• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சில பாடல்களின் வரிகளைப் பார்க்கும்போது, இதை எழுதியவர் கண்ணதாசனா? வாலியா?

சினிமா

சில பாடல்களின் வரிகளைப் பார்க்கும்போது, இதை எழுதியவர் கண்ணதாசனா? வாலியா?  என்றெல்லாம் குழப்பம் வரும். இணையத்தில் நான்கைந்து தளங்களில் சரிபார்த்துத்தான் கண்டறிய முடியும். அதேபோல் இசையமைப்பாளர் யார் என்பதிலும்கூட சில பாடல்களில் சந்தேகம் வந்துவிடும். 'இரு மலர்கள்' திரைப்படத்தில் இடம்பெற்ற 'மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள்' பாடல், தமிழ் இலக்கியச் செழுமை வாய்ந்த பாடல். இப்பாடலில் நடிகை பத்மினி, மயில் தோகையோடு ஆடுவதுபோல் காட்சியமைப்பதாக இருப்பதாலேயே வழக்கத்துக்கு மாறாக, பொன் மயிலாள் தோகை விரித்தாளென்று, பெண் மயிலுக்கு தோகை இருக்குமென்பது போல் கவிஞர் வாலி எழுதியிருப்பார். பாடல் முழுக்க உவமைகள் செழுமையாக இருக்கும்! 

ஒருமுறை இந்த பாடலை அகில இந்திய வானொலியின் விவித் பாரதியில் ஒலிபரப்பியபோது, பாடல் இடம்பெற்ற படம், பாடியவர், இசையமைத்தவர், பாடலை எழுதியவர் என அனைத்து விவரங்களையும் சொல்லும்போது, பாடலை எழுதியவர் என்று கவிஞர் கண்ணதாசன் பெயரைக் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஏனென்றால், அவர்களிடமிருந்த அப்பாடலின் இசைத்தட்டில், பாடலை எழுதியவரென்று கண்ணதாசம் பெயரைத்தான் குறிப்பிட்டிருந்தனர். அதைக்கொண்டு தான் உறுதிசெய்வார்கள் என்பதால் அதையே குறிப்பிட்டிருந்தனர். 

அப்பாடல் ஒலிபரப்பாகி முடித்ததுமே கவிஞர் கண்ணதாசனிடமிருந்து அந்த நிகழ்ச்சியின் நிர்வாகிக்கு போன்கால். போனில் பேசிய கவிஞர் கண்ணதாசன், "மாதவிப் பொன்மயிலாள் தோகை விரித்தாள் பாடலை எழுதியது வாலி. உங்க அறிவிப்பில் என்னோட பெயரை தப்பா சொல்லிட்டீங்க. இனி ஒலிபரப்பும்போது தம்பி வாலி பெயரையே சொல்லுங்க." என்றிருக்கிறார். ஆனால் நிகழ்ச்சியின் நிர்வாகியோ கண்ணதாசன் சொன்னாலும் ஒப்புக்கொள்ளவில்லை. எங்களுக்கு வந்த ரிக்கார்டுல என்ன இருக்கோ, அதைத்தான் சொல்றோம். எங்க மேல தப்பில்ல!" என்று போனைத் துண்டித்திருக்கிறார். கண்ணதாசனோ அவர்களுக்கு புரியவைக்கும் நோக்கில் திரும்ப போன் செய்து, மிகவும் நிதானமாக, "இல்லைங்க, இலக்கியத்தரமான பாடலை எழுதியிருப்பவர் வாலி. அவருக்கு கிடைக்கவேண்டிய புகழை நான் பறிச்சுக்கக்கூடாது. இனிமேல் இப்பாடலை எழுதியவர் வாலின்னே சொல்லுங்க!" என அழுத்தந்திருத்தமாகச் சொல்ல, அப்பவும் ஒத்துக்காத நிர்வாகி, "அப்டியெல்லாம் மாத்த முடியாதுங்க! நீங்க வேணும்னா படக்கம்பெனியில சொல்லி திருத்தி அனுப்பச்சொல்லுங்க! நாங்க செக் பண்ணிட்டு மாத்திக்கிறோம்." என்று கடுப்படித்து போனைத் துண்டித்திருக்கிறார்.

திரும்பவும் கண்ணதாசன் கால் செய்கிறார். நிர்வாகிக்கு இப்பவும் கடுப்பு... என்னய்யா இந்த கண்ணதாசன்... தொணதொணன்னுக்கிட்டு... என்றவர் இன்னொருவரை போனை எடுக்கச் சொல்கிறார். அவரிடம் பேசிய கண்ணதாசனோ, "உங்களோட ரூல்ஸ் அன்ட் ரெகுலேஷனை நானும் மதிக்கிறேன். ஆனால் எனக்கு உரிமையில்லாத விஷயத்தில் பெருமை தேடிக்க நான் விரும்பல... உங்க அறிவிப்பை வேண்டுமானால், இப்பாடலைப் பாடியவர் கண்ணதாசன் அல்ல! அப்படீன்னு அறிவிப்பு கொடுங்க. இப்படி கண்டிசன் போட எனக்கு உரிமையுண்டு. ஏனென்றால் இது நான் பாடிய பாடல் கிடையாது!" என்று சொல்லவும், கண்ணதாசன் திரும்பத்திரும்ப சொல்வதன் காரணத்தைப் புரிந்துகொண்டார்கள். தவறைத் திருத்திக்கொண்டார். அடுத்த முறை ஒலிபரப்பியபோது, பாடலை எழுதியவர் கவிஞர் வாலி என்று குறிப்பிட்டார்கள்! அதோடு, அந்த திரைப்பட நிறுவனத்துக்கும் தகவலைத் தெரிவித்து, பிழையைத் திருத்தவைத்தார் கவிஞர் கண்ணதாசன்! 

வாலியின் பாடலுக்கான புகழ் வாலிக்குத்தான் சேர வேண்டுமென விரும்பிய கவிஞர் கண்ணதாசனின் பாடல் வரிகள் தான் வாலியை ஓர் கவிஞராகவே உயர்த்தியது. சென்னையில் பாடலாசிரியருக்கான வாய்ப்புத்தேடி கவிஞர் வாலி அலைந்த தருணம். அவருக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் அமையவில்லை. எனவே திரையுலகில் தோற்றுப்போனதாக நினைத்து, அடுத்தகட்டமாக மதுரை டிவிஎஸ் நிறுவனத்தில் ஓர் நண்பர் மூலமாக வேலைவாய்ப்பைப் பெற்றவர், மதுரைக்கு கிளம்பும்முன்பாக. நண்பரான பாடகர் பி.பி.ஸ்ரீனிவாஸிடம் ஒரு பாடலைப் பாடும்படி கேட்டிருக்கிறார். அவரோ, கண்ணதாசனின் வரிகளில் அமைந்த 'மயக்கமா கலக்கமா' பாடலைப் பாடியிருக்கிறார். அந்த பாடலைக் கேட்டதுமே வாலிக்கு புத்துணர்வு வந்தது. மதுரை டிவிஎஸ் வேலைக்கு செல்வதை ஒதுக்கிவிட்டு, திரையுலகில் சாதித்தே தீருவதென உறுதியெடுத்தார். தொடர்முயற்சியால் கற்பகம் