• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வீரமாமுனிவர்பற்றி மறந்தனையோ தமிழா

சினிமா

வீரமாமுனிவர் என்பது அவரது இயற்பெயர் அல்ல. கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி என்பதே அவரது இயற்பெயர். கிறித்தவ சமயப் பணி செய்வதற்காக, அவர் துறவு வாழ்க்கையை மேற்கொண்டார். கி.பி.1710இல் இந்தியாவுக்கு வந்தார். கோவா, கொச்சி, அம்பலக்காடு வழியாக, மதுரை மாவட்டத்தில் உள்ள காமநாயக்கன் பட்டியை வந்தடைந்தார். தமது சமயப்பணி தமிழ்நாட்டில் வெற்றி பெற வேண்டுமெனில், தமக்குத் தமிழறிவு மிகவும் இன்றியமையாதது என்று நன்குணர்ந்தார். மேலும் தமிழகம் வந்து தமிழராகவே மாறி, தம் பெயரையும் தத்துவ போதகர் என மாற்றிக் கொண்டு, தமிழ்ப்பணியும் புரிந்த இராபர்ட்-டி-நொபிலி என்னும் மேலைநாட்டு இறையடியாரைப் பற்றி இவர் கேள்விப்பட்டார். அவர்போலவே, தாமும் இறைப்பணியைச் செய்திட விரும்பினார். அதனால், இவரும் தமது பெயரைத் தைரியநாதர் என்று மாற்றிக் கொண்டார். பின்னாளில் மக்கள் இவரை வீரமாமுனிவர் என்றே அழைத்தனர். மதுரைத் தமிழ்ச் சங்கத்தார்தாம் இப்பெயரை இவருக்குச் சூட்டினர்
இந்நாட்டில் இருந்த சமயத் தொண்டர்களைப் போலவே, தாமும் நெற்றியில் சந்தனம் பூசி, காதில் முத்துக் கடுக்கன் அணிந்து, காவி அங்கி உடுத்தி, புலித்தோல் பதிக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்து கொண்டார். இப்படி, தோற்ற மாற்றம் செய்துகொண்டது மட்டுமல்ல, காய்கறி உணவை மட்டுமே உண்டு, சைவ உணவினராகவும் மாறிவிட்டார்.
இவர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள குருக்கள்பட்டி மற்றும் ஏலாக்குறிச்சி, கோனான்குப்பம் முதலிய பல இடங்களில் சமயத் தொண்டு புரிந்தார். தாம் சமயப்பணி புரிந்த இடங்களிலேயே, பல்வேறு தமிழ் இலக்கிய இலக்கண நூல்களையும் அகராதிகளையும் எழுதி வெளியிட்டார். தமிழ்நாட்டுக்கு வந்து தமிழராகவே வாழ்ந்தார் வீரமாமுனிவர். 1747ஆம் ஆண்டு தமிழ்நாட்டிலேயே உயிர்நீத்தார். உலகில் வாழ்ந்த சமய மற்றும் மொழித்தொண்டர்கள் வரிசையிலே இவ்வாறு தமக்கென ஓர் அழியாத, தனித்துவமான இடத்தைத் தேடிக் கொண்டார் பெஸ்கி எனப்பட்ட வீரமாமுனிவர்.
இத்தாலி நாட்டில் பிறந்து, தமது முப்பதாம் வயதிலேயே தமிழகம் வந்த அவர், தமிழில் சிற்றிலக்கியங்கள், இலக்கணம், உரைநடை, அகராதி, இசைப்பாடல்கள் முதலிய பல துறைகளில் நூல்கள் படைத்தார். அதோடு மட்டுமல்லாமல் இலக்கியப் படைப்புகளுள் மிக அரியதாகக் கருதப்படும் தேம்பாவணி எனப்படும் காப்பியம் ஒன்றையும் இயற்றி வெற்றி கண்டுள்ளார்.  மேலும் அவர், திருக்காவலூர்க் கலம்பகம், அடைக்கல மாலை, அன்னை அழுங்கல் அந்தாதி, கித்தேரியம்மாள் அம்மானை முதலிய சிற்றிலக்கியங்களையும், சதுரகராதி எனப்படும் அகராதியையும், தொன்னூல் விளக்கம் என்ற இலக்கண நூலையும் எழுதியுள்ளார். இவற்றுள் தொன்னூல் விளக்கம், குட்டித் தொல்காப்பியம் என அழைக்கப்படும் பெருமையுடையது. இப்படிப் பல்வேறு வகையான நூல்களைப் படைத்த ஒரு புலவரைக் காண்பது, தமிழில் மட்டுமன்று; உலகின் பிற மொழிகளிலும் கூட மிக அரிய ஓன்று 
தத்தம் தாய்மொழியிலே புலவர்கள் பல்வேறு இலக்கியங்களைப் படைப்பது பொதுவழக்கு. தமது தாய்மொழி யல்லாத பிறமொழிகளை அறிஞர்கள் கற்று அதில் ஆழ்ந்த புலமை பெறுவதும் உலகில் காணக்கூடியதே. எனினும் ஒருவருக்குத் தம் தாய்மொழி யல்லாத பிறமொழியில் இலக்கியம், இலக்கணம், அகராதி முதலிய அனைத்துத் துறைகளிலும் அரிய நூல்கள் பல படைக்கும் அளவுக்கு ஆற்றலும் அரும் புலமையும் அடைவது மிகமிக அரிய செயலாகும். செயற்கரிய அச்செயலைச் செய்து, உலக வரலாற்றிலேயே தனித்து நிற்பவருள் ஒருவராக வீரமாமுனிவர்  இருக்கிறார் 
விளக்கமாக சொல்வதெனில் 
Constanzo Beschi என்று அழைக்கப்படும் கான்சுடான்சோ பெசுக்கி என்பவர் இத்தாலிய நாட்டு கிறித்தவ மத போதகர் ஆவார். இவர் இத்தாலி நாட்டிலுள்ள கேசுதிகிலியோன் என்னும் இடத்தில் பிறந்தார். இவர் இயேசு சபையைச் சேர்ந்த குரு ஆவார். கிறித்தவ மதத்தைப் பரப்பும் நோக்கில், 1709ஆம் ஆண்டு இயேசுசபையில் குருவானபின், 1710-ஆம் ஆண்டு தமிழகத்துக்கு அதாவது அவரது 30-ஆவது அகவையில் வந்தார்.
23 நூல்களைத் தமிழில் எழுதியதுடன், இயேசு கிறித்துவின் வாழ்க்கை தொடர்பான நிகழ்ச்சிகளையும் இயேசுவின் வளர்ப்புத் தந்தையாகிய புனித யோசேப்பின் வரலாற்றையும் தமிழ்ப் பண்பாட்டுக்கேற்ப "தேம்பாவணி" என்ற பெருங்காவியமாக இயற்றியது இவரின் தமிழ்ப் புலமைக்குச் சான்றாக உள்ளது.
இவரது குருநாதர் சுப்ரதீபக் கவிராயர்  ஆவார் .சுப்பிரதீபக் கவிராயரிடம் தமிழ் இலக்கண, இலக்கியம் கற்று, இலக்கியப் பேருரைகள் நடத்துமளவுக்குப் புலமை பெற்றார்.

தமிழகத்தில் பல மாவட்டங்களில் கிறிஸ்தவ தேவாலயங்களைக் கட்டியுள்ளார். கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டம் முகாசபரூர் பாளையக்காரரின் உதவிகொண்டு புனித பெரிய நாயகி அன்னைக்கு திருத்தலம் கட்டி எழுப்பியவர் வீரமாமுனிவர். கோனான்குப்பம் புனித பெரியநாயகி அன்னைக்குத் தமிழ் கலாச்சாரப்படி அன்னை மாமரிக்குப் புடவை உடுத்தியபடி மரத்தாலான சுரூபங்களைச் செய்து அன்னைக்குப் பெருமையும் புகழும் உலகறியச் செய்துள்ளார் வீரமாமுனிவர். புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி வட்டத்தில் உள்ள தவளப்பள்ளம் கிராமத்தில் புனித பெரியநாயகி அன்னை ஆலயம், ஆவூர் கிராமத்தில் புனித பெரியநாயகி அன்னை ஆலயம், கடலூர் மாவட்டம் கோனான்குப்பம் கிராமத்தில் புனித பெரியநாயகி அன்னைக்கு ஆலயம், ஏலாக்குறிச்சி கிராமத்தில் புனித அடைக்கல அன்னை ஆலயம் ஆகியவற்றைக் கட்டி உள்ளார்.
