• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நல்லூர் கண்ட  தமிழர்கள் நலிந்த வரலாறு

இலங்கை

யாழ்ப்பாண அரசைப் போர்த்துக்கீசர் தங்கள் ஆளுகைக்குள் கொண்டுவரமுன்னர், இது அவ்வரசின் தலைநகரமாக இருந்து வந்தது. ஆரியச் சக்கரவர்த்திகள் என அழைக்கப்படும் வம்சத்தினர் இங்கிருந்து ஆண்டுவந்தனர். இவர்கள் சிங்கையாரியர்கள் அல்லது சிங்கைநகராரியர் எனக் குறிப்பிடப்படுவதை அடிப்படையாக வைத்து, ஆரம்பகால ஆரியச் சக்கரவர்த்திகள் சிங்கைநகர் என்னும் இன்னோரிடத்தைத் தலைநகராகக் கொண்டிருந்தனரென்றும், 15 ஆம் நூற்றாண்டில், தென்னிலங்கையைச் சேர்ந்த கோட்டே அரசனின் சார்பில் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய சப்புமால் குமாரயா எனப்பட்ட சண்பகப்பெருமாள் என்பவனே நல்லூரைக் கட்டுவித்தானென்றும் சிலர் கூறுவர். எனினும், 13 ஆம் நூற்றாண்டளவில் முதலாவது ஆரியச் சக்கரவர்த்தியான கூழங்கைச் சக்கரவர்த்தியே இந்நகரைக் கட்டுவித்தவன் என்பதும், சிங்கைநகர், நல்லூரின் இன்னொரு பெயர் என்பதுவும்,  ஆய்வாளர்களுடைய கருத்து.
1620 இல், போர்த்துக்கீசப் படைகள், ஒலிவேரா என்பவன் தலைமையில் நல்லூரைக் கைப்பற்றின. அவன் சிறிதுகாலம் நல்லூரிலிருந்து நிர்வாகத்தை நடத்திவந்தானாயினும், இக்காலப்பகுதியில் நடைபெற்ற பல தாக்குதல்களைக் கருத்திற்கொண்டு, பாதுகாப்பின் நிமித்தம், நிர்வாகம், நல்லூரையண்டிக் கடற்கரையோரமாக இருந்த யாழ்ப்பாணத்துக்கு மாற்றப்பட்டது.
போர்த்துக்கீசருக்கு முந்திய நல்லூரின் அமைப்புப் பற்றியும், அங்கிருந்த கட்டிடங்கள் பற்றியும் முழுமையாக அறிந்துகொள்ளக்கூடிய அளவுக்குப் போதிய தகவல்கள் இல்லை.
அக்காலத்துக் கட்டிடங்கள் அல்லது அவற்றின் பகுதிகள் இன்றுவரை நிலைக்கவில்லை என்றே கொள்ளலாம். அரசனின் அரண்மனையையும், வேறு சில முக்கியஸ்தர்களின் வாசஸ்தலங்களையும்விடக் கோயில்கள் மட்டுமே நிலைத்திருக்கக்கூடிய பொருட்களால் கட்டப்பட்டிருக்கக்கூடும். நகரின் நான்குதிசைகளிலும், கந்தசுவாமி கோயில், வீரமாகாளியம்மன் கோயில், கைலாசநாதர் கோயில், வெயிலுகந்த பிள்ளையார் கோவில், நாயன்மார்கட்டு அரசடிப்பிள்ளையார் ஆலயம்,சட்டநாதர் கோயில் ஆகிய கோயில்கள் இருந்ததும், யமுனை நதியிலிருந்து கொண்டுவந்த நீர் விடப்பட்ட யமுனா ஏரி எனப்பட்ட கேணியொன்றிருந்ததும் அக்காலத்திலும், அதன்பின்னரும் எழுதப்பட்ட சில நூல்கள்மூலம் தெரியவருகின்றது.
நல்லூர் யாழ்ப்பாண அரசின் தலைநகரமாக இருந்ததற்கு ஆதாரமாக இன்று இருப்பவை, அக்காலத்திய அரண்மனையிருந்ததாகக் கருதப்படும், சங்கிலித்தோப்பு எனப்படும் நிலமும், அதிலுள்ள ஒரு நுழைவாயில் வளைவும், அதற்கு அண்மையிலுள்ள மந்திரிமனை எனப்படும் ஒரு வீடுமாகும். இவற்றைவிட, நாயன்மார்கட்டு குளம், பண்டாரக்குளம், பண்டாரவளவு, இராஜ வீதி, கோட்டை வாயில் முதலிய அரசத்தொடர்புகளைக் குறிக்கும் இடப்பெயர்களும் உண்டு. சங்கிலித்தோப்பு வளைவும், மந்திரிமனையும் ஒல்லாந்தர் காலக் கட்டிடங்களின் பகுதிகளென்பது அவற்றின் கட்டடக்கலைப் பாணியிலிருந்து தெரிகிறது.
