• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சுடலை மாட சாமிக்கு அன்றைக்கு சமூக ஊடகத் தளங்கள் கிடைத்திருந்தால் காந்தாராவை விஞ்சி நின்றிருப்பான்!

சினிமா

'சின்னத்தாயி!'-1992-ஆம் அண்டு வெளியான திரைப்படம்.எல்லோராலும் வரவேற்பைப் பெற்ற திரைப்படம்.வணிகரீதியான வரவேற்பைப் பெற்ற திரைப்படமும் கூட.அதனால்தான்,இந்தப் படத்தின் இயக்குனரான எஸ்.கணேஷ்ராஜ் அவர்களுக்கு உடனடியாக அடுத்த பட வாய்ப்பும் கிடைத்தது.அந்தப் படத்தின் பெயர்,'மாமியார் வீடு'.
இரண்டு திருடர்களைப் பற்றிய கதை என்பதால்,இந்த டைட்டில்.அந்தப் படமும் நன்றாகத்தான் இருக்கும்.ஏனோ,வணிகரீதியான வெற்றியை அடையவில்லை.
ஓரளவிற்கு அன்றைக்கு பிரபல நாயகர்களாக இருந்த சரவணனும்,செல்வா-வும் இத்திரைப் படத்தில் நடித்திருந்தனர்.அன்றைக்கு புகழின் உச்சியில் இருந்த பிரபுவும் கார்த்திக்கும் நடித்திருந்தால் இந்தப் படமும் மிகப் பெரிய அளவில் வெற்றியை அடைந்திருக்கும்.
இந்தப் படத்திற்குப் பிறகு,'பரணி',எனும் திரைப்படத்தை நடிகர் நெப்போலியனை நாயகனாக போட்டு தொடங்கினார்.ஏனோ,முழுமை பெறவில்லை.
இவர்,கரிசல்காடுகள்,அக்கினி அத்தியாயங்கள்,கவசம் ஆகிய மூன்று சிறுகதை தொகுதிகளை எழுதியிருக்கிறார்.
'பொட்டல்'எனும் தலைப்பில் நாவல் ஒன்றையும் எழுதியுள்ளார்.பரிசுகளையும் பெற்றுள்ளார்.
இயக்குனர் எஸ்.கணேஷ்ராஜ் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்தும் போனார்.
அவருடைய,'சின்னத்தாயி',
திரைப்படம் அவருடைய நினைவாக எப்பொழுதும் பேசப்பட்டுக் கொண்டேயிருக்கும்.
அப்பொழுதே,எனக்கு மிகவும் பிடித்த படத்தைப் பற்றி விமர்சனம் எழுதி,அத்திரைப்படத்தின் இயக்குனர்களுக்கு அனுப்புவதை வழக்கமாக வைத்திருந்தேன்
'மகாநதி',படத்தைப் பற்றி நீண்ட விமர்சனக் கடிதம் எழுதி கமல் அவர்களுக்கும், சந்தானபாரதி அவர்களுக்கும் எழுதியுள்ளேன்.அந்தக் கடிதத்தின் சாராம்சத்தை முகநூலிலும் பதிவிட்டுள்ளேன்.
கிழக்குச்சீமையிலே படத்தைப் பற்றி இயக்குனர் பாரதிராஜா அவர்களுக்கும் எழுதினேன்.அந்த வகையில்,இந்தப் படத்தின் இயக்குனருக்கும் மிக நீண்ட விமர்சனக் கடிதத்தை எழுதினேன்.இவரிடம் உதவி இயக்குனராக சேரவேண்டும் என்கிற எண்ணத்தோடு.
எனது உறவினர் ஒருவர் மூலமாக இவரிடம் நேரில் சந்தித்து வாய்ப்பும் கேட்டேன்.விமர்சனம் நன்றாக இருந்ததாகவும் சொன்னார்;பாராட்டினார்.',தொடர்பிலேயே இருங்கள்',என்றார்.என்னால் தொடர்ந்து சென்னையிலேயே இருக்க முடியாத சூழலால் சொந்த ஊருக்கே சென்று விட்டேன்.தொடர்ந்து அவரை சந்திக்க முடியாமலும் போய்விட்டது.அதன்பிறகு,சில வருடங்கள் சென்னைக்கு வந்து இயக்குனர் பாலா சாரிடம் சேர்ந்தது தனிக்கதை.
இவர்,பாராதிரஜா அர்கள்,மனோஜ்குமார் -போன்றோரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்ததாக சொல்கிறார்கள்.உறுதியா தெரியலே.
'சின்னத்தாயி,'படத்தைப் பார்க்கும் பொழுது பாரதிராஜா அவர்களின் படத்தைப் பார்க்கும் உணர்வே ஏற்படும்.படத்திற்கான பக்கபலம் இசைஞானியின் பின்னணி இசையும் பாடல்களும்தான்.
'கோட்டையை விட்டு வீட்டுக்குப் போகும் சுடலை மாடசாமி', எனும் பாடல் மூன்று முறை வெவ்வேறு சூழலில் ஒலிக்கும் பாடலாகும்.பாடலும் பாடலை படமாக்கப்பட்ட விதமும் மிகப் பிரமாதமா இருக்கும்.ஒளிப்பதிவு விஸ்வம் நட்ராஜ்.இதே பாடல் சிறுவர்களாக சேர்ந்து பாடலாகவும் அமைக்கப்பட்டிருக்கும்.

