• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இணையப் பாதுகாப்புச் சட்டத்தின் ஒரு எழுத்தைக்கூட மாற்ற முடியாது - நீதி அமைச்சர் விஜயதாஸ

இலங்கை

நிறைவேற்றப்பட்டுள்ள இணைய பாதுகாப்புச் சட்டம் தொடர்பாக, எத்தனை கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஆராய்ந்தாலும், ஒரு எழுத்தைக்கூட மாற்ற முடியாது என நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.

உயர்நீதிமன்றத்தின் பரிந்துரைகளை மீறி, இணைய பாதுகாப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக சபையில் சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, இதுதொடர்பாக ஆராய்வதற்காக கட்சித் தலைவர்கள் கூட்டத்தை கூட்டுமாறு சபையில் இன்று வலியுறுத்தினார்.

இதற்கு பதிலளிக்கும்போதே நீதி அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சட்டமூலமொன்று சவாலுக்கு உட்படுத்தப்படுமானால், நாம் அதுதொடர்பாக பரீசிலனைகளை மேற்கொள்வோம்.

நீதிமன்றில் விசாரணைகள் ஆரம்பிக்கும் முன்னரே, சட்டமா அதிபர் அதன் குறைகளை சுட்டிக்காட்டிவிடுவார்.

இணைய பாதுகாப்புச் சட்டத்தை சவாலுக்கு உட்படுத்தி 40 இற்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

வாரக்கணக்கில் இதுதொடர்பாக விசாரணைகள் நீதிமன்றத்தில் இடம்பெற்றன.

நீதிமன்றத்தினால் சட்டத்தை கொண்டுவர முடியும் என்றோ கொண்டுவர முடியாது என்று அறிவிக்க அதிகாரம் கிடையாது.

மாறாக, சட்டமொன்று அரசமைப்புக்கு உட்பட்டதா இல்லையா என்பதை அறிவிக்கும் அதிகாரம் மட்டும்தான் நீதிமன்றத்துக்கு உள்ளது.

ஏதேனும் ஒரு சட்டம் அரசமைப்புக்கு உட்பட்டது அல்ல என உயர்நீதிமன்றம் கருதுமாக இருந்தால், சட்டத்தை நிறைவேற்ற மூன்றில் இரண்டு பெரும்பான்மை அல்லது சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்வதா என்பதை நீதிமன்றம் அறிவிக்க முடியும்.

உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டிய விடயங்களை பரீசிலித்து, அவற்றில் திருத்தம் செய்து, பின்னர் சட்டமா அதிபரின் அனுமதியைப் பெற்றுதான், நாம் ஒரு சட்டமூலத்தை நாடாளுமன்றுக்கு சமர்ப்பிக்கிறோம்.

பின்னர், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தங்களின் யோசனைகளை முன்வைக்க அனுமதி வழங்கப்படும்.

இறுதியில், குறித்த சட்டமூலத்தில் எந்தவொரு சட்டச்சிக்கல்கள் இல்லை என்பது உறுதியான பின்னர்தான், நாடாளுமன்றத்தினால் அது நிறைவேற்றப்படும்.

அந்தவகையில், இணைய பாதுகாப்புச் சட்டம் தொடர்பாக சட்டமா அதிபர் ஆராய்ந்துள்ளார். இது அரசமைப்புக்கு உட்பட்டது கிடையாது என்பதை அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த சட்டம் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இன்னமும் விவாதிக்க முடியாது.
ஆனால், இந்த சட்டத்தில் ஏதேனும் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டுமாக இருந்தால், அதனை திருத்த நாம் தயாராகவே உள்ளோம்.

அதனைவிடுத்து, இந்த சட்டம் தொடர்பாக மக்களுக்கு தவறான கருத்தை விதைக்க நினைப்பதால், எந்தவொரு பயனும் கிடையாது.

இந்த நிலையில், எத்தனை கட்சித் தலைவர்கள் கூட்டத்தை நடத்தினாலும் சட்டத்தின் ஒரு எழுத்தைக்கூட மாற்ற முடியாது.

இது அரசாங்கத்தை காப்பாற்றவோ ஜனாதிபதியை காப்பாற்றவோ கொண்டுவரப்பட்டது கிடையாது” என நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply