சென்ட்டிமென்ட்டுக்கு அடிமையானவர்கள். அதிலும் குறிப்பாக தமிழர்கள் தங்கள் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் சென்டிமென்ட் பார்த்தே ஒவ்வொரு விஷயத்தையும் செய்வது வழக்கம். இந்தப் பழக்கம் நமது மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கும் இருந்தது. அவரது புரடக்சன் கம்பெனியின் ஆஸ்தான வசனகார்த்தாவான இரவீந்தருக்கு திருமண சமயத்தில் எம்.ஜி.ஆர் தான் பணம் கொடுக்காமல் அண்ணனை வைத்துக் கொடுத்திருக்கிறார். ஏன் தெரியுமா?

எம்.ஜி.ஆரின் சொந்தப்பட நிறுவனமான எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் கதை இலாகாவில் அவரது மனம் கவர்ந்த கதாசிரியராக இருந்தவர் தான் ரவீந்தர். ஆனால் ரவீந்தர் என்பது சொந்தப் பெயரல்ல. எம்.ஜி.ஆரால் பிரியத்துடன் சூட்டப்பட்ட பெயர். உண்மைப் பெயர் ஏ.ஆர்.செய்யது காஜா முகையதீன். நாகூரைச் சொந்த ஊராகக் கொண்ட காஜா முகைதீனுக்கு வங்கக் கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் இலக்கியப் படைப்புகளில் கொள்ளைப் பிரியம். இதை அவரது வாய்வழிக் கேட்டறிந்த எம்.ஜி.ஆர், அவருக்கு ‘ரவீந்தர்’ எனத் திரையுலக பெயர் சூட்ட அதுவே நிரந்தரப் பெயராய் மாறிப் போனது.

நடிகர் ‘டணால்’ தங்கவேலு, ‘நாம் இருவர்’ புகழ் சி.ஆர்.ஜெயலட்சுமி இணைந்து நடித்த ‘மானேஜர்’ எனும் மேடை நாடகத்திற்கு கதை வசனம் எழுதி அதன் வழி எம்.ஜி.ஆரின் அறிமுகத்தைப் பெற்றார். எம்.ஜி.ஆர் நடித்த ‘இன்பக் கனவு’, ‘அட்வகேட் அமரன்’ ஆகிய இரண்டு நாடகங்களுக்கு வசனம் எழுதியுள்ளார்.

திரையுலகில் இவர் முதன் முதலில் கதை-வசனம் எழுதிய படம் ‘குலேபகாவலி’. அந்தப் படத்திற்கு பிரபல கதை வசனகர்த்தா தஞ்சை ராமைய்யாதாம் கதை வசனம்எழுதியிருந்த காரணத்தால் புதியவரான இவரது பெயர் டைட்டிலில் இடம் பெறவில்லை. பின் 1958-ல் வெளிவந்த எம்.ஜி.ஆரின் ‘நாடோடி மன்னன்’தான் முதன் முதலில் இவரது பெயரை வெள்ளித் திரையில் வெளிச்சப்படுத்தியது. இந்தப் படத்திற்கும் இருவர் கதை வசனம் எழுதினர். கவியரசு கண்ணதாசன் பெயரோடு இவர் பெயரும் சேர்ந்து இடம் பெற்றது.

எம்.ஜி,ஆரை எந்த நேரத்திலும் அவரது வீட்டில் சந்திக்கும் உரிமை பெற்றிருந்தவர்களில் ஒருவராய் திகழ்ந்தார் ரவீந்தர்.

ஒருமுறை ரவீந்தர் தம் திருமணத்துக்கு அழைக்கச் சென்றபோது ‘என்ன வேண்டும்?’ என்று உரிமையோடு எம்.ஜி.ஆர் கேட்டிருக்கிறார். இஸ்லாமியரான ரவீந்தர் கரியமணி சங்கிலி செய்யப் பணம் தாருங்கள் என கேட்டுள்ளார் ரவீந்தர். ரவீந்தர் விரும்பிய வண்ணம் தன் மூத்த சகோதரர் கையால் பணம் வழங்க ஏற்பாடு செய்தார் எம்.ஜி.ஆர்.

ரவீந்தருக்கு தயக்கம். ‘என்ன விஷயம்?’ என்றார் எம்.ஜி,ஆர். ‘உங்க கையால் பணத்தை தரக் கூடாதா?’ என்று ரவீந்தர் கேட்டதற்கு ‘புரியாமல் பேசாதே! மாங்கல்ய நகைக்குரிய பணத்தை புத்திர பாக்கியம் உடையவர் கையால்தான் பெற வேண்டும்’ என்று எம்.ஜி.ஆர் கூறினாராம். அரசியலில் திருப்புமுனை ஏற்பட்டு எம்.ஜி.ஆர் முதலமைச்சரான பிறகும் அவரைச் சந்திப்பதில் ரவீந்தருக்கு எவ்வித இடையூறும் ஏற்படவில்லை.

தமிழச்சி கயல்விழி

Leave a Reply