• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மருத்துவக் கல்லூரியில் நுழைந்து சில மாதங்களே இருக்கும். 

சினிமா

மருத்துவக் கல்லூரியில் நுழைந்து சில மாதங்களே இருக்கும். இடி போல் வந்தது அந்த GO.எல்லா வெளி நாட்டு மாணவர்களின் கட்டணம் மாதம் 2000 ரூபாயாக கட்ட வேண்டும்.மருத்துவ கனவு நொறுங்கிய உணர்வு.
சோத்துக்கே வழியில்லை இதில...DME அலுவலகம் போல பல இடங்கள் ஏறி இறங்கியும் எந்த பயனும் இல்லை.
சரி மூட்டையைக் கட்டிக்கிட்டு வேற ஏதாவது படிக்கலாம் என்று நாயர் கடைல சிங்கிள் டீ கிளாசோட யோசனை. அப்போ ஒரு சீனியர் வேடிக்கையா ஒன்று சொன்னார். 
கோட்டையில போய் CM கிட்ட ஒரு மனு குடுத்துபாருங்களேன்,
சிரிப்பதா அழுவதா தெரியவில்லை. 
இருந்தாலும் கடைசி அஸ்திரமாக கோட்டைக்கு போனா என்ன காசா பணமா. 
வந்தா மலை போனா மயி...
ஒரு ஆறு ஏழு பேர் சேர்ந்து சென்னைல இருந்த ஒரு இலங்கைப் பெரியவரை சந்தித்தோம். அவரும் அழகா ஒரு மனு டைப் பண்ணி கொடுத்தார். அடுத்த நாள் காலையில் கோட்டை. CM மனு வாங்கும் இடம். கூட்டத்தோடு நாமும். CM வரவில்லை ஆனால் யாரோ உதவியாளர் மனுக்களை வாங்கிக் கொண்டிருந்தார். கொண்டு வந்த மனுவை கொடுத்து விட்டு அந்த வளாகத்தின் உள்ள டீக்கடையில் ஆளுக்கொரு டீ சொல்லி விட்டு சும்மா பேசிக் கொண்டிருந்தோம். 
ஒரு மணிநேரம் ஓடியிருக்கும். ஒரு போலீஸ்காரரும் இன்னொருவரும் யாரையோ தேடி வந்து கொண்டிருந்தார்கள்.
இங்க மெடிக்கல் காலேஜ் சிலோன் பசங்க யாருப்பா. ஆகா நம்மைத்தான் தேடுகிறார்கள். டீ கிளாசை வைத்து விட்டு அவர்கள் பின்னால் ஒரே ஓட்டம். முதலில் ஒரு அறைக்குள் கூட்டிச் சென்று எல்லோருடைய பெயர்களையும் எழுதி வாங்கிக் கொண்டார்கள்.  அப்புறம் இன்னொரு அறைக்கு வெளியே காத்திருக்கச் சொன்னார்கள். ஒன்றும் புரியவில்லை.
சில நிமிடங்களில் அந்த அறையிலிருந்து கரை வேட்டி கட்டிய சிலர் வெளியே வந்து கொண்டிருந்தார்கள்.
அப்போ ஒருவர் தம்பிகளா உள்ள வாங்க என்று அழைத்து பின்னால் கதவை சாத்தினார்.
அங்கு நாம் கண்டது, 
ஒரு தடவை என்னைக் கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.
ஆமாம். பல திரைகளில் பார்த்து, சிறு வயது முதல் நம் மனதில் ஒரு பிரம்மாண்டமாக குடிகொண்ட நாயகன் மக்கள் திலகம் MGR அங்கே அமர்ந்திருந்தார்.

சுற்றியிருந்த அதிகாரிகள் ஏதோ உரையாட அவர் தலை அசைத்துக் கொண்டிருந்தார்.
எங்களைப் பார்த்தவுடன் 
அவரின் அந்த அக் மார்க் புன் சிரிப்பு. சாப்பிட்டார்களா என்று சைகையாலே கேள்வி. அதன் பின்னால் நல்ல படியாக போய் வாருங்கள் என்ற தொனியில் இன்னொரு சைகை. எல்லாமே மொத்தம் ஒரு ஐந்து நிமிடங்கள் இருக்கும்.வெளியே வந்த நமக்கோ கனவுலகில் இருந்து மீண்ட நிலை.
எண்ணி ஒரு மாதம். 
GO வருகிறது. இலங்கை மாணவர்கள் செமஸ்டருக்கு முந்நூறு ருபா செலுத்தினால் போதும். அந்த உன்னதமான பெரிய மனிதரை நினைப்பதா அல்லது வந்தாரை வாழ வைக்கும் தமிழகத்தை நினைப்பதா ?
நிழல் வேண்டும் போது மரம் ஒன்று உண்டு
பகை வந்த போது துணை ஒன்று உண்டு
இருள் வந்த போது விளக்கொன்று உண்டு 
எதிர்காலம் ஒன்று எல்லோருக்கும் உண்டு

Annadurai Duraisamy
 

Leave a Reply