 சிங்கை ஆரியர்கள் காலத்தில் எழுதப்பட்ட கைலாயமாலை, வையாபாடல் போன்ற நூல்களும், ஒல்லாந்தர் காலத்தில் ( அதாவது 1658 தொடக்கம் 1796 வரை) எழுதப்பட்ட யாழ்ப்பாண வைபவ மாலை நூ
லும் பண்டைய நல்லூரைப்பற்  றிக் கூறுகின்றன
அன்றைய நகர் முத்திரை சந்தையை மையமாக கொண்டு அமைந்திருந்தது. அதன் அண்மையில் பண்டை நல்லூர் கந்தசுவாமி ஆலயம் இருந்தது (தற்போது St James' Church இருக்கும் இடம்). 2 வீதிகள் அம்முத்திரை சந்தையில் வந்து சேரும்: வடக்கு-தெற்கு வீதி மற்றும் கழக்கு-மேற்கு வீதி. நகரை சுற்றி மதில்கள் கட்டபட்டன. நாங்கு திசைகளிலும் நாங்கு நுழைவாய்கள் அமைந்திருந்தன. அங்கு காவல் தெய்வங்களுக்கு கோயில்கள் கட்டப்பட்டிருந்தன
கைலாய மாலை (1519–1619 இடையில் எழுதப்பட்டது ) யாழ்ப்பாண அரசு உருவாகிய கதையை சொல்லுகிறது. பாண்டி மழவன் யாழ்ப்பாண தமிழ் குடிகள் படும் கஷ்டத்தை கண்டு மதுரைக்கு சென்று ஓர் இளவரசனை கூட்டிக் கொண்டு யாழ்ப்பாணம் திரும்புகிறான்..கைலாச மாலையை வாசித்து அறியுங்கள்
இலங்கையின் வடபகுதியில்  நாகர்கள் என்ற நாகரிகம் மிகுந்த குழுவினர் வாழ்ந்து வந்த படியால், அப்பகுதி நாகதீபம் என்றழைக்கப்படலாயிற்று. இந்நாட்டுக்குப் புண்ணியபுரம், காந்தருவ நகரம், வீணாகானபுரம், எருமை முல்லைத்தீவு, மணற்றிடர், மணற்றி, யாழ்ப்பாணம் எனப் பல பெயர்கள் வழங்கலாயின.
கி.பி. எட்டாம் நூற்றாண்டில் கலிங்க அரசன் உக்கிரசிங்கன் கதிரைமலையரசைக்  கைப்பற்றி மாருதப் புரவல்லியெனும் சோழ ராசகுமாரியை மணந்து, பின்னர் கதிரைமலையை விட்டு நீங்கி, சிங்கை நகரைத் தன் இராசதானியாக்கினான். பருத்தித்துறைக்கண்மையில் மணல்மேடுகள் உள்ள வல்லிபுரமே சிங்கைநகராகப் பண்டைக்காலத்தில் விளங்கியது.
நாகர்கள் ஆட்சிபுரிந்த காலத்தில் கந்தரோடையென இப்பொழுது வழங்கப்படும் கதிரமலை அல்லது கதுருகொடையே இராசதானியாக விளங்கியது.
பருத்தித்துறை கணித்தாய் மணல்மேடுகள் பொருந்தியிருக்கின்ற வல்லிபுரமே பூர்வகாலச் சிங்கைநகராம். நல்லூர்,
புவனேகவாகுவெனப் பிற்படக் கோட்டை இராச்சியம் வகித்த செண்பகப்பெருமாள் பதினைந்தாம் நூற்றாண்டிற் கட்டுவித்தது . விபரங்கள் அறிய எனது வையா னூல் பதிவைப் பாருங்கள்
கி.பி. 1380 ஆம் அண்டளவில் செயவீரசிங்கை ஆரியன் என்பவன் செகராசசேகரன் (ஐந்தாவது) என்னும் பட்டத்துடன் அரசனானான். இவனே செகராசசேகரம் என்னும் வைத்திய நூலையும், செகராசசேகரமாலை என்னும் சோதிட நூலையும், காரிவையாவின் கணக்கதிகாரம் என்னும் நூலையும், இயற்றுவித்தவன். தட்சண கைலாச புராணமும் இவன் காலத்திலேயே ஆக்கப்பட்டது. யாழ்ப்பாணத்த அரசர் பலருள்ளும் இச் செயவீரனே நடுநிலை தவறாத செங்கோற் சிறப்பாலும் படைவலியாலும் செந்தமிழ் அறிவாலும் சிறந்தவன்.