வித்துவான்முத்துசாமிப் பிள்ளை வீரமாமுனிவரின் வாழ்க்கை வரலாற்றை 1822-இல் எழுதி, அந்நூலை அவரே ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து 1840-இல் வெளியிட்டார். அவர் 1840-இல் இறந்த பிறகு அவரது தமிழ் வரலாற்றை 1843-இல் அப்பாவுபிள்ளை பதிப்பித்தார். எனவே, வீரமாமுனிவர் வரலாறு பற்றி அச்சான முதல் நூல் இதுவே. ஆனால், இதற்கு முன்னரே சாமிநாத பிள்ளை என்பவர் முனிவரின் வரலாற்றை 1798-இல் எழுதியதாகவும், அது அச்சேறாமல் இருந்ததாகவும் அதைத் தாம் பயன்படுத்தியதாகவும் முத்துசாமிப் பிள்ளையே தம் வரலாற்றில் கூறியுள்ளார்
 தமது பெயரினை தைரியநாதசாமி என்று முதலில் மாற்றிக் கொண்ட . பின்னர், அப்பெயர் வடமொழி என்பதாலும், நன்கு தமிழ் கற்றதாலும், தமது இயற்பெயரின் பொருளைத் தழுவிச் செந்தமிழில் வீரமாமுனிவர் என மாற்றிக் கொண்டார்என்று கூறுகிறார்கள் .
இலக்கியச் சுவடிகளைப் பல இடங்கள் சென்று தேடி எடுத்ததால்; "சுவடி தேடும் சாமியார்" எனவும் அழைக்கப்பட்டார். இவற்றில் காண அரிதான பல பொக்கிசங்கள் சந்தேகத்தால் தெளுங்கர்களால்  அழிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
 மேல் நாட்டார் உணர திருக்குறள், தேவாரம்,நன்னூல்,ஆத்திசூடிபோன்ற நூல்களை பிற ஐரோப்பிய மொழியில் வெளியிட்டார்
தமிழ் கற்க ஏதுவாகத் தமிழ் - லத்தீன் அகராதியை உருவாக்கினார். அதில் 1000 தமிழ்ச் சொற்களுக்கு லத்தீன் விளக்கம் அளிக்கப்பட்டது. இதுவே முதல் தமிழ் அகரமுதலி ஆகும். பின்பு 4400 சொற்களைக் கொண்ட தமிழ்-போத்துக்கீய அகராதியை உருவாக்கினார்.
அக்காலத்தில் சுவடிகளில் மெய்யெழுத்துகளுக்குப் புள்ளி வைக்காமலே எழுதுவது வழக்கம். புள்ளிக்குப் ஈடாக நீண்ட கோடிருக்கும். மேலும் குறில், நெடில் விளக்கபல புதுமைகளை எழுத்துச் சீர் திருத்தம் செய்தார் .
தமிழ் இலக்கிய இலக்கணங்கள் கவிதை வடிவில் இருந்து வந்தன. அவற்றை மக்கள் எளிதில் படித்தறிய முடியவில்லை என்பதனை உணர்ந்து உரைநடையாக மாற்றியவர் இவர்
கொடுந்தமிழ் இலக்கணம் என்ற நூலில், தமிழில் முதல்முதலாகப் பேச்சுத்தமிழை விவரிக்க முனைந்தவர். வழக்கும் செய்யுளுமே ஒரு மொழியின் இலக்கணமாக அமையுமென்றாலும், இரட்டை வழக்கு மொழியான தமிழில், பேச்சுத் தமிழுக்கு இலக்கணம் அமைந்திராத காலத்தில் கொடுந்தமிழ் இலக்கணம் வகுத்தது சிறப்பான முயற்சி எனல் வேண்டும்.
திருக்குறளில் அறத்துப்பாலையும், பொருட்பாலையும் இலத்தீன் மொழியில் பெயர்த்தவர் வீரமாமுனிவர். உரைநடையில்
வேத விளக்கம்,
வேதியர் ஒழுக்கம்,
ஞானக் கண்ணாடி,
செந்தமிழ் இலக்கணம்,
பரமார்த்த குருவின் கதை,
வாமன் கதை
ஆகிய நூல்களைப் படைத்தார்.
தொன்னூல் விளக்கம் என்ற நூலில் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐந்து இலக்கணங்களை 370 நூற்பாக்களில் எடுத்துரைத்தார்.
திருக்காவல் ஊர்க் கலம்பகம், கித்தேரி அம்மன் அம்மானை இவரது பிற நூல்கள்.
1728-இல் புதுவையில் இவரின் "பரமார்த்த குருவின் கதை" என்ற நூல் இவரால் அச்சிட்டு வெளியிடப்பட்டது.
