• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மதுரையில் தங்கம் சென்னையில் சஃபையர் திரையரங்கம் 

சினிமா

மதுரையில் தங்கம் சென்னையில் சஃபையர் திரையரங்கம் சென்னையும் திரையரங்குகளும் என்று எடுத்துக்கொண்டால் மக்களின் வாழ்க்கையோடு உணர்வோடு ஒன்றிப்போனவை எனலாம். சென்னையின் பிரதான சாலையான அண்ணாசாலை அதை சுற்றியுள்ள இடங்களில்தான் சொல்லிக்கொள்ளும்படி மிகப் பிரபலமான திரையரங்குகள் இருந்தன. மிகப்பெரிய திரையரங்கம் என்று சென்னையில் சொன்னால் சஃபையர் திரையரங்கை சொல்லலாம் மதுரையில் தங்கம் திரையரங்கம் எப்படி ஆயிரக்கணக்கானோர் ஒரே நேரத்தில் பார்க்கும் வகையில் இருந்ததோ அதேபோல் சஃபையர் திரை அரங்கம் பெரிய திரை அரங்கம். அதுவும் 4 தியேட்டர்களைக்கொண்ட காம்பளக்ஸ். அகன்ற திரையில் படம் பார்க்கவே அந்த காலத்தில் எல்லோரும் விரும்பி வருவார்கள். இதேபோன்று சென்னையில் நான்கு காட்சிகளையும் எப்போது வேண்டுமானாலும் பார்க்கக்கூடிய திரையரங்கம் இதே காம்ப்ளக்சில் இருந்தது. காலைமுதல் இரவு வரை தொடர்ந்து படம் பார்க்கலாம் ப்ளூ டைமண்ட் தியேட்டரில் காலை முதல் இரவு வரை காட்சிகள் ஓடிக்கொண்டே இருக்கும் எப்போது வேண்டுமானாலும் நாம் சென்று பார்க்கலாம் எப்போது வேண்டுமானாலும் வெளியில் வரலாம் என்கிற ஒரு தியேட்டரும் சென்னையில் மட்டும் இருந்தது. சென்னையில் மிகப்பழமையான எம்ஜிஆர், சிவாஜி படங்கள் ஒடிய சித்ரா, கெயிட்டி காசினோ தியேட்டர்கள் சென்னை அண்ணாசாலையை ஒட்டி கூவம் கரையோர அமைந்திருந்தது. அப்படியே அண்ணாசாலை பக்கம் திரும்பி வாலாஜா சாலை சென்றால் திருவல்லிக்கேணி பிரதான சாலையில் ஸ்டார் தியேட்டரும் வாலாஜா சாலையில் பாரகன் தியேட்டரும், அதற்கு நேர் எதிரில் கலைவாணர் அரங்கம் என்கிற பெயரில் சில்ட்ரன்ஸ் தியேட்டரும் இருந்தன. இங்கு ஸ்டார் தியேட்டரில் அதிக அளவில் இந்திப்படங்கள் வெளியாகின. அண்ணா சாலையில் தடுக்கிவிழுந்தால் ஒரு தியேட்டர் அப்படியே திரும்பி அண்ணாசாலை பக்கம் வந்தால் அண்ணா தியேட்டர் முதலிலும் அடுத்து சாந்தி தியேட்டரும் வரும். அண்ணா தியேட்டர் மிகச்சிறிய தியேட்டர். இங்கு ரஜினிகாந்தின் ஆரம்ப படமான பிரியா வெற்றிகரமாக ஓடியுள்ளது. சாந்தி திரையரங்கம் சிவாஜி கனேசனுக்கு சொந்தமானது. அதற்கு பக்கத்தில் தேவி, தேவி பாலா, தேவி பாரடைஸ் தேவி கலா ஆகிய 4 தியேட்டர்கள் அடங்கிய காம்பிளக்ஸ் தியேட்டர் இருந்தது. சென்னையில் மிகப் பிரதானமானது தேவி காம்ப்ளக்ஸ். இதன் வட்டவடிவமான படிகட்டுக்காகவே இந்த தியேட்டர் பேசப்பட்டது. அதற்கு பக்கத்தில் பிளாசா தியேட்டர் எம்ஜிஆரின் நேற்று இன்று நாளை படம் இங்குதான் சர்ச்சையுடன் வெளியானது.