கி.பி. 1414 ஆம் ஆண்டளவில் செயவீரன் சகோதரன் குணவீர சிங்கையாரியன், பரராசசேகரன் என்னும் பட்டத்துடன் அரசனானான். இவனுக்குப் பின் இவன் மகன் கனகசூரிய சிங்கையாரியன் பதினைந்தாம் நூற்றாண்டின் முற்பகதியில் சிங்கை நகரில் ஆட்சி புரிந்து வந்தான். அக்காலத்தில் (ஜயவர்த்தனபுரம்) கோட்டையை ஆண்ட ஆறாம் பராக்கிரமபாகு யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றுமாறு தனது வளர்ப்புப் பிள்ளையாகிய செண்பகப் பெருமாளை (சப்புமால் குமாரய) ஒரு சே னையுடன் அனுப்பினான்.
இந்தச் செண்பகப்பெருமாள்ஆ றாம் பராக்கிரமபாகுவின் தத்தபுத்திரனாவான்

“கோட்டை அரசனாகிய ஆறாம் பராக்கிரமபாகு சபைக்க மலையாளத்தேசத்திலிருந்து பணிக்கன் ஒருவன் வந்தான். அவனை அரசன் உபசரித்து, அவன் தேகவலியாலும் வாட்போர்த்திறத்திலும் ஈடுபட்டவனாய்த், தன் குலத்தினளாகிய ஒரு கன்னிகையை அவனு;கு மணம் முப்பித்தான். இப் பணிக்கனுக்குச் செண்பகப்பெருமாள் (சப்புமால் குமாரய), ஜெயவீரன் (அம்புலகலகுமாரய) எனவிரு குமாரர்கள் பிறந்தார்கள். பராக்கிரமபாகு தனக்குப் புத்திரர்கள் இல்லாமையால் இவர்களைத் தனது தத்த புத்திரர்களாக வைத்து வளர்த்து வந்தான்.
இஃதிங்ஙனமாக, பராக்கிரமபாகுவின் மகள் உலகுடையதேவி நன்னூர்த் துணையார் * என்பவனை மணந்து ஜெயவீரன் என்னும் மகனையீன்றாள். இந்நிகழ்ச்சி பராக்கிரமபாகுவின் எண்ணங்களை மாற்றிவிட்டது. தான் இறந்தபின் தத்த புத்திரர்களில் ஒருவன் இராச்சியத்துக்குவரின் தன் பேரப்பிள்ளைக்கு அரச பதவி இல்லாது போய்விடும் என்ற அச்சத்தால் பராக்கிரமபாகு அவ்விரு குமாரர்களையும் அகற்ற வேண்டுமென எண்ணி, வன்னியர்களை யடக்கி, யாழ்ப்பாண அரசனையும் வென்று வருமாறு செண்பகப்பெருமாளை அனுப்பினான்.
இவர்கள் உயிருடன் திரும்ப மாட்டார்கள் என்று பராக்கிரமபாகு கருதினான். செண்பகப்பெருமாள் பிரபலம்பெற்ற குதிரை வீரன் ; உருவத்தால் இராட்சதனைப்போலும் காத்திரமுடையவன்; மகா பலங்கொண்டவன். தகுந்த படையுடன் வந்த இவன் கறப்புக்குதிரை மீதமர்ந்து, எதிரி படையுட் புகுந்து அநேகரைத் தன் வாளுக்கிரையாக்கி, தமிழ்ச் சேனையைப் புறங்கொடுத்தோடச் செய்தான். போரில் தோற்ற  கனகசூரியன் தன்  குடும்பத்தாருடன் இந்தியாவுக்கோடித் திருக்கோவலூரிற் வசிகலாயினான் .
“ செண்பகப்பெருமாள் யாழ்ப்பாணத் தலைநகருட் புகுந்து, மாடமாளிகைகளைத் தரைமட்டமாக்கி, அநேக அதிகாரிகளைச் சிறைப்படுத்தி அவர்களுடன் ஜயவர்த்தன கோட்டைக்க மீண்டான். பராக்கிரமபாகு இவனை ‘ ஆரிய வேட்டையாடும் பெருமாள் ’ எனப் புகழ்ந்து, யாழ்ப்பாணத்தையே அரசுபுரியுமாறு அனப்பினான். பராக்கிரமபாகுவின் கபட சிந்தையை யறியாத செண்பகப்பெருமாள் யாழ்ப்பாணம் போய்ப் பழைய தலைநகர் பாழாய்விட்டமையினால், நல்லூரிலே கி.பி. 1450 அம் ஆண்டளவில் ஒரு புத நகர் எடுப்பித்துச் சிறீசங்கபோதி புவனேகவாகு என்னும் சிங்கள நாமத்தோடு பதினேழு வருடங்களாக அரச செய்து வந்தான். இவன் யாழ்ப்பாணத்தை வென்ற புகழ் சிங்கள நாடெங்கும் பரவிப் பேரானந்தத்தை விளைத்தது. இவ் வெற்றியைப் புகழ்ந்து ‘கோகிலசந்தேஸ’ என்னும் குயில்விடு தூதுப் பிரபந்தம் தேவி நுவரையைச் சேர்ந்த இருகல் கலத்திலக்க பரிவேனாதிபதி எனும் பெளத்த குருவினால் இயற்றப்பட்டது.”