வீரமா முனிவர் எழுதிய பரமார்த்த குருவின் கதையை 1822 இல் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பெஞ்சமின் பாபிங்டன் என்பவர் "வீரமா முனிவர் திருச்சியில் சந்தா சாகிப் என்பவரின் அரசில் திவானாகப் பணியாற்றினார் என்றும், பின்னர் மரதர்களின் படையெடுப்பை அடுத்து, வீரமாமுனிவர் டச்சு ஆட்சியில் இருந்த காயல்பட்டினத்தில் வாழ்ந்து நோயால் தாக்கப்பட்டு இறந்தார்" எனக் குறிப்பிடுகிறார்
காவியத்தில் தேம்பாவணி இவர் இயற்றியது. மூன்று காண்டங்களில் 36 படலங்களைக் கொண்டு மொத்தமாக 3615 விருத்தம்|விருத்தப் பாக்களால் ஆனது இந்தக் காவியம். இதிலும் ஒரு சிறப்பு இருக்கிறது. பின்னிணைப்பாக யாப்பு வடிவங்களை அளித்திருக்கிறார். தமிழில் அமைந்த காப்பியங்களிலேயே, தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத வெளிநாட்டவர் ஒருவரால் இயற்றப்பட்டது எனும் பெருமை தேம்பாவணிக்கே உண்டு. மேலும் வீரமாமுனிவரைப் போல, வேறெந்தக் காப்பியப் புலவரும் சிற்றிலக்கியம், அகராதி, இலக்கணம் உரைநடை எனப் பிற இலக்கிய வகைகளில் நூல்களை எழுதவில்லை .
 நவம்பர் 8, 1680இல் பிறந்த இவர் , பெப்ரவரி 4, 1747இல் மரணமானார் .
சதுரகராதியை இயற்றியவர் வீரமாமுனிவர். ஆகவே அவரைத் "தமிழ் அகராதித் தந்தை" என்று அழைக்கின்றனர். "ஆரியன்" என்பதற்கு அறிவுடையவன், குரு, புலவன்... என்று சதுரகராதி பொருள் கூறுகிறது. "வீர" என்பது Costanzo (Constant) என்னும் இயற்பெயரின் மொழிபெயர்ப்பு. "வேதியன்" என்பது முனிவர், குரு என்பன போல மறைநூல் ஆசிரியனைச் சுட்டும். "ஆரியன்" என்றால் புலவன். ஆகவே, "வீராரிய வேதியன்" என்பதற்கு "சமய (மறை) தொழில் புரியும் வீரன் என்ற புலவன்" எனப் பொருள் கூறலாம்.
நசகாண்டம்
நவரத்தின சுருக்க மாலை
மகா வீாிய சிந்தாமணி
வைதிய சிந்தாமணி
சுரமஞ்சாி
பூவரசங்காய் எண்ணெய்
மேகநாதத்தைலம் கலிவெண்பா
பஞ்சாட்சர மூலி எண்ணெய்(ஆனந்தகளிப்பு)
சத்துருசங்கார எண்ணெய்(நொண்டிச் சிந்து)
வீரமெழுகு
முப்புசூத்திரம்(நொண்டிச் சிந்து)
அனுபோகவைத்திய சிகாமணி
வீாிய சிந்தாமணி இரண்டாம் பாகம்
குணவாடகம்
நிலக்கண்ணடாடி
என்று 
மருத்துவ நூல்களை எழுதியுள்ளார் .
வீரமாமுனிவர் அக்காலத்தில் திருச்சியை ஆண்டுவந்த சந்தா சாகிபைச் சந்தித்ததாகவும் அவர்மீது மதிப்பும் அன்பும் காட்டித் "தூய முனிவர்" என்று பொருள்படும் "இஸ்மத் சந்நியாசி" என்ற பட்டத்தை சந்தா சாகிபு வீரமாமுனிவருக்குக் கொடுத்ததாகவும் முத்துச்சாமிப் பிள்ளை வீரமாமுனிவரின் வரலாற்றில் கூறுகிறார்.
1680இல் பிறந்த வீரமாமுனிவருக்கு மூன்றாம் நூற்றாண்டுப் பிறப்புவிழா 1980இல் அவர் பிறந்த ஊராகிய காஸ்திலியோனே தெல்லே ஸ்டிவியரே என்னும் இடத்தில் கொண்டாடப்பட்டது. அப்போது முனிவருக்குச் சிலை நிறுவி, நினைவுப் பதக்கமும் மலரும் வெளியிடப்பட்டன. அவ்விழாவின்போது தம் மண்ணின் மைந்தர் வீரமாமுனிவருக்குத் "தமிழ் மொழியின் தாந்தே" (Il Dante della lingua Tamil) என்னும் பட்டம் அளித்து மக்கள் சிறப்பித்தார்கள். ஆகவே தமிழ்நாட்டில் வீரமாமுனிவர் என்று அழைக்கப் பெறுவது போல், முனிவர் பிறந்த ஊரில் "தமிழ் மொழியின் தாந்தே" என்று அழைக்கப்படுகிறார்.
"வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு" என்று தமிழர் பெருமைப்படுவதுபோல, இத்தாலி நாட்டில் Divina Commedia (தெய்வீக இன்பிலக்கியம்) என்னும் தலைசிறந்த நெடும்பாடலை யாத்த புலவராகிய தாந்தே அலிகியேரி (Dante Alighieri) போன்று தேம்பாவணி என்னும் தீஞ்சுவைக் காவியத்தையும் பரமார்த்த குருவின் கதை போன்ற நகைச்சுவை இலக்கியத்தையும் ஆக்கிய வீரமாமுனிவரைத் தமிழுக்குத் தாம் அளித்தமை பற்றி அவ்வூரார் பெருமைப்படுகின்றனர்.
கொடைக்கானல் மலைமீது அமைந்த செம்பகனூர்ப் பழஞ்சுவடி நூலகத்தில் வீரமாமுனிவர் இயற்றிய தமிழ்-இலத்தீன் அகராதிப் பிரதி ஒன்று உள்ளது. பார்த்தாலே பழங்கால ஏடு என்ற முறையில் அதன் தோற்றமும் வடிவும் அமைந்துள்ளன. அந்த ஏட்டில் அகராதிப் பகுதிக்குப் பின்னிணைப்பாக வீரமாமுனிவர் பரமார்த்த குருவின் கதை என்னும் புனைவை இணைத்துள்ளார்.
இந்த அகராதி நூலை முனிவர் 1744இல் (அதாவது தாம் இறப்பதற்கு மூன்றாண்டுகளுக்கு முன்னால்) இயற்றினார். ஆனால் பரமார்த்த குருவின் கதையை அவர் ஏற்கெனவே 1728இல் எழுதிய "வேத விளக்கம்" என்னும் நூலில் பயன்படுத்தியிருந்தார். ஆகவே அக்கதை 1728க்கு முன் தோன்றியிருக்க வேண்டும். முனிவர் அதைச் செம்மைப்படுத்தி, 1744இல் இயற்றிய தமிழ்-இலத்தீன் அகராதியில் இணைத்திருப்பார்
தாம் இயற்றிய பரமார்த்த குருவின் கதையை வீரமாமுனிவரே இலத்தீனிலும் மொழிபெயர்த்தார். முனிவர் அக்கதையை ஒவ்வொரு பக்கத்திலும் ஒரு பாதி தமிழும் மறு பாதி அதன் மொழிபெயர்ப்பாக இலத்தீனும் என்று அமைத்தார். அக்கதையைத் தமிழ்-இலத்தீன் அகராதியின் பின்னிணைப்பாகப் பதித்தார். இலத்தீனில் அமைந்த பரமார்த்த குரு கதைப் பகுதியின் கையெழுத்தும், முனிவர் தம் கைப்பட இலத்தீன் மொழியில் எழுதி உரோமைக்கு அனுப்பிய கடிதங்களில் காணப்படும் கையெழுத்தும் ஒன்றே என்பதை இராசமாணிக்கம் கண்டறிந்தார்.
அதுபோலவே, தமிழ்-இலத்தீன் அகராதியில் வருகின்ற கையெழுத்து எழுத்தர் ஒருவரின் கையெழுத்தாக இருந்த போதிலும், அதில் வருகின்ற எண்ணற்ற திருத்தங்கள் வீரமாமுனிவரே கைப்படச் செய்தவை என்பதும் புலனாயிற்று. மேலும், இத்திருத்தங்களில் முதலில் தமிழ்ச்சொல் வர, அதன் விளக்கம் அதே கையெழுத்தில் இலத்தீனில் வந்தபடியால், முனிவரது தமிழ்க் கையெழுத்து பிடிபட்டது.
இதே தமிழ்க் கையெழுத்தில் பரமார்த்த குருவின் ஆறாம் கதை அமைந்திருப்பதும், அதே கையெழுத்தில் இலண்டனில் உள்ள சுவடியில் தேம்பாவணி மூலமும் உரையும் அமைந்திருப்பதும்   நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியவை 
வாழ்க தமிழ்

Manikkavasagar Vaitialingam
 

Leave a Reply