• Welcome to TamilsGuide
செய்திகள் 1

எல் சல்வடோர் - ஆர்பாட்டமில்லாத சர்வாதிகாரி

இலங்கை

உலகம் பல சர்வாதிகாரிகளைப் பார்த்திருக்கிறது. தற்போதும் பார்த்த வண்ணம் உள்ளது. அடாவடியாக ஆட்சியைக் கைப்பற்றி சர்வாதிகார ஆட்சியை மேற்கொண்டு வருவோர் ஒருபுறம் இருக்க, ஜனநாயகத் தேர்தல் மூலம் மக்கள் வாக்குகளைப் பெற்று, ஆட்சிக் கதிரையில் அமர்ந்த பின்னர் தம்மைச் சர்வாதிகாரிகளாக மாற்றிக் கொண்டோரும் உள்ளனர். ஒரு கட்டத்தில், வாக்களித்த மக்களின் வெறுப்புக்கு ஆளாகும் சர்வாதிகாரிகள் வரலாற்றின் குப்பைத் தொட்டிக்குள் வீசப்படுவதையும் பார்த்திருக்கிறோம். எனினும் சர்வாதிகாரிகள் எத்தகைய வழியில் ஆட்சியதிகாரத்தைப் பிடித்துக் கொண்டாலும் தாம் சர்வாதிகார ஆட்சி செய்கிறோம் என்பதை ஒத்துக் கொள்வதும் இல்லை. தம்மைச் 'சர்வாதிகாரி' என அழைத்துக் கொள்வதும் இல்லை, அவ்வாறு அழைக்கப்படுவதை விரும்புவதும் இல்லை.

ஆனால், முதல் தடவையாக ஒருவர் தன்னைத் தானே சர்வாதிகாரி எனப் பிரகடனம் செய்துகொண்ட சம்பவம் மத்திய அமெரிக்க நாடான எல் சல்வடோரில் நடந்துள்ளது. நடப்பு அரசுத் தலைவரான நயிப் புகெலே சமூக ஊடகமான எக்ஸில் தனது பெயரோடு 'உலகின் ஆர்ப்பாட்டமில்லாத அல்லது அமைதியான சர்வாதிகாரி'  (The coolest dictator in the world) என்ற அடைமொழியையும் இணைத்துள்ளார்.

யார் இவர், எதனால் தன்னை சர்வாதிகாரி என அழைத்துக் கொள்கிறார்?

6.5 மில்லியன் மக்கட்தொகையைக் கொண்ட எல் சல்வடோர் வட கிழக்கே ஹொன்டூராஸையும் தென் மேற்கே குவாதமாலாவையும், தெற்கே பசுபிக் சமுத்திரத்தையும் எல்லைகளாகக் கொண்ட நாடு. 19ஆம் நூற்றாண்டின் இறுதிக் கூறில் தொடங்கி 20ஆம் நூற்றாண்டின் பெரும்பாலான பகுதி வரை அரசியல் ஸ்திரமின்மையை அனுபவித்த இந்த நாட்டில் 1979 முதல் 1992 வரை நடைபெற்ற உள்நாட்டுப் போர் உலகப் பிரசித்தமானது. போரின் முடிவில் செய்து கொள்ளப்பட்ட சமாதான ஒப்பந்தத்தைத் தொடர்ந்து நாட்டில் அமைதியும் ஜனநாயகமும் திரும்பியது.

 
1992 முதல் 2019 வரையான காலப்பகுதியில் தேசிய குடியரசுக் கூட்டமைப்புக் கட்சியும் முன்னாள் போராளிக் குழுவைப் பிரதிநிதித்துவம் பரமுண்டோ மார்ட்டி தேசிய விடுதலை முன்னணிக் கட்சியுமே எல் சல்வடோரின் அரசியலில் கோலோச்சின. புகெலேயின் வருகை இந்த நிலையை மாற்றியமைத்தது. 2019 யூன் முதலாந் திகதி நடைபெற்ற அரசுத் தலைவர் தேர்தலில் தற்போதைய அதிபர் புகெலே முதல் தடவையாக வெற்றி பெற்றார். தலைநகர் சான் சல்வடோரின் மாநகர பிதாவாக விளங்கிய அவர் 53 விழுக்காடு வாக்குகளைப் பெற்றிருந்தார். தேசிய ஒற்றுமைக்கான மாபெரும் கூட்டமைப்பு என்ற கட்சியின் சார்பில் போட்டியிட்டு அவர் வெற்றி அடைந்திருந்தார்.

ஊழல் அரசியல்வாதிகளிடம் இருந்து நாட்டை மீட்டு நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் பாரிய சவாலோடு நாட்டில் அராஜகத்தில் ஈடுபட்டுவந்த பல்வேறு ஆயுதக் குழுக்களின் பிடியில் இருந்த மக்களை மீட்க வேண்டிய கடப்பாடும் அவர் முன்னர் இருந்தது. இரும்புக் கரம் கொண்ட தனது ஆட்சியால் அவர் இரண்டையும் ஓரளவு வெற்றி கொண்டுள்ளார் என்பதையே அவரது தற்போதைய தேர்தல் வெற்றி சுட்டி நிற்கிறது.

அரசுத் தலைவர், துணைத் தலைவர் மற்றும் 60 நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவதற்கான தேர்தல் எல் சல்வடோரில் பெப்ரவரி 4ஆம் திகதி நடைபெற்றது. அரசுத் தலைவர் தேர்தலில் நயிப் புகெலே உட்பட மூவர் போட்டியிட்டனர். 70.25 விழுக்காடு வாக்குகள் இதுவரை எண்ணப்பட்ட நிலையில் 83.14 விழுக்காடு வாக்குகளை புகெலே பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. துணைத் தலைவராகப் போட்டியிட்ட பீலிக்ஸ் உல்லோவா மீண்டும் வெற்றி பெற்றுள்ளதுடன் 60 ஆசனங்களைக் கொண்ட நாடாளுமன்றில் 58 ஆசனங்களையும் புகெலேயின் கட்சி கைப்பற்றிச் சாதனை படைத்துள்ளது.
 
மூன்று பத்தாண்டுகளாக அரசியலில் கோலோச்சிக் கொண்டிருந்த கட்சிகளை ஓரங்கட்டிவிட்டு அதிபர் தேர்தலில் முதல் தடவை வெற்றிபெற்ற ஒருவர் 5 ஆண்டுகளின் பின்னர் தேர்தலில் மீண்டும் வெற்றி பெறுவதென்பது சாதனையே. அதனை விடவும் சாதனை 80 விழுக்காட்டுக்கும் அதிகமான வாக்காளர்களின் ஆதரவைப் பெற்று வெற்றி பெறுவது. தேர்தல் முடிவுகளை அரசாங்க தேர்தல் திணைக்களம் இதுவரை உறுதிப்படுத்தி வெளியிட்டிருக்காத போதிலும் உலக நாடுகளின் தலைவர்கள் புகெலேக்கு தமது வாழ்த்துகளைத் தெரிவிக்கத் தொடங்கி விட்டனர்.

அபரிமிதமான ஆதரவு உள்நாட்டில் புகெலேக்குக் கிடைக்க முதன்மைக் காரணம் மக்களை அச்சுறுத்திக் கொண்டிருந்த ஆயுதக் குழுக்களுக்கு எதிராக அவர் மேற்கொண்ட கடுமையான நடவடிக்கைகளே.
 
புள்ளி விபரங்களின் படி ஒரு இலட்சம் பேருக்கு 107 என இருந்த கொலைகளின் எண்ணிக்கை புகெலே மேற்கொண்ட நடவடிக்கைகளின் பின்னர் 7.8 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் அதிக கொலைகள் நடைபெறும் நாடாக விளங்கிய எல் சல்வடோர், தற்போதைய நிலையில் மத்திய அமெரிக்க நாடுகளில் ஆகக் குறைந்த கொலைகள் நடக்கும் நாடாக விளங்குகின்றது. அதேவேளை, நாட்டின் வயதுவந்த குடிமக்களில் 2 விழுக்காட்டினர் சிறைகளில் அடைக்கப்பட்டு உள்ளனர். குற்றச் செயல்களோடு சம்பந்தப்பட்டவர்கள், அவர்களுக்கு உதவியவர்கள் என்ற அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டு இருந்தாலும் மனித உரிமை அமைப்புகளின் கண்டனத்தை இது சந்தித்துள்ளது. இன்றைய நிலையில் உலகில் அதிக எண்ணிக்கையான குடிமக்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாடுகளுள் ஒன்றாக எல் சல்வடோர் விளங்குகின்றது.

தன்மீது வைக்கப்படும் விமர்சனங்களை இலகுவாகப் புறந்தள்ளிவிட்டுக் கடந்து செல்லும் புகெலே தனது பணியை அடுத்த பதவிக் காலத்திலும் அதே கடுமையோடு தொடரப் போகின்றார் என்பதை தனது ஆதரவாளர்கள் முன்னால் உரையாற்றியபோது வெளிப்படுத்தினார். அரசுத் தலைவர் மாளிகை உப்பரிகையில் இருந்து பேசிய அவர் ஆயுதக் குழுக்களுக்கு எதிரான தனது நடவடிக்கைகள் தொடரும் என்பதை உறுதிப்படுத்தியதுடன், தனது பணியில் தன்னோடு இணைந்து கொள்ளுமாறு ஊடகவியலாளர்களிடமும் கோரிக்கை விடுத்தார்.

வன்முறையாளர்களின் பிடியில் சிக்கித் தவிக்கும் மத்திய அமெரிக்க நாடுகளுக்கு எல் சல்வடோர் ஒரு முன்மாதிரியாக விளங்கினாலும், இத்தகைய முன்னுதாரணம் சரியா என்ற கேள்வியில் உள்ள நியாயத்தை நிராகரிக்க முடியவில்லை.
 
கண்ணை விற்றுச் சித்திரம் வாங்குவதற்கு ஒப்பானது எல் சல்வடோரின் தற்போதைய நிலவரம் என்கின்றன மனித உரிமைகள் அமைப்புகள். ஆனால் நிம்மதியான வாழ்க்கைக்காக எந்தவொரு இழப்பையும் சந்திக்கத் தயார் என நினைக்கின்றனர் அந்த நாட்டின் பெரும்பாலான குடிமக்கள். இதில் யார் தரப்பில் நியாயம் இருக்கிறது என்பதைச் சொல்ல இடையில் நாம் யார்?

இன்று புகெலேக்குப் பேராதரவு வழங்கித் தலையில் வைத்துத் தூக்கிக் கொண்டாடும் மக்கள் நாளைக்குக் 'குத்துது, குடையுது' என்று கூறி அவர் மீது விமர்சனம் வைத்தாலும் அதற்கு அவர்களே முழுப் பொறுப்பு என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

சுவிசிலிருந்து சண் தவராஜா
 

Leave a Reply