“ இலகிய சகாத்த மெண்ணூற் றெழுபதா மாண்ட தெல்லை
அலர்பொலி மாலை மார்ப னும்புவனேக வாகு
நலமிகும் யாழ்ப்பா ணத்துநகரிகட் டுவித்து நல்லைக்
குலவிய கந்த வேட்குக் கோயிலும் புரிவித் தானே.”
நல்லூர்க் கந்தசுவாமி கோயிலைக் கட்டியவன் புவனேகவாகு என்பது “கைலாயமாலை” யில் வந்துள்ள மேற்படி  தனிச் செய்யுளால் அறியக்கிடக்கின்றது :
இப் புவனேகவாக திரிசங்கபோதி எனவும் அழைக்கப்பட்டான் என்பது ஶ்ரீமான் ஆ. முத்துத்தம்பிப்பிள்ளையவர்கள் எழுதிய ‘யாழ்ப்பாணச் சரித்திரத்தில், விசுவநாத சாஸ்திரியார் சம்பவக் குறிப்பு எனும் கையெழுத்துக் பிரதியிலிருந்த எடுத்துக் காட்டிய செய்யுளால் நன்கு புலப்படுகின்றது. அச் செய்யுள் வருமாறு :
“இலகிய சகாத்த மெண்ணூற் றெழுபத்து நான்கி
னலர்திரி சங்க போதி யாம்புவ னேக வாகு
நலமுறும் யாழ்ப்பாணத்து நகரி கட்டுவித்து
குலவியகந்தனார்க்குக் கோயிலொன்றமைப்பித்தானே.”
இவன் தான் நல்லூர்க் கந்தசுவாமி கோயிற் கட்டியத்தில் இன்றும்,
 அக்கட்டியம் பின்வருமாறு
சிறீமான் மஹாராஜாதிராஜ அகண்ட பூமண்டலப்ர
தியதிகந்தர விச்றந்த கீர்த்தி
சிறீ கஜவல்லி மாவல்லி சமேத சுப்பிரமண்ய
பாதாரவிந்த ஜநாதிரூட சோடச
மகாதான சூர்யகுல வம்சோத்பவ சிறீசங்க
போதி புவனேகவாகு
என்று போற்றப்படுகிறான்.
யாழ்ப்பாணத்து இராசதானியாகிய நல்லூரைச் செண்பகப் பெருமாள் நன்கு திருத்தி, நல்லைக் கந்தவேள் ஆலயத்தையம் ஆக்குவித்தான்
கி.பி.1467 ல் கோ ட்டையை யாண்ட ஆறாம் பராக்கிரமபாகு தன் பேரன் ஜெயவீரனுக்கு இலங்கையரசை யீந்து முடிசூட்டிச் சிலநாளில் இறந்தான். இதைக் கே ள்வியுற்ற செண்பகப் பெருமாள் யாழ்ப்பாணத்திலிருந்த புறப்பட்டுக் கோட்டைக்குச் சென்ற ஆங்கரசனாயிருந்த சிறுவனைக் கொன்று ஆறாம் புவனேகவாகு எனும் பெயருடன் கோட்டை யரசனானான்.
யாழ்ப்பாணத்தில் விஜயபாகு என்னும் சிங்களனொருவன் அரசனாகப் புவனேகவாகுவால் நியமிக்கப்பட்டான். இவன் ஆட்சிக்காலத்தில் கனகசூரியன் தன் புத்திரர்களுடனும் சேனைகளுடனும் யாழ்ப்பாணம் மீண்டும் வந்து, விஜயபாகுவுடன் போர் தொடுத்து அவனைக் கொன்று மீண்டும் தானே வட இலங்கை அரசனாகி நல்லூரில் இருந்தரசாண்டான்.
கனகசூரியன் நல்லூர் நகரைச் சிறந்த இராசதானியாக்கப் பெருமுயற்சி செய்தான். இராச வீதிகளும், அரண்மனைகளும், அவற்றைச் சூழ்ந்து குதிரைப்படை, யானைப்படைக் கொட்டாரங்களும், சிங்கார வனமும், பட்டாலும் பருத்தி நூலாலும் நுண்ணிய தொழில் புரி மக்கள் இருக்கைகளும், தச்சர், கொல்லர், ஓவியக்காரர், பொன்செய்வினைஞர், இரத்தின வணிகர், புலவர், பாணர் இவர்களுக்கு வெவ்வே றிருக்கைகளும், வேதமோதும் அந்தணர் மந்திரங்களும், மருத்துவர், சோதிடர் வைகும் வளமனை வீதிகளும் அமைத்து நல்லூரை நல்ல ஊராகப் பிரபல்யமுறச் செய்தான்.
வெவ்வேறு தொழிலாளர் வாழ்ந்த வீதிகள் அவர்களின் பெயரால் இன்றும் வழங்கப்படுகின்றன. மேலும் இவர்களுக்கெனப் பல குளங்களும் தலைநகரில் அமைக்கப்பெற்றன.
அடியார்க்குநல்லார் குளம் அல்லது கண்ணாதிட்டிக்குளம் அம்மைச்சிகுளம் அல்லது அம்பச்சி குளம், அஞ்சுதேவன்குளம் அல்லது வட்டக்குளம், ஆரியக்குளம், இலந்தைக்குளம், இளம்பிள்ளையார் கோயிற்குளம், உப்புக்குளம், கற்குளம், சின்னக்குளம், தாமரைக்குளம், தேவரீர்குளம் (தாராக்குளம்), நரியன் குண்டுக்குளம், நாயன்மார்குளம், நெடுங்குளம், பண்டாரக்குளம், பூதராயர் அல்லது கல்லவிராயகுளம், பரவைக்குளம், பாற்குளம், பிரப்பங்குளம்,
பிராமண கட்டுக்குளம், புல்லுக்குளம், அல்லது புளுக்குளம் (மணிக்கூட்டுக் கோபுருத்தடி), மக்கிக்கிடங்குக்குளம், மக்கியக்குளம், மறவக்குளம், முதலிக்குளம், மூன்றுகுளம், யமுனாரி, வண்ணாண்குளம்  முதலிய குளங்கள் ஆங்காங்கே வாழும் மக்களுக்கு நீர் வசதிகளை அளித்து வந்தன.
கனகசூரியனுக்குப் பின் அவன் மகன், சிங்கைப்பரராசசேகரன் எனும் நாமத்தோடு கி.பி. 1478ஆம் ஆண்டளவில் அரசனானான். இவன் தந்தையினும் சிறந்தவனாய் நல்லூர் இராசதானிக்கு வடபாலில் சட்டநாதர் கோயிலையும், குணபாலில் வெயிலுகந்த பிள்ளையர் கோயிலையும், தென்பாலில் கைலாயநாதர் ஆலயத்தையும், குடதிசையில்  வீரமாகாளியம்மன் ஆலயத்தையுங் கட்டுவித்துத் தன் தலைநகரை முன்னையிலும் அணிபெற விளங்கவைத்தான்.
கந்தசுவாமி கோயிலுக் கண்மையிற் பகர வடிவினதாய ஓர் ஏரி அமைப்பித்து, யமுனா நதியின் திவ்ய தீர்த்தத்தைக் காவடிகளிற் காவி , அதனை யமுனையேரி (யமுனாரி) எனப் பெயர் தந்தழைத்தான். இந்த முப்புடைக் கூபம் இப்பொழுது நல்லூர்க் கிறீஸ்தவ தேவாலயத்துக்கண்மையில் உள்ளது. இதுவே தீர்த்தக் கேணியாக உபயோகிக்கப்பட்டது
 செண்பகப்ருமாள் வெற்றிகொண்டபோது சிதைத்த தழிழ்ச் சங்கத்தை மீண்டும் தாபிக்க விரும்பி, இவன் புலவர்களை ஒருங்கு சேர்த்து முன்போற் கழகம் நிறுவி, வித்துவான்களுக்கு வேண்டிய சன்மானங்கள் செய்து, தமிழ் மொழியைப் பொன்போற் பேணி வளர்த்து வந்தான்.
இவன் அரச அவையில் இவன் மைத்துனரும், வடமொழி தென்மொழியாகிய இருமொழிகளிலும்; வல்ல புலவருமாகிய அரசகேசரி,என்பவர்  ‘இரகுவம்சம்’ எனும் நூலை வடமொழியிலிருந்து பெயர்த்துத் தமிழிலாக்கி அரங்கேற்றினார்.
இவர் நல்லூரிலேயே வாழ்ந்து வந்தார். ‘பரராசசேகரன் உலா’வும் இவ்வரச ன் காலத்திலேதான் ஆக்கப்பட்டது.
நீர்வேலியிலுள்ள அரசகேசரிப் பிள்ளையார்கோயிலும், நல்லூரிலுள்ள அரசகேசரி வளவும் இப்புலவரின் பெயரை எங்களுக்கு இன்றும் ஞாபகப்படுத்தும் சின்னங்களாகவுள்ளன.