சுடலை மாடசாமியின் வீச்சு அந்த அளவிற்கு சிறுவர்களின் மனதிலும் ஆழப்பதிந்து உள்ளதை காண்பிக்கவே இப்பாடல்.
சின்னத்தாயின் தாய் ராசம்மா ஒரு பாடகனால் ஏமாற்றப்பட்டவள்.தகப்பன் யார் என்றே தெரியாமலேயே வளர்கிறாள் சின்னத்தாயி.தன்னைப் போல் மகளின் வாழ்வும் திசைமாறிப் போய்விடக்கூடாது என்பதற்காக பொத்தி பொத்தி வளர்க்கிறாள் தாய் ராசம்மா.இருந்தும் சின்னத்தாயின் மனம் அந்த ஊர் சாமியாடி வீரமுத்து நாயக்கர்(வினுசக்ரவர்த்தி)குடும்பத்தின் மீது சாய்ந்து விடுகிறது.அவள் அவனைத் தேடி போகவில்லை.அவன்தான் அவளை வலுக்கட்டாயமாக தன் பக்கம் திருப்புகிறான்.
தன்மகளின் வயிற்றில் சாமியாடி மகனின் வாரிசு வளர்வதை அறிந்து நியாயம் கேட்பதற்காக துடியோடு வரும் சாமி என்பதை அறிந்தும் எதிர்த்து நின்று தன் மகளுக்கு நீதி கேட்டு நிற்கிறாள் ராசம்மா.சாமியாடியாக இருந்தாலும் அந்த சாமிக்குள் இருப்பது  அல்ப மனிதனின் மனம்தானே!
சாமுண்டியிடம் (நெப்போலியன்)வப்பாட்டியாக இருப்பவளின் மகளை ,அந்த மனம் ஏற்றுக்கொள்ளுமா?சாமுண்டி ராசம்மாவின் மகளையும் பெண்டாள நினைக்கிறான்;முயற்சிக்கிறான்.அவனிடமிருந்தும் தன் மகளை அவள் காப்பாற்ற வேண்டும்.இப்படி,ராசம்மாவின் வாழ்க்கை முழுவதுமே போராட்டக்களம்தான்.
தனது தாயின் நிலை தனக்கு வரக்கூடாது என நீதி கேட்டு போராடுகிறாள் சின்னத்தாயி.பரிதாபத்துக்குரிய அந்த சின்னத்தாயின் வாரிசுக்காவது தகப்பன் பேர் தெரிந்ததா?என்பதுதான் க்ளைமாக்ஸ்.தான் பொறந்த பொழப்பு மாதிரி தன் குழந்தைக்கும் வரக்கூடாது என்பதே சின்னத்தாயின் எண்ணமும்.ஊரையே எதிர்த்து நிற்கிறாள் சின்னத்தாயி!
'சின்னத்தாயி',இசைஞானி இளையராஜா அவர்களின் தாயார் பெயர்.அதனால் கூட இந்தப் படத்திற்கான ஈடுபாடு அவருக்கு அதிகமாக இருந்திருக்கும்.தன்னுடைய முதல் படத்தில் அவருடைய தாயாரின் பெயரையே படத்திற்கான தலைப்பை வைத்து அவரின் மனதில் இடம் பெற்றதும் புத்திசாலித்தனம்தான்.
ராதாரவி கேரக்டர் ஒரு நாயகனுக்குரிய கேரக்டர்தான்.சில காட்சிகள் மட்டும்தான் என்றாலும் கதாபாத்திரத்திற்கான கம்பீரத்திற்கு குறையிருக்காது.
நெப்போலியனின் கதாபாத்திரம் மிகவும் வலுவான எதிர்மறை கதாபாத்திரம்.தான் செய்யும் தவறுகளுக்கு சிறிதும் வருத்தப்படாத கல்நெஞ்சம் படைத்த ஈவிரக்கமற்ற கதாபாத்திரம்.
ஆண்களின் சுகத்துக்காக மட்டுமே படைக்கப்பட்டவள்தான் பெண் இனம் என்பது அவனுடைய எண்ணம்.இக்கதாபாத்திரத்தை மிக சிறப்பாக செய்திருப்பார் நெப்போலியன்.அவருடைய உயரமே அவருடைய நடிப்பிற்கான பலம்தான்.