ரஜினிக்காக ஒரு தியேட்டர் அதற்கு ஒரு 100 அடி 100 மீட்டர் தள்ளி சென்றால் ஜிபி ரோடு முனையில் வெலிங்டன் தியேட்டர். அதற்கு நூறு மீட்டர் தள்ளி சென்றால் அலங்கார் தியேட்டர், இந்த தியேட்டர் குளோப் தியேட்டராக இருந்து மூடப்பட்டு பின்னர் என்பதுகளில் மீண்டும் திறக்கப்பட்டது. இந்த தியேட்டரில் முதன்முதலில் பைலட் பிரேம்நாத் படம் வெளியானது. ரஜினியின் பில்லா, கமலின் கல்யாணராமன் உள்ளிட்ட பல படங்கள் இங்கு வெற்றி விழா கண்ட படங்கள் என்று சொல்லலாம். ரஜினிக்காக ஒரு தியேட்டர் என்றால் அலங்கார் தியேட்டரை சொல்லலாம். அப்படியே நேராகச் சென்றால் ஆனந்த் தியேட்டர். மினிஆனந்த் இரண்டு தியேட்டர்கள். அதற்கு இடதுபுறம் திரும்பினால் சத்தியம் காம்ப்ளக்ஸ் சத்தியம், சாந்தம், சுபம் உள்ளிட்ட நான்கு தியேட்டரில் கடந்த காலத்தில் இந்தி படங்களே அதிகம் வெளியிடப்பட்டது. சத்தியம் தியேட்டர் சத்தியம் தியேட்டரில் தான் பாபி, சத்தியம் சிவம் சுந்தரம் உள்ளிட்ட பல படங்கள் வெற்றி வாகை சூடியது. மை டியர் குட்டிசாத்தான் இந்தியாவின் முதல் 3டி படமும் இங்குதான் வெளியானது. அப்படியே திரும்பி பீட்டர்ஸ் சாலை வந்து ராயப்பேட்டை மருத்துவமனை அருகில் வலதுபுறம் திரும்பி போனால் ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் பைலட் தியேட்டர் இருக்கும். இந்த தியேட்டரும் ஒரு காலத்தில் ஆங்கில படங்கள் மட்டுமே வெளியிடும் தியேட்டராக மாறியது மேட் மேக்ஸ், ஏலியன் போன்ற திரில்லர் படங்கள் ஹாரர் படங்களும் இதனுடைய சவுண்ட் சிஸ்டத்திற்காகவே பெரிதும் ரசிகர்களால் ரசிக்கப்பட்டது. அப்படியே நேராக மைலாப்பூர் நோக்கிச் சென்றால் லஸ் கார்னரில் காமதேனு திரையரங்கம் உள்ளது. ஜிபி சாலையில் உள்ள தியேட்டர்கள் இது தவிர ராயப்பேட்டை மருத்துவமனையிலிருந்து அண்ணா சாலை நோக்கி தற்போது இஏ காம்ப்ளக்ஸ் உள்ள ஜி.பி சாலையில் பயணித்தால் வலதுபுறம் முதலில் ஓடியன் தியேட்டரும் அங்கிருந்து 100 மீட்டர் பயணித்தால் மிட்லண்ட் லியோ தியேட்டரும் வரும். மிட்லண்ட் தியேட்டரில் 70 கள் 80 கள் 90 கள் வரை ஜேம்ஸ்பாண்ட் படங்கள் அதிகம் ரிலீஸ் ஆகும். ஓடியன் தியேட்டரில் எம்ஜிஆர் சிவாஜி படங்கள் ஓடும். சென்னையில் அண்ணா சாலை அதைச் சுற்றி சில கிலோ மீட்டர் நடந்தாலே பல தியேட்டர்கள் அருகருகே இருந்தது ஒரு காலம்.