அரசகேசரி எதிர்மன்னசிங்கப் பரராசசேகரன் காலத்தில் (பதினாறாம் நூற்றாண்டு) வாழ்ந்தவன் என்பது சுவாமி ஞானப்பிரகாசர் கருத்தாகும்.
சிங்கைப் பரராசசேகரனுக்குப் பின் ஆண்ட யாழ்ப்பாணத்தரசர்களும் இக்கோயிலின் பரிபாலனத்தில் அக்கறை எடுத்து வந்தனர்
பதினாறாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், அதாவது 1560ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 20ஆந் திகதி  போர்த்துக்கீச கப்பற்படை யாழ்ப்பாணக் களப்பில் (கரையூர்) நங்கூரம் போட்டது. 1200 பேரைக் கொண்ட பறங்கிப் படையினர் கரையில் நின்ற தமிழ்ப்படையை வென்று, நல்லூர் நகர் மதிலை உடைத்து உட்சென்றனர். சங்கிலி அரசன் கோப்பாய்க்கு ஒளித்தோடினான். பின்னர் போர்த்துக்கீசர் இவ்வரசனுடன் சமாதான உடன்படிக்கையை செய்து மீண்டனர்.
யாழ்ப்பாணத்தரசன் போர்த்துக்கீசரை ஒதுக்கிவிட முயற்சி செய்வதை மன்னாரிலிருந்த போர்த்துகீச தளபதி கோவை அதிபதிக்கறிவித்தான்.
அதனால், அந்திரேபூர்த்தாடு தே மென்டொன்சா என்னும் தளபதி பெரிய கப்பற் படையுடன் 1591ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 26ஆம் திகதி கொழும்புத்துறையி லிறங்கினான். யாழ்ப்பாணத்தரசனுடைய படை வீரர் எதிர்த்துப் போராடியும், போர்த்துக் கேசர்  இறங்குவதைத் தடுக்க முடியவில்லை. ஒக்ரோபர் மாதம் 28ஆம் திகதி பறங்கிப்படை நல்லூரை  கைப்பற்றிக் கொண்டது .
.அதாவது
தங்கள் நாட்டை அந்நியர் கைப்பற்றாமற் காப்பதில் தங்கள் உயிரையும் ஒருபொருளாக மதியாது யுத்தஞ் செய்யத் தமிழர் திரண்டெழுந்தனர்,  சைவக் கோயில்களை அழியாமற் காக்கவேண்டுமானால், அந்நியர்களை ஒதுக்கவேண்டு மென்று சைவர்கள் வீராவேசத்துடன் போர்புரிந்தனர். கோயிற் பூசர்கள், யோகிகள் முதலியோரும் இதில் ஈடுபட்டனர். பறங்கிப்படை முன்றேிச் செல்ல, வீரமாகாளியம்மன் கோயிலுக்கும் கந்தசுவாமி கோயிலுக்கும் இடையில் அரசனின் மெய்காப்பாளர்களாகிய மகா வீரர்களைக் கொண்ட அத்தப்பத்துப்படை தங்கள் உயிரைக்கூட வெறுத்துச் சத்துருக்களை எதிர்த்துப் போராடியது அக் கடும் போரிற் கலந்த தமிழரெல்லாம் மாண்டனர்.
பரந்கியரிடமிருந்து
நல்லூர்க் கந்தசுவாமி கோயிலையும் ஏனைய சைவக் கோயில்களையும் பாதுகாக்கச்  சைவர்கள் தம் உயிரையே தியாகஞ் செய்தார்கள். இதன் பின்னரும் இடைக்கிடை தமிழர் தஞ்சாவூர்ப் படைகளினுதவியுடன் பறங்கிகளுக்கெதிராகக் கிளம்பியும் வெற்றிபெற முடியவில்லை. யாழ்ப்பாணத்தரசர்களும் ஒழுங்காகத் திறை கொடுத்துவரவில்லை. எனவே கொழும்பிலிருந்த போர்த்துக்கீசத் தேசாதிபதி கொன்ஸ்தாந்தீனு தெசா என்பவன் பிலிப்தெ ஒலிவெறா எனும் வீரசூரத் தளபதியை யாழ்ப்பாணத்துக்கனுப்பினான். இவன் யாழ்ப்பாணத்தரசனைச் சிறைப்படுத்தி, 1621ஆம் ஆண்டு பெப்ருவரி மாதம் 2ஆந் திகதி நல்லூரைத் தனது உறைவிடமாக்கினான். இவன் நல்லூர்க் கந்தசுவாமி கோயிலைத் தரைமட்டமாக்கி, அஃது இருந்த இடமுந் தெரியாமல் அத்திவரத்தையும் கிளறிவிடும்படி கட்டளையிட்டான். ஊரவர்கள் மனம் நொந்து வருந்தி ஓலமிட்டனர். இக் கோயிலை அழியாமல்விட்டால் அவன் கேட்ட வற்றையெல்லாம் தருவதாகப் பலமுறை கூறினர். போர்த்துக்கீசஒலிவேரா  இவற்றிற்குச் செவிமடுக்காது நல்லூர்க் கந்தசுவாமி கோயிலைத் தரைமட்டமாக்கினான்.
