• Welcome to TamilsGuide
செய்திகள் 1

எம்.ஜி.ஆரை நெகிழ வைத்த சாண்டோ சின்னப்ப தேவர்.

சினிமா

நாடக உலகிலிருந்து சினிமாவுக்கு நடிகர்கள் ஊர்ந்துகொண்டிருந்த அக்காலத்தில், நாடக உலகில் வரவேற்பு பெற்ற புராண இதிகாச படங்கள், திரைப்படங்களாகி மக்கள் வரவேற்பை பெற்றுக் கொண்டிருந்தன. இதனால் திறமையான உடல்கட்டு மிக்க நடிகர்கள் தயாரிப்பு நிறுவனங்களுக்கு தேவைப்பட்டனர்.

பிரபலமான ’’ஜுபிடர் பிக்சர்ஸ்’’ நிறுவனம் அப்போது வரிசையாக திரைப்படங்களைத் தயாரித்து வந்தன. பிரபலமான கலைஞர்கள் பலர் அந்நாளில் ஜுபிடரில் மாத சம்பள ஊழியர்கள். சின்னப்பா தேவருக்கு அந்த நிறுவனத்தின் படங்களில் சிறுசிறு வேடங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

ஜுபிடர் படங்களில் சிறுசிறுவேடங்களில் நடித்துக்கொண்டிருந்தபோதுதான் சின்னப்பா தேவருக்கு எம்.ஜி. ஆருடன் தொடர்பு ஏற்பட்டது. எம்.ஜி. ஆருக்கும் அவருக்கும் இருந்த நட்பு திரையுலகில் அலாதியானது. இயல்பிலேயே உடற்பயிற்சி மற்றும் வீர தீர சாகசங்களில் ஆர்வமுடைய எம்.ஜி.ஆருக்கு, அதில் தேர்ச்சி பெற்றவரான சின்னப்பா தேவரை பிடித்துப்போனதில் ஆச்சர்யம் இல்லை.

நடிப்புத்தொழில் கொஞ்சம் பிசிறடிக்கவும் நடிப்புத் தொழிலோடு,  சி.வி.ராமன் என்ற இயக்குநரிடம் தயாரிப்பு நிர்வாகியாகத் தேவர் குறைந்த காலம் பணியாற்றினார். அங்கு சினிமாத் தயாரிப்பு தொடர்பான நுட்பங்களைக் கற்றுக்கொண்டார். அப்போது நண்பர்கள் சிலருடன் இணைந்து படத்தயாரிப்பு முயற்சிகளிலும் ஈடுபட்டார்.

நண்டு கொழுத்தால் வளையில் தங்காது என்பதுபோல, தம்பி திருமுகம் திரைப்படத்துறையில் எடிட்டராக பணியாற்றியது, தனது சினிமா தயாரிப்பு அனுபவம், மனதில் படுவதை செயல்படுத்திக்காட்டும் இயல்பான துணிச்சல் இவை திரைத்துறையை விட்டு விலகியிருந்தாலும், தேவரை கோவையில் சும்மா இருக்கவிட வில்லை. சொந்தமாகத் திரைப்படம் எடுக்க வேண்டும் என்று அவருக்கு ஒரு எண்ணம் ஏற்பட்டது. நண்பர் களின் உதவியுடன் சென்னைக்கு ரயில் ஏறினார்.

முன்பு தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்றிய காலத்தில் அவரை நன்கு அறிந்திருந்த நாகிரெட்டி, படத் தயாரிப்புக்கு தேவையான பணத்தைக் கொடுக்க முன்வந்தார். படத்தின் கதாநாயகனாக யாரை போடுவது என்ற குழப்பம் வந்தபோது, அவர் கண் முன் சட்டென வந்தது, அவரது பழைய நண்பர் ராம்சந்தர். ஆம் எம்.ஜி. ஆரின் அப்போதைய பெயர் அதுதான்.

திரைத்துறையில் ஓரளவு வளர்ந்திருந்த எம்.ஜி.ஆரை அணுகி, தன் விருப்பத்தை சொல்ல அவரும் சம்மதித் தார். "தேவர் பிலிம்ஸ்" படக் கம்பெனி உருவானது. 4-9-1956-ல் வெளிவந்த "தாய்க்குப்பின் தாரம்" பெரிய வெற்றிப் படமாக அமைந்தது.

மிகக் குறைந்த பட்ஜெட்டில், பெருவெற்றிபெற்ற அத்திரைப்படம், தேவருக்கு சினிமா மீது இருந்த ஆர்வத்தை துாண்டிவிட, படபடவென படங்களை தயாரித்தார். 

 பெரிய இடைவெளிக் குப்பின் 'தாய் சொல்லை தட்டாதே' படம் வெளியாகி வெற்றிப்படமானது. இந்த திரைப்படம் ஒரே மாதத்தில் தயாரானது என்பது குறிப்பிடத்தக்கது. அதுதான் தேவர்!

தொடர்ந்து எம்.ஜி.ஆரை வைத்து குறுகிய காலத்தில் 16 வெற்றிப் படங்களை எடுத்தார். தேவர் தயாரிப்பில் எம்.ஜி. ஆர் நடித்த தேர்த்திருவிழா 16 நாட்களில் எடுக்கப்பட்ட தகவல் திரையுலகை ஆச்சர் யத்தின் உச்சிக்கே அழைத்துச்சென்றது. அதனால்தான் அவர் எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்தமானவரானார். எம்.ஜி. ஆரை தேவர், 'ஆண்டவனே..!' என்றும், எம்.ஜி. ஆர் தேவரை,  'முதலாளி...!' என்றும் அழைத்துக்கொள்வர்.

1967 ல் எம்.ஜி.ஆர் சுடப்பட்டு மருத்துவமனையில் இருந்தபோது அவரது எதிர்காலம் குறித்து திரையுலகில் வெவ்வேறு விதமாக பேசப்பட்டது. அந்த நேரத்தில் தேவர் செய்த ஒரு செயல் எம்.ஜி.ஆர் உட்பட திரையுலகில்  அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

மருத்துவமனையில் எம்.ஜி. ஆரை சந்தித்த தேவர், மருதமலை முருகன் கோவிலில் பூஜை செய்த பிரசாதத்தை தந்து, அவரது நெற்றியில் விபூதி இட்டதோடு, கணிசமான ஒரு தொகையை எம்.ஜி.ஆர் கைகளில் கொடுத்தார். “இது என் அடுத்த படத்திற்கான அட்வான்ஸ் முருகா... சும்மா படுத்துக்கிடக்காம சீக்கிரம் வந்து நடிச்சிக்கொடுங்க!” என்றபோது எம்.ஜி.ஆர் கண்களில் கண்ணீர் வழிந்தது.

காரணம் அந்த வார்த்தைகள், அவரது மனநிலையில் ஏற்படுத்திய நம்பிக்கை. மீண்டு(ம்) வருவாரா, வந்தா லும் முன்போல இயங்க முடியுமா, வருவார் என்றால் அது எப்போது? என திரையுலகம் பட்டிமன்றம் நடத்திக்கொண்டிருந்த சூழலில் தேவரின் செயல் எம்.ஜி. ஆரை நெகிழ வைத்தது.

அவரது இறுதிக்காலம் வரை எம்.ஜி.ஆர், அவர் மீது அளவற்ற அன்பு கொள்ள இதுவே காரணமானது. எம்.ஜி. ஆர் - ஜானகி திருமணத்தில் சாட்சி கையெழுத்திட்ட ஒரே நபர், சாண்டோ சின்னப்பா தேவர் என்பதிலிருந்தே இருவருக்குமான நட்பை புரிந்துகொள்ளலாம்.

சாண்டோ எம்.எம்.ஏ.சின்னப்பா தேவர் உழைப்பால் உயர்ந்து பிறர் வாழ உழைத்து, அந்த கடுமையான உழைப்பினாலேயே நம்மை விட்டு மறைந்து இருக்கிறார். எங்கெங்கு இயலுமோ அங்கெல்லாம் அள்ளி அள்ளிக் கொடுத்த ஒரு நல்லவர். நம்பிக்கைக்கு உரியவர்; நாணயமானவர்; அவருடைய வார்த்தையில் சொல்லப்போனால், அவர் நம்பிய முருகனோடு இரண்டறக் கலந்துவிட்டு இருக்கிறார் என்றே சொல்லலாம். எப்படி இருப்பினும் திரைப்படத்துறையில் ஒரு ஈடு செய்யமுடியாத, இனி எதிர்பார்க்க முடியாத உழைப்பிற்கு சொந்தக்காரரை, தனது உழைப்பால் உயர்ந்தவரை, சின்னப்பா தேவரைப் போல் ஒருவரை இனி காணப்போவதில்லை - கிடைக்கப்போவதும் இல்லை”-சின்னப்பா தேவர் மறைவின்போது எம்.ஜி. ஆர் பதிவு செய்தவை இவை.

எம்.ஜி.ஆர். முதலமைச்சராகி திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டபின் 'தண்டாயுதபாணி பிலிம்ஸ்' என்ற படநிறுவனத்தைத் துவங்கி படங்கள் தயாரித்தார் தேவர்.

சின்னப்பா தேவர் காலத்திற்குப்பின் சில ஆண்டுகள் வரை படங்கள் தயாரித்த தேவர் பிலிம்ஸ் நிறுவனம்,  கால மாற்றத்தினால் திரையுலகில் தொடர்ந்து செயல்படுவதில் சுணங்கியது. தொடர் தோல்விகளால் சின்னப்பா தேவர் என்ற தனி மனிதரால் உருவான அந்நிறுவனம், படத்தொழிலிலிருந்து முற்றாக விலகி தம் திரைப்படங்களை மட்டும் ஆவணங்களாக்கி ஒதுங்கிக்கொண்டது. 

விடா முயற்சி, கடும் உழைப்பு, மற்றவர்களுக்கு உதவும் குணம் என்ற குணங்களோடு சாதனை மனிதராக திரையுலகில் உலாவந்த சின்னப்பா தேவர் என்ற மனிதரின் புகழ், திரையுலகம் உள்ளவரை நிலைத்திருக்கும்!

Annadurai Duraisamy

Leave a Reply