• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பிரபல திரைப்பட பாடலாசிரியர் பிறைசூடன் 

சினிமா

தமிழ்த் திரையிசைப் பாடல்களில் உச்சம் தொட்ட கவிஞர் பிறைசூடன்... வாழ்வும், சாதனைகளும்!
தமிழ்த் திரையிசைப் பாடல்கள் வரலாற்றில் முக்கியமான பாடலாசிரியர்களில் ஒருவர் கவிஞர் பிறைசூடன். இவர் தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர், கவிஞர் மற்றும் நடிகர் என பன்முகத் திறமை கொன்டவர். கொஞ்சநாள்களாக உடல்நலம் சரியில்லாமல் இருந்தவர், இன்று (8.10.2021) காலமானார்.
இவர் இதுவரை திரைப்படங்களில் 2,000 பாடல்கள், தனிப் பாடல்கள் 7,000 பாடல்கள் என சுமார் 10,000 பாடல்களை எழுதியுள்ளார். தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியருக்கான விருதை மூன்று முறை பெற்றவர்.
ஆஸ்கர் விருதுக்கு இந்தியாவில் இருந்து திரைப்படங்களை அனுப்பும் தேர்வுக்குழு உறுப்பினராக இருந்தார். ரஜினியின் ‘அண்ணாத்த’ படத்தில் கவிஞர் பிறைசூடனும் நடித்திருக்கிறார்.

1985-ல் ஆர்.சி.சக்தியின் ‘சிறை’ படத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் ’ராசாத்தி ரோசாப் பூவே’ என்னும் பாடலை எழுதி திரைப்படத் துறையில் பாடலாசிரியராக அறிமுகமான கவிஞர் பிறைசூடன்.
ரஜினி நடித்த `ராஜாதி ராஜா’ படத்தில் இளையராஜா இசையில் ‘மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா’ என்ற பாடலின் புகழ் திரையுலகின் பார்வையை இவர் பக்கம் திருப்பியது.
கவிஞர் பிறைசூடன்கவிஞர் பிறைசூடன்
பிறகு, ‘பணக்காரன்’ படத்தில் ‘நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும்தான்’ என்னும் வாழ்த்துப்பாடல் பட்டி தொட்டியெங்கும் ஒலித்தது.
வசந்த் இயக்கிய ‘கேளடி கண்மணி’யில் ‘தென்றல் தான் திங்கள்தான் நாளும் சிந்தும்’ என்னும் பாடல், ஈரமான ரோஜாவேயில் `கலகலக்கும் மணி ஓசை சலசலக்கும் குயில் ஓசை மனதினில் பல கனவுகள் மலரும்' எனும் காதல் பாடல் அந்தக் கால கல்லூரி மாணவர்களின் மனதைக் கொள்ளைகொண்ட பாடல். இளையராஜாவின் இசையில் இவர் எழுதிய பல பாடல்கள் சூப்பர் ஹிட்டாகின.
1991-ல் ’என் ராசாவின் மனசிலே’ படத்தில் ‘சோல பசுங்கிளியே சொந்தமுள்ள பூங்கொடியே ஈச்ச இளங்குறுத்தே என் தாயி சோலையம்மா' பாடலுக்காக, தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியருக்கான விருதைப் பெற்றார்.
‘கேப்டன் பிரபாகரன்’ படத்தில் ‘ஆட்டமா தேரோட்டமா’ பாடலும் மிகவும் பிரபலமானது.
‘இதயம்’ படத்தில் ‘இதயமே இதயமே’ பாடலில் இசையுடன் இவரின் வரிகள் காதல் தோல்வியின் வலியில் நனைத்தது. 'கோபுர வாசலிலே' படத்தில் ‘காதல் கவிதைகள் படித்துடும் நேரம்’, உன்னை நெனச்சேன் பாட்டுப் படிச்சேனில் ‘என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பேரும் என்னடி’, ஆர்.கே.செல்வமணி இயக்கிய ‘செம்பருத்தி’ படத்தில் ‘நடந்தால் இரண்டடி இருந்தால் நான்கடி படுத்தால் ஆறடிபோதும் எனும் பாடல், ‘அமரன்’ படத்தில் ‘வெத்தல போட்ட ஷோக்குல’ என்னும் பாடல் என இவரின் வெற்றிப் பாடல்கள் நீள்கின்றன.
ஏ.ஆர்.ரஹ்மான் விளம்பரங்களுக்கு இசையமைத்துக்கொண்டிருந்தபோது அவற்றுக்கு ஜிங்கில்ஸ் எழுதியிருக்கிறார். பிறகு ‘ஸ்டார்’ படத்தில் ‘ரசிகா ரசிகா என் ரசிகா ரசிகா’ பாடலை எழுதினார்.
கவிஞர் பிறைசூடன்கவிஞர் பிறைசூடன்
‘ஸ்ரீராம ராஜ்யம்’ உட்பட சில மொழிமாற்றுப் படங்களுக்கு பாடல்களோடு வசனங்களையும் எழுதியிருக்கிறார்.
நிறைய பக்திப் பாடல்களையும் எழுதியுள்ள இவர், அவருடைய கவிதைகளை ‘தாலாட்டு முதல் தாலாட்டுவரை’ என்னும் தலைப்பில் நூலாக வெளியிட்டுள்ளார். தமிழ் மொழிப் புலமையையும் திரையிசைப் பாடல் வரிகளின் நுட்பங்களை விளக்கும் திறமையையும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் வெளிப்படுத்தினார்.
சிதம்பரம் அருகே `ஆனைக்காரன்சத்திரத்'தில் 1956 பிப்ரவரி 6-ல் பிறந்தவர். நன்னிலத்தில் படித்தவர். இவரது இயற்பெயர் சந்திரசேகர், `தனசேகர்’, `ராஜசேகர்’, கவிஞர் சேகர், கவிஞர் சந்துரு என்று பல பெயர்களில் கவிதைகள், பாடல்கள் எழுதியிருக்கிறார். வானொலியில் எழுதிய பாடலுக்கு பிறைசூடன் என்கிற பெயரைத் தேர்வு செய்ததால் அப்பெயர் நிலைத்துவிட்டது.
தன் பாடல்கள் மூலம் வரலாற்றில் நிலைத்து நிற்கப் போகும் கவிஞருக்கு அஞ்சலி!

 

Leave a Reply