• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சிகிச்சை தொடங்கியது... மன்னர் சார்லஸ் எப்படி இருக்கிறார் - முதல் முறையாக மனம் திறந்த ராணியார் கமிலா 

மன்னர் சார்லஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதல் முறையாக ராணியார் கமிலா மன்னர் சார்லஸ் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளார்.

தெற்கு இங்கிலாந்தில் அமைந்துள்ள சாலிஸ்பரி கதீட்ரலில் முன்னெடுக்கப்பட்ட தொண்டு நிறுவனங்கள் சார்பிலான நிகழ்ச்சி ஒன்றில் ராணியார் கமிலா கலந்து கொண்டுள்ளார்.

இந்த நிகழ்வில் பேசிய அவர், பொதுமக்கள் அளித்துவரும் ஆதரவுக்கு, மன்னர் சார்லஸ் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டார். தற்போதைய சூழ்நிலையில் அவர் மிகவும் சிறப்பாக செயல்படுகிறார் என்றும் கமிலா தெரிவித்துள்ளார்.

அவருக்கு புற்றுநோய் உறுதி செய்யப்பட்டதை மக்களுக்கு தெரியப்படுத்திய பின்னர், கடிதங்கள் மற்றும் குறுந்தகவல்களால் ஆறுதல் வார்த்தைகளை தெரியப்படுத்திய மக்களின் செயலை அவர் பெருமையுடன் குறிப்பிட்டதாகவும் கமிலா தெரிவித்துள்ளார்.

முன்னதாக பட்டத்து இளவரசரான வில்லியம், புதன்கிழமை தமது மனைவி மற்றும் தந்தை தொடர்பில் நலம் விசாரித்த மொத்த பிரித்தானிய மக்களுக்கும் நன்றி தெரிவித்திருந்தார்.

ஜனவரி 16ம் திகதி, 42 வயதான கேட் மிடில்டன் வயிற்று அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். தொடர்ந்து இரண்டு வாரங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அதே வேளை, மன்னர் சார்ஸ் புரோஸ்டேட் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். இதன்போது முன்னெடுக்கப்பட்ட விரிவான பரிசோதனையில் தான், மன்னருக்கு புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டு, மருத்துவர்களால் உறுதி செய்யப்பட்டது.

தற்போது மன்னருக்கு புற்றுநோய் சிகிச்சை தொடங்கப்பட்டுள்ள நிலையில், வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன், ஈஸ்டர் பண்டிகை முடியும் மட்டும் ஓய்வில் இருப்பார் என்றே அரண்மனை வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இதனிடையே, அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வசிக்கும் இளவரசர் ஹரி, உடனடியாக லண்டன் திரும்பியதுடன், தந்தையிடம் நலம் விசாரித்துவிட்டு அமெரிக்கா திரும்பியுள்ளார். 
 

Leave a Reply