சென்னையைச் சுற்றி இருக்கும் திரையரங்குகள் பக்கத்தில் உள்ள பாண்டிபசார் செல்லும் வழியில் ஜி.என் செட்டி சாலையில் சன் தியேட்டர் என ஒரு தியேட்டர் இருந்தது, அதைத்தாண்டிச் சென்றால் பாண்டிபசார் சாலையில் நாகேஷ் தியேட்டர், அடுத்து திநகர் பேருந்து நிலையம் அருகில் கிருஷ்ணவேணி, ராஜகுமாரி தியேட்டர்கள் அப்படியே நகர்ந்து சைதாப்பேட்டை சென்றால் நூர்ஜஹான், ஜெயராஜ், அப்படியே போனால் உதயம், காசி தியேட்டர் வடசென்னையில் எழும்பூரில் ஆல்பர்ட், மினி ஆல்பர்ட் தியேட்டர், புவனேஷ்வரி, ராக்சி தியேட்டர்கள் புரசைவாக்கத்திலும், உமா, மேகலா, சரவணா, பாலாஜி, லட்சுமி, சயானி, முரளி கிருஷ்ணா என வரிசையாக தியேட்டர்களும் அப்படியே வால்டாக்ஸ் சாலையில் பத்மநாபா தியேட்டரும் உள்ளே சென்றால் முருகன் தியேட்டரும் வடசென்னையில் புகழ்பெற்ற அகஸ்த்தியா, மகாராணி, பிராட்வே தியேட்டர் என பல தியேட்டர்கள் வரிசைக்கட்டி நின்றன. சொந்த பந்தங்கள் பயன்படுத்திய பொருளை பார்க்கும் துயரம் சென்னையில் இப்பொழுது இருப்பது தேவி காம்ப்ளக்ஸ், சத்யம் கம்ப்ளக்ஸ், கேசினோ, உட்லண்ட்ஸ் உள்ளிட்ட சில தியேட்டர்கள் மட்டுமே மற்ற அனைத்து தியேட்டர்களும் மூடப்பட்டுவிட்டன. அனைத்து தியேட்டர்களும் மூடப்பட்டு காம்ப்ளக்ஸ் அல்லது குடியிருக்கும் அப்பார்ட்மெண்டாக மாறி உள்ளது. சில இடிக்கப்பட்டு உருக்குலைந்து கிடக்கிறது. பலரது வாழ்க்கையின் வெற்றிச் சரித்திரத்தை எழுதிய தியேட்டர்கள் உருக்குலைந்து கிடப்பதை காணும்போது வீட்டில் பயன்படுத்தாமல் ஓரம் கிடக்கும் தந்தையின் பழைய சைக்கிள், குடை உள்ளிட்ட பொருட்களை பார்க்கும் போது ஏற்படும் பழைய சுகமான சோக எண்ணம் மேலோங்குவதை போல் இருப்பதை மறக்க முடியாது. மனதின் மூலையில் ஒரு வலி நம்முடைய ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் சென்னையிலுள்ள திரையரங்குகள் ஆக்கிரமித்துள்ளன என்பதை நாம் எந்த நாளும் மறக்க முடியாது. அம்மா அப்பாவின் கையைப் பிடித்து டிக்கெட் எடுத்து காத்திருந்து எடுத்து படம் பார்த்த அந்த நினைவுகள் என்றும் சுகமான நினைவுகள் தான். காதலர்கள், திருமணமான இளம் தம்பதிகள், பள்ளி பருவத்தில் பார்த்தது, இளைஞர்களாக இருந்தபோது நண்பர்களுடன் சென்று பார்த்தது, வாழ்க்கையில் வறுமையில் வாடிய காலங்களில் தியேட்டரில் படம் பார்த்தது என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தியேட்டரும், படங்களும் நீங்கா நினைவுகளாக நெஞ்சில் இருக்கும். தியேட்டர் இருந்த இடங்கள் வணிக வளாகங்களாக குடியிருப்புகளாக மாறியிருப்பதை காணும்போது ஏதோ ஒரு சோகம் எதையோ இழந்ததைப்போல் உள்ளதை மறுக்க முடியாது. i இதில் விடுபட்டுப்போன திரை அரங்குகளை அன்பர்கள் குறிப்பிடலாம். நன்றி அப்துல் முத்தலிப் அவர்களுக்கு,

Sukumar Shan

Leave a Reply