 சைவசமயத்தின் அரணாகவிருந்த கோயில் அழிந்தமை சைவசமையம் குன்றுங் காலம் ஆரம்பித்துவிட்டதற்கு அறிகுறிபோலும், சைவ மன்னர்கள் தாபித்து தலைவணங்கி வந்த பெருங் கோயில் அவர்கள் ஆட்சிமுடிவடையவே அக்கோயிலும் தரைமட்டமாயிற்று,
நல்லூர்க் கந்தன் ஆலயத்தை அழித்துவிட்டதால், அப்பெருமான் வழிபாட்டையும் வேருடன் ஒழித்துவிட்டதாகப் பகற்கனவு கண்டான் ஒலிவேறா..
“நல்லைக் கந்தசுவாமி கோயிலை இடிக்குமுன் அதன் மெய்காப்பாளனா யிருந்த சங்கிலி என்னும் சைவப் பண்டாரம் அக் கோயில் விதானங்கள் வரையப்பட்டிருந்த செப்புச் சாசனங்களையும் திருவாபரணங்களையும் கொண்டு மட்டக்களப்புக்கு ஓடினான். அங்கிருந்த சிலவிக்கிரகங்களை எல்லாம் அக்கோயிற் குருக்கள்மார் பூதராயர் கோயிலுக்குச் சமீபத்திலுள்ள குளத்தில் புதைத்துவிட்டு நீர்வேலிப்பகுதிக்கு ஓடினர்.” என ஶ்ரீமான் ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை அவர்கள் தமது நூலிற் கூறியுள்ளார்கள்.
1658ஆம் ஆண்டு ஜீன் மாதம் 21ஆம் திகதி யாழ்ப்பாணம் ஒல்லாந்தர் கைவசமாயிற்று. இவர்கள் புறொட்டஸ்தாந்த கிறீஸ்தவ மதத்தைப் பரப்புவதிலும் அதற்குரிய தேவாலயங்களை நிறுவுவதிலும் ஈடுபட்டனர். நல்லூர் கந்தசுவாமி கோவில் இருந்த இடத்திலே கிறீஸ்தவ தேவாலயம் அமைக்கப்பெற்றது.
தற்போதுள்ள கந்தசுவாமி கோயிலுக்குத் தென்கபுறமாகக் கிழக்கு நோக்கிச் செல்லும் தெருவழியாகச் சிறிது தூரம் சென்றதும், பண்டாரமாளிகை என்ற பெயர்  ஒரு வாயிற்றூணிற் காணப்படுகின்றது. இது யாழ்ப்பாணத்தரசர்களுள் ஒருவரான பரராசசேகர பண்டாரத்தை நினைவுீட்டுகின்றது. இது இப்போது கோயிலுக்குச் சேர்ந்த தென்னந்தோப்பாகவே இருக்கிறது. இதன் விஸ்தீரம் 6ஏக்கர். இங்கே யாழ்ப்பாணத்தரசனுடைய மாளிகை ஒன்றிருந்ததெனக் கருத இடமுண்டு. இம் மாளிகையின் வடபாகமாகப் பண்டாரக்குளம் எனப் பெயரிய குளம் ஒன்றுண்டு. இக்குளத்திற்கருகாமையிற் பழைய கட்டடச் சிதைவுகள் காணப்படுகின்றன.
ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தில் (கி.பி. 1748) ஒல்லாந்தர் பிரபு ஒருவர் இந்த மனோரம்மியமான இடத்தைத் தமது வாசஸ்தலமாகக் கொண்டிருந்தார். இதற்குச் சான்றாக ஒரு சிறு படிக்கல் காணப்பட்டது.
