• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி....

சினிமா

பாண்டி பஜாரில் ராஜகுமாரி தியேட்டர் இருந்தது. அதை யாரோ குத்தகைக்கு எடுத்து "ஷானீஸ்"  என்ற பெயரில் நடத்திக் கொண்டிருந்தார்கள். பெரும்பாலும்,  ஆங்கிலப் படங்களே அங்கு வெளியாகும்.
வீட்டுக்கு அருகில் இருந்ததாலும், சிறுவர்களுக்கு 50 பைசா டிக்கெட் என்பதாலும் அங்கு எந்த படம் வெளியானாலும் பார்த்துவிடுவேன்.
அப்படி ஒருமுறை " The Brass Bottle" என்ற படத்தைப் பார்த்தேன். ஒரு பூதத்தை மையமாக வைத்து எடுத்திருந்தார்கள்.
ஒரு நாள் அப்பா எங்களிடம்,  "வாங்கடா படம் பார்க்கப் போகலாம்" என்று கூப்பிட்டார்.
நான், எனது மூத்த சகோதரர்கள் காந்தி, கமால், இளைய சகோதரர் சீனிவாசன், அப்பாவின் உதவியாளர்கள் பஞ்சு அருணாசலம்,  இராம முத்தையா, வசந்தன் என்று ஒரு பெரும் கூட்டமே படம் பார்க்கப் போனோம்.
என்ன படம் என்று தெரியாமலேயே நானும் இருந்தேன்.  ராஜகுமாரி தியேட்டருக்கு வந்த போதுதான் " The Brass Bottle" படம் பார்க்க போகிறோம் என்று தெரிந்தது. 
"நான் ஏற்கனவே பார்த்து விட்டேன்"  என்று சொல்ல பயம்.  இருந்தாலும், அப்பாவுடன்  படம் பார்க்கப் போனால்,  இடைவெளியில் தியேட்டரில் கிடைக்கும் அனைத்தையும் வாங்கித் தந்து விடுவார் என்பதால் வாயை மூடிக் கொண்டிருந்தேன்.
படம் முடிந்து வீட்டுக்கு வந்துவிட்டோம்.  இரவு எங்களை அறைக்கு அழைத்தார் அப்பா. "இன்னைக்குப் பார்த்த படம் எப்படி இருந்ததுடா? என்று கேட்டார்.
 நாங்கள் அனைவரும் "படம் ரொம்ப நல்லா இருந்துச்சுப்பா" என்றோம்.
"சரி போய் தூங்குங்க..." என்று அனுப்பிவிட்டார்.
மறுநாளிலிருந்து அந்தப் படத்தை தமிழில் எடுக்க தன் உதவியாளர்களுடன் கதை விவாதத்தில் இறங்கிவிட்டார்.
அப்போதெல்லாம் ஆங்கிலப் படங்களுக்கு, இந்தியா வணிக ரீதியாக ஒரு பெரிய ஏரியா  இல்லை. ஹாலிவுட்டில் படம் வெளியாகி இரண்டு மூன்று வருடங்கள் கழித்தே இந்தியாவில் அது வெளியாகும். அதனை மொழிமாற்றம் செய்து இந்திய மொழிகளில் எடுத்தால் யாரும் கண்டு கொள்ளமாட்டார்கள்.
"அன்பே வா"  "குழந்தையும் தெய்வமும்" என்று பல படங்கள் ஆங்கிலப் படங்களின் ரீமேக் தான். எனவே, அப்பாவும் இந்தப் படத்தை தமிழில் எடுக்கும் முயற்சியில் இறங்கிவிட்டார்.

