• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தற்கொலை செய்ய நினைத்த தயாரிப்பாளரை காப்பாற்றியுள்ள எம்.எஸ்.வி – கண்ணதாசன்

சினிமா

படம் தயாரித்து நஷ்டமானதால் தற்கொலை செய்துகொள்ள நினைத்த ஒரு தயாரிப்பாளரை எம்.எஸ்.விஸ்வாநாதன் – கவியரசர் கண்ணதாசன் கூட்டணியில் வெளியான ஒரு பாடல் காப்பாற்றியுள்ள சம்பவம் தமிழ் சினிமாவில் நடந்துள்ளது.

1969 ஆம் ஆண்டு ரவிச்சந்திரன், விஜயகுமாரி, முத்துராமன், ராஜாஸ்ரீ ஆகியோர் நடிப்பில் தயாரான படம் அமுதா. இந்த படத்திற்கு எம்.எஸ். விஸ்வநாதன் இசையமைக்க, அனைத்து பாடல்களையும் கவியரசர் கண்ணதாசன் எழுதியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், பல்வேறு சிக்கல்களையும் சந்தித்துள்ளது.

நிதி பிரச்சனை, நடிகர், நடிகைகள் பிரச்சனை, என பல சிக்கல்களை கடந்து படப்பிடிப்பு ஓரளவுக்கு முடிவுக்கு வரும் சூழலில் இருந்த போது, தயாரிப்பாளர் ரஹ்மானிடம் இருந்த பணம் முழுவதும் காலியாகியுள்ளது. இதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. அதன்பிறகு சில ஆண்டுகள் கழித்து படப்பிடிப்பு தொடங்கியபோது, ரவிச்சந்திரனுக்கு திருமணமாகி அவரது மார்கெட் வீழ்ச்சியடைந்துள்ளது. நாயகியாக நடித்து வந்த விஜயகுமாரி, அக்கா, அம்மா பாட்டி வேடங்களுக்கு மாறிவிட்டார்.

இந்த படத்தில் இரண்டாவது ஹீரோவாக நடித்து வந்த முத்துராமன், இனிமேல், நாயகனாகத்தான் நடிப்பேன் என்று முடிவு செய்துள்ளார். அதேபோல் ராஜஸ்ரீக்கும் மார்க்கெட் இல்லாமல் போய்விட்டது. பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், கையில் பணம் இல்லாததால் படப்பிடிப்பு நின்று விட்டது. நடிகர் நடிகைளின் செயல்களால் படம் வெற்றி பெறுமா இல்லையா என்பது கேள்விக்குறியாகி விட்டது. இதனால் எதற்காக இருக்க வேண்டும் என்று நினைத்துள்ளார் தயாரிப்பாளர் ரஹ்மான்.

சினிமாவுக்கு வந்ததே தப்பு என்று நொந்து புலம்பிக் கொண்டிருந்த இவர், இயக்குனர் முக்தா சீனிவாசனை சந்தித்து, பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்துவிட்டது. பணம் இல்லை யாரிடமாவது பணம் வாங்கி கொடுங்கள். இல்லை என்றால் இப்போது இருக்கும் பணத்தை கொடுங்கள் விஷம் சாப்பிட்டு செத்து விடுகிறேன் என்று கூறியுள்ளார். இதை கேட்ட முக்தா சீனிவாசன், உடனடியாக படத்தின் இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதனிடம் அழைத்து சென்றுள்ளார்.

இங்கு நிலைமையை விளக்கி சொல்ல, எம்.எஸ்.வி புதிதாக ஒரு டியூனை தயார் செய்து, அதை கவியரசர் கண்ணதாசனிடம் அனுப்பி வைத்து பாடல் எழுதுமாறு கூறியுள்ளார். அப்போது எழுதிய பாடல் தான் அன்பே அமுதா என்ற பாடல். படத்தின் தலைப்பை போல், இந்த பாடல் முழுவதும் அமுதா என்ற வார்த்தைகளால் நிரப்பப்பட்டிருக்கும். டி.எம்.சௌந்திரராஜன் பாடிய இந்த பாடல், பட்டிதொட்டி எங்கிலும் பட்டையை கிளப்பி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

நன்றி... தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்.

Leave a Reply