• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வெள்ளி கொலுசு மணி…

சினிமா

ஆபேரி ராகத்தில் என்றும் இனிமையான “வா பொன்மயிலே நெஞ்சம் ஏக்கத்தில், காளிதாசன் கண்ணதாசன் கவிதை, சின்னஞ்சிறு வயதில் எனக்கோர், உன் மனசுல பாட்டு தான், என்னை தொட்டு அள்ளிக் கொண்ட” இப்படி காதல் டூயட்டால சிறகடிக்க வெச்சவரு பூங்காவியம் பேசும், துள்ளி திரிந்ததொரு காலம், எந்தன் வாழ்க்கையின் அர்த்தம் சொல்ல என சோலோவில் கிறங்கடித்து வருடி இருப்பார். ஆபேரி ராகத்தின் புதுப் பரிமாணத்தின் உச்சபச்சமாக ஜொலிக்க வெச்சதுன்னு ராக்கம்மா கைய தட்டு பாடலை சொல்லலாம். 

ஆபேரி ராகத்தில் அற்புத சுவைகளை அள்ளி கொடுத்த பாடல்களில் “வெள்ளி கொலுசு மணி வேலான கண்ணின் மணி” பாடல் எப்பவுமே ஒரு தனித்துவ அந்தஸ்தோட வலம் வருவதற்கு காரணம் என்னன்னு வார்த்தையால் விவரிக்க இயலாதது. இந்த பாடலானது பொங்கி வரும் காவேரியாய் நமது உள்ளுணர்வில் உற்சாகம் பொங்க ஆரம்ப இசையில் தொடங்கி  இசைஞானியின் கற்பனை வீச்சின் உச்சத்தை பாடல் முழுதும் பிரதிபலிப்பதாக அமைந்திருக்கும். கங்கை அமரனின் பாடல் வரிகளும் பாடகர்களான அருண்மொழி & சித்ரா இருவரின் குரல்களும் சிறப்பான முத்தாய்ப்பாய் அமையப் பெற்றிருப்பது வெகு சிறப்பு.

காவேரியின் ஆர்ப்பரிப்பாய் ஆரம்பிக்கும் வயலின்களின் கோரஸ் இசையை சில வினாடிகளில் மடை போட்டு அடைப்பது போல மென்மையான குழலால் ஸ்பரிசித்து சில வினாடி அமைதியாக்கி பல்லவியை ஆரம்பித்திருப்பது அழகு. பல்லவி முடிந்து காவிரி ஆற்றின் வெள்ள பெருக்கை இசையில் துவங்கி குழலால் மென்மையாக தவழ விட்டிருப்பார். நீர் நிலையின் வடிதலை குமிழி உடைவது போல கொடுத்திருக்கும் ஓசையானது சிந்தசைசராக இருக்கலாம். அந்த ஓசைக்கு துணையாக வயலின்களின் கோரஸ் அபாரமான கற்பனை வீச்சு. நதியின் பயண ஓட்டத்தை தன் இசையில் கற்பனையாய் கொடுத்த இடை இசையின் அழகை சரணத்தின் முதல் வரியான “துள்ளி குதிக்கும் பொன்னி நதி நான்” ஆரம்பிப்பதில் நம்மாள் உணர முடியும். அந்த இடம் பாடலின் பேரழகு என்றும் சொல்லலாம்.

இரண்டாவது இடை இசையை முழுக்க வித்தியாசப்படுத்தி காதலன் காதலியின் செல்லமான ஊடல் சிணுங்கல்களின் உச்சமாய் அமைத்திருப்பார். பாடலின் சிச்சுவேசன் அது போல இயக்குனர் சொல்லி அவ்வளவு அபார கற்பனைத் திறனின் உச்சமாய் அமைத்திருப்பார் போல. இந்த படத்தில் வரும் “தினமும் சிரிச்சி மயக்கி என் மனசை” பாடலின் இடையில் இந்த பாடலின் பல்லவி “வெள்ளி கொலுசு மணி வேலான கண்ணின் மணி” வரிகள் வந்து போவது குறிப்பிடதக்கது. அந்த பாடலில் இந்த பாடலின் இரு வரிகள் அமையும் போது மேலும் அந்த பாடல் அழகாக்கி வியப்பின் உச்சத்தில் நம்மை கிறங்கடிக்க வைத்திருப்பார். இரு பாடலுமே வரிகளை கங்கை அமரனும் பாடகர்களாக அருண்மொழி சித்ரா இருவரும் பாடி இருப்பது கூட இந்த கனெக்சன் கெமிஸ்டிரி ஒர்க்அவுட் ஆனதற்கு ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.

ஒரு பாடல், அந்த பாடலுக்கான கற்பனை ஓட்டத்துடன் இணையப் பெற்று இசைக்க அமையப் பெற்ற இசை கருவிகள், பாடகர், பாடகி, அந்த பாடலை தித்திக்க வைக்கும் பாடல் வரிகள் என இப்படி மெனக்கெட்டு அத்தனை அம்சங்களும் ஒருங்கே அமையப்பெற்று இன்றும் என்றும் நம் மனதை மயிலிறகால் வருடி  கேட்டு இன்புற்றிருக்க வைக்கும் வெள்ளி கொழுசு மணி போன்ற ஒவ்வொரு பாடலும் இசைஞானியால் இசை ரசிகர்களுக்கு அளிக்கப்பட்ட பொக்கிசம் என்றால் அது மிகையாகாது..

Kannan Natarajan

Leave a Reply