• Welcome to TamilsGuide
செய்திகள் 1

திறமையால் திரையில் ஜொலிக்கும் நாசரின் சினிமா பயணம்!

சினிமா

முதல் படமே இப்படி ஒரு கேரக்டரா..!! திறமையால் திரையில் ஜொலிக்கும் நாசரின் சினிமா பயணம்!

ஒரு நடிகர் வில்லானாக நடித்து, பின் ஹீரோவாகி, இடையில் காமெடிகளில் கலக்கி, பின் குணச்சித்திர வேடங்களில் நடித்து மக்களின் மனதைக் கவர்ந்து வருகிறார் என்றால் அது நடிகர் நாசர் தான். எந்தக் கேரக்டர் கொடுத்தாலும் அதில் நாசரின் முத்திரை இருக்கும். தேவர் மகனில் கெத்து காட்டும் வில்லனாக, எம் மகனில் முரட்டு அப்பாவாக, அவ்வை சண்முகியில் காமெடியில் கலக்குபவராக, மின்சாரக் கனவில் மாற்றுத் திறனாளியாக நாசர் நடித்த கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும் அவரின் நாடி நரம்பெல்லாம் நடிப்பு ஊறியதை எடுத்துக் காட்டுகிறது.

ஆனால் இவரின் முதல்படத்தில் இவருக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரம் என்ன தெரியுமா? இயக்குநர் சிகரம் பாலசந்தர் உருவாக்கிய பல நூறு ஹீரோக்களில் நாசரும் ஒருவர். சென்னை கிருத்துவக் கல்லூரியில் இளங்கலை தாவரவியல் பட்டப்படிப்பும் படித்தார்,வருமானத்துக்காக தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் சேவைப்பகுதியில் பணியாற்றிய நாசர்  சினிமாவுக்கு முயன்ற அதே நேரம் கதை, கவிதைகள் எழுதி பத்திரிகைகளுக்கு அனுப்பியுமுள்ளார். அவற்றில் சில பிரசுரமாகியிருக்கிறது.

பின்னர் சென்னை திரைப்படக் கல்லூரியில் பயின்று நடிப்புத்துறையில் பட்டம் பெற்றார். இதன் முன்னர், தென்னிந்திய திரைப்பட சங்கத்தின் நடிப்புப் பயிற்சி மையத்திலும் பயிற்சி பெற்றார்.அவரின் திறமையைக் கண்ட பாலச்சந்தர் தன் 1985 ஆம் ஆண்டு வெளியான கல்யாண அகதிகள் படத்தில் குடிப்பழக்கத்தால் மனைவியை [ஒய்.விஜயா] தன் நண்பனுக்கே கூட்டிகொடுக்கும் ஒரு இழிபிறவி கதாபாத்திரத்தில் இவரை அறிமுகம் செய்தார்.

நாசரின் திறமை மீது அபார நம்பிக்கை வைத்து அவர் பெயரை சினிமாவுக்காக மாற்றாமல் தன் கல்யாண அகதிகள் படத்தின் டைட்டில் ஸ்க்ரோலில் இவரை நாசர் முகம்மது [அறிமுகம்] என்றே அறிமுகம் செய்திருந்தார் கே. பாலச்சந்தர். மகேந்திரனின் தொலைக்காட்சிப் படமான காட்டுப்பூக்கள் மற்றும் சேனாதிபதி இயக்கிய பனகாடு ஆகிய படங்கள் இவரது நடிப்புத்திறனை உலகிற்கு பறை சாற்றியது.

1995இல் அவதாரம் என்ற திரைப்படத்தை தாமே இயக்கி நடித்தார். தேவதை என்ற படத்தை 1997இல் இயக்கி நடித்துள்ளார். தற்போது தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவராக கடந்த 2015 முதல் பணியாற்றி வரும் நாசர் நடிப்பிற்கும் ஓய்வு கொடுக்காமல் தொடர்ந்து பல படங்களைக் கொடுத்து வருகிறார்.

தமிழச்சி கயல்விழி
 

Leave a Reply