அதேசமயம் வீனஸ் கோவிந்தராஜன் அவர்களும் அதே படத்தை தமிழில் எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார்.
வீனஸ் கோவிந்தராஜைனைப் போல் மிக சரியாக திட்டமிட்டுப் படம் தயாரிப்பவர்கள் மிகக் குறைவு. இந்த தேதியில் பூஜை,  இந்த தேதியில் படப்பிடிப்பு,  இந்த தேதியில் ரிலீஸ்  என்று முடிவு செய்து அதனை அப்படியே செயலில் காட்டுவார்.
"The Brass Bottle" படத்தை வீனஸ் கோவிந்தராஜன், ஜாவர் சீதாராமனை வைத்து முழு தமிழ் வடிவம் கொடுத்து முடித்து வைத்து விட்டனர்.
அவரிடம் யாரோ சென்று "கண்ணதாசனும் இதை தமிழில் எடுக்க தயாராகிக் கொண்டிருக்கிறார்" என்று சொல்லிவிட்டார்கள்.
வீனஸ் கோவிந்தராஜன், அப்பாவை சந்தித்து முழு விவரத்தையும் சொன்னார். அவர் ஒரு மிகப் பெரிய தயாரிப்பாளர் மட்டும் இல்ல, கலைவாணர் என். எஸ். கே. வின் நெருங்கிய உறவினரும் கூட.
அதனால் அந்த படத்தை தமிழில் எடுக்கும் எண்ணத்தை அப்பா கைவிட்டார்.
வீனஸ் பிக்சர்ஸின் படங்களுக்கு அப்பாதான் பாடல் எழுதுவார். (வீனஸ் கோவிந்தராஜனின் மகன் தியாகராஜன் தயாரித்த "மூன்றாம் பிறை" படத்திற்கு தான் தனது கடைசி பாடலை எழுதினார்)
வீனஸ் பிக்சர்ஸ் அந்த படத்தை "பட்டணத்தில் பூதம்"  என்ற பெயரில் தயாரித்து வெளியிட்டனர். படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இந்தப் படம் தயாரிப்பில் இருக்கும்போது அப்பா  "தமிழ் தேசிய கட்சி" என்ற கட்சியைத் தொடங்கி, அதனைப் பெருந்தலைவர் காமராஜர் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைத்த நேரம்.
காமராஜரிடம், அப்பாவைப் பற்றி தவறான செய்திகளே சென்று சேரும்படி சிலர் பார்த்துக்கொண்டனர். அதனால், அவரும் அப்பாவின் மீது வருத்தமாக இருந்தார்.
(பின்னாளில் அவர் அப்பாவின் மதுப் பழக்கத்தை பற்றி சிலர் குறை சொன்னபோது "அவன் அப்படித்தான். ஆனா அதை தவிர அவனைப்பத்தி தப்பா சொல்ல என்ன இருக்கு? பெர்மிட் வாங்கிட்டு தானே குடிக்கிறான். அவனே கொஞ்ச நாள்ல நிறுத்தி விடுவான்" என்றார்)
இந்த காலகட்டத்தில் தான், 'பட்டணத்தில் பூதம்'  படம் தயாராகிக் கொண்டிருந்தது. அதில் ஒரு சூழலுக்கு பாடல் எழுதும்போது,  காமராஜர் குறித்த தனது மனநிலையை, "அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி..." என்று ஒரு பாட்டில் சேர்த்துவிட்டார். பாடல் மிகவும் நன்றாக இருந்தது. அனைவருக்கும் மகிழ்ச்சி.
பாடல் படமாக்கப்படுவதற்கு சில நாட்களுக்கு முன் உதவி இயக்குனர் ஒருவர் ஒரு சந்தேகத்தைக் கிளப்பினார்.
"இந்தப் படத்தில் ஜெய்சங்கரும் நாகேஷும் ஒரு பங்களாவில் தங்கி இருக்கிறார்கள்.  அவர்களுடன் ஒரு பூதம் வந்து சேருகிறது. ஜெய்சங்கருக்கு கதையில் ஒரு தாய் இருப்பதாக காட்ட வில்லை. அப்படி இருக்கையில் சிவமாக "சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி" என்ற பாடினால் சரியாக இருக்குமா?  யார் அந்த சிவகாமி என்ற ரசிகர்கள் கேட்க மாட்டார்களா"?  என்று கேட்டார்.
இது சரியான சந்தேகம் என்பதால்,  அது குறித்து விவாதங்கள் நடந்தன. பாடல் வரிகளை மாற்றித் தரும்படி கவிஞரிடம் கேட்பது என்று முடிவு செய்து, அப்பாவுக்கு போன் செய்து பேசினார்கள்.
"அண்ணே,  கதையில் ஹீரோவுக்கு அம்மா கிடையாது. புதிதாக ஒரு அம்மாவைச் சேர்க்கலாம் என்றால் கதையில் அதற்கான முக்கியத்துவமோ, இடமோ கிடையாது. அதனால....
"அதனால...?"
"பாட்டோட பல்லவியை மாத்தித் தரணும்..."
"பாட்டு பிடிச்சிருக்கா இல்லையா...?
"பாட்டு ரொம்ப நல்லா இருக்குண்ணே..."
"அப்புறம் ஏன் மாத்தணும்?"
"அப்படியே இருந்தா நல்லா இருக்கும் தான். ஆனா இந்த சிவகாமி பிரச்சனை இருக்கே. சிவகாமி மகனிடம்னு பாட்டில் வருதே...."
"யார் அந்த சிவகாமின்னு
யாரும் கேட்கப் போவது இல்லை. அப்படியே விட்டுடுங்க..."
"இல்லண்ணே... படம் வெளியாகிறப்ப நிச்சயமா பத்திரிக்கை விமர்சனத்தில் வரும்ணே.  அதுவும் இப்ப நீங்க காமராஜ் காங்கிரசில வேற சேர்ந்திருக்கீங்க..."
அப்பா சிறிது நேரம் யோசிக்கிறார். பிறகு, "ஒண்ணு செய்யுங்க.   ஒரு சீன்ல ஏதாவது ஒரு பெண்மணியோட  படத்தை மாட்டி,  "சிவகாமி அம்மா... நீங்களே உங்க பிள்ளை கிட்ட சொல்லுங்க" அப்படின்னு சொல்ற மாதிரி சேர்த்துக்கோங்க... அவ்வளவு தானே"  என்றார்.
"இது நல்லா இருக்கே.. அப்படியே செஞ்சு பார்க்கிறோணே... சரியா வரலைன்னா பல்லவிய மாத்தித் தாங்க..."
பிறகு படத்தில் நாகேஷும் ஜெய்சங்கரும் பேசிக்கொண்டிருக்கும் ஒரு காட்சியில் ஒரு பெண்மணியின் படத்தை மாட்டி நாகேஷ் சிவகாமி அம்மாவிடம் சொல்வது போல் எடுத்து விட்டார்கள்.
அதனால்,  "அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி".. என்ற ஒரு நல்ல பாடல் மாற்றப்படாமல் தப்பித்தது..
அண்ணாதுரை கண்ணதாசன் அவர்கள் எழுதிய. "என்றென்றும் கண்ணதாசன்" என்ற நூலிலிருந்து...
 

 

Leave a Reply