ஆதாரம் (Hearten Lust – Heart’s Desire – மனோரம்மியம்)
யாழ்ப்பாணத்திலிருந்து பருத்திததுறைக்குச் செல்லும் பாதையில் ஏறக்குறையய இரண்டரைமல் தூரத்தில் சங்கிலித்தோப்பு எனப் பெயரிய தென்னந்தோப்பு உண்டு. இந்நகரின் அரண்மனை இங்கிருந்தபடியால், இது இப்பொழுது சங்கிலித்தோப்பு என்று வழங்கப்படுகின்றது. யமுனாரி எனப்படும் பகர வடிவமுள்ள சிறந்த கேணியும் இத் தோப்பு எல்லைக்குள்ளேயே உண்டு. நல்லூரில் இருந்து ஆட்சி செய்த அரசர்களும் அரசிகளும் நீராடிய ஏரி இதுவேயெனச் சரித்திர அறிஞர் திரு. ஜே. பி. லூயி கருதுகின்றார். இந்தக் கேணியின் கிழக்குப் பாரிசத்திலும், மேற்குப் பாரிசத்திலும் ஆடவரும் மகளிரும் நீராடினர் என்றும், இதன் தென்கோடியில் ஆடைகள் மாற்றியணிவதற்கான மண்டபம் இருந்திருந்திருத்தல் வேண்டும் எனவும் இவ்வறிஞர் கருதுகின்றார். யமுனா நதியிலிருந்து தமிழ் மன்னர் சிலர் பட்டாபிசேகத்திற்காக    கொணர்ந்த தீர்த்தம் விடப்பட்ட ஏரியாதலின் யமுனா ஏரி எனப் பெயர் பெற்றதெனவும் கூறுவர் வேறுசிலர். தெருவோரத்திற் காணப்படும் கட்டடம் சங்கிலி மன்னன் கட்டிய அரண்மனை வாயில் எனப் பொது மக்கள் கருதுகின்றார்கள். ஆனால் இது டச்சுக் கட்டடம் என ஜே. பி. லூயி சுவாமி ஞானப்பிரகாசர் போன்ற சரித்திர அறிஞர் கருதுகின்றார்.கள்
நல்லூர் கந்தசுவாமி கோவில் முத்திரைச் சந்தியிலுள்ள ‘குருக்கள் வளவு’ என்ற காணியில் கட்டப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் கச்சேரியில் 1882ம் ஆண்டு உருவாக்கபட்ட சைவசமயக் கோவில்கள் தொடர்பான பதிவேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண அரசின் இறுதிக்காலத்தில் நல்லூரில் இருந்த மிகப்பெரிய கோவில் இது என போர்த்துக்கேயர்களுடைய குறிப்புக்களில் இருந்து அறியமுடிகிறது.
நல்லூர்க் கந்தசுவாமி கோவிலை இரகுநாத மாப்பாண முதலியார் வம்சத்தினரே பரம்பரையாக நிர்வகித்து வருகின்றனர்.
மாப்பாண முதலியார் பரம்பரையினால் இக்கோவிலில் நித்திய நைமித்தியங்கள் நடைபெறுகின்றன.
ஈழத்திலுள்ள கோவில்களுள் நேரம் தவறாத நித்திய, நைமித்திய பூசைகள் மூலம் நல்லூர் கந்தசுவாமி கோவில் மற்றைய கோவில்களுக்கு முன்னோடியாக விளங்குகின்றது.
வருடாந்த மகோற்சவம்
ஆடி ஆமாவாசையிலிருந்து 6ம் நாள் கொடியேறி 25 நாட்கள் நடைபெறுகின்றது.
இந்தத் திருவிழா யாழ்ப்பாணத்து மக்களுக்கு மட்டுமன்றி வேறு பிரதேச மக்களுக்கும் முக்கியமான திருவிழாவாக கொள்ளப்படுகிறது.
அத்துடன், ஐப்பசி மாதத்தில் கந்தசஷ்டி, சூரன்போர், இயமசங்காரம், கார்த்திகைத் திருவிழா,கற்பூரத்திருவிழா,தைப்புபூசம், சித்திரை வருடப்பிறப்பு என பல விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.
அத்துடன், யாழ்ப்பாணத்தில் ஆறுகாலப்பூசைகள் நடைபெறும் ஒரே ஒரு ஆலயம் நல்லூர் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணத்தின் மாவிட்ட புரத்திலுள்ள மாவிட்டபுரம் கந்தனை அபிடேகக் கந்தன் எனவும், செல்வச்சந்திநி முருகனை அன்னதானக் கந்தன் எனவும், நல்லூர்க்கந்தனை அலங்காரக் கந்தன் எனவும் வரலாறுகள் சிறப்பித்துக் கூறுகின்றன.
மணிமண்டபத்தின் நுழைவாயிலில் வெளிப்புறம் திரும்பிப் பார்த்தபடி நந்தி சிலை அமைக்கப்பட்டுள்ளது. உள்ளே, அமர்ந்தநிலையில், ஆறுமுக நாவலரின் திருவுருவச் சிலை உயிரோட்டத்துடன், கையில் புத்தகம் வைத்துக்கொண்டு படிப்பதுபோல் அமைந்திருக்கிறது. மண்டபச் சுவர்களில் அறுபத்து மூவர் திருவுருவங்கள் வண்ண ஓவியங்களாக வரையப்பட்டிருக்கின்றன.

Manikkavasagar Vaitialingam
 

 

Leave a Reply