இந்தப் படத்துலே எனக்கு மிகவும் பிடித்த அற்புதமான  வசனம் ஒண்ணு இருக்கு.பொதுவா,ஊரைச்சுற்றி வரும் சாமியாடி முன் எவருமே வரக்கூடாது என்பது ஊர்க்கட்டுப்பாடு.அந்தக்கட்டுப்பாட்டையும் மீறி தாயான ராசம்மாவும் ,சின்னத்தாயிம் சுடலைமாட சாமியை எதிர்த்து நின்று கேள்வி கேட்பார்கள்.
சாமியாடியாக நிற்கும் தன் காதலனிடம் சின்னத்தாயி,'நீங்க சாமியா மனுஷனான்னு எனக்குத் தெரியாது.ஆனா,என்னைப் பொறுத்த வரைக்கும் வாழ வைக்கிற எல்லா ஆம்பளைங்களுமே தெய்வம்தான்.",என்பாள்
உக்கிரத்தில் உள்ள அந்த தெய்வத்தின் வடிவில் உள்ள அந்த சாமியின் பதில்தான் என்ன?அதுதான் க்ளைமாக்ஸ்.
'அரும்பு அரும்பா சரம் தொடுத்த அழகு மலர் மாலையிது!'-எனும் பாடல் தன்னுடைய வீட்டில் தனித்து விடப்பட்ட சின்னத்தாயி தன்னுடைய தாயை நினைத்து அவளுடைய பார்வையில் Montages பாடலாக உருவாகியிருக்கும்.மொத்தக் கதையையுமே இந்தப் பாடலிலேயே சொல்லியிருப்பார் இயக்குனர்.பாடலை சுசிலா அவர்கள் பாடியிருப்பார்கள்.
'நான் ஏரிக்கரை மேலிருந்து எட்டுத்திசை பார்த்திருந்து ஏந்திழைக்கு காத்திருந்தேன் காணலே',எனும் பாடலை ஜேசுதாஸ்-சுவர்ணலதா குரல்களில் கேட்க அப்படியொரு சுகமான அனுபவமாக இருக்கும்.பாடல்கள் அனைத்துமே கவிஞர் வாலி அவர்கள்தான் எழுதியிருப்பார்.
சாமியாடி கதாபாத்திரத்திற்கு வினுசக்ரவர்த்தி அவர்கள் அப்படியொரு பொருத்தம்.அவருடைய கருத்த உருவமும் குரலும் அக்கதாபாத்திரத்தை பெருமைப்படுத்தியிருக்கும்.
சபீதா ஆனந்த் ,சோகக்கதாபாத்திரத்திற்கு என்றே பிறந்தவர் மாதிரி,இவர் நடித்துள்ள கதாபாத்திரங்கள் அனைத்துமே சோகமயமாகத்தான் இருக்கும்.அந்தக் காலத்து சௌகார்ஜானகி மாதிரி இவர்.சிலரின் முகஅமைப்பே அப்படித்தான்.சோனியா அகர்வாலின் முகமும் அந்த வகையை சார்ந்ததுதான்.இவர் சிரித்தாலும் அதில் ஒரு சோகம் இருக்கும்.
நடிகர் விக்னேஷிற்கு இதுதான் முதல் படம்.நன்றாகவே நடித்திருப்பார்.நாயகியாக நடித்துள்ள பத்மஸ்ரீக்கும் இதுதான் முதல் படம்.இவர்தான் பின்னாளில் பொற்காலம் திரைப்படத்தில் முரளிக்கு தங்கையாக நடித்திருப்பார்.
இந்தப் படத்தில் அமைக்கப்பட்ட சண்டைக்காட்சி ஒன்று மிக யதார்த்தமாக படமாக்கப்பட்டிருக்கும்.
சாமுண்டிக்கும்(நெப்போலியன்)அவருடைய மச்சினனுக்கும் நடக்கும் சண்டைக்காட்சியானது ஒரு கிராமத்தில் உண்மையாக நடக்கும் சண்டைக்காட்சியைப் போன்றே படமாக்கியிருப்பார் ஸ்டண்ட் இயக்குநர் ராம்போ ராஜ்குமார் அவர்கள்.
'சின்னத்தாயி',திரைப்படத்தை இன்றைய இளைஞர்கள் பார்த்திருக்க வாய்ப்பேயில்லை.அவர்களும் இத்திரைப்பாடத்தை பார்க்க வேண்டும்.
தமிழக கிராமங்களில் இருந்த-இருக்கும் பழக்க வழக்கங்களையும் பண்பாடுகளையும் அறிந்து கொள்ள வேண்டும்.
'சின்னத்தாயி,'எல்லா வகையிலும் மிக சிறப்பாக அமைந்த திரைப்படம்.
சே மணிசேகரன்

 

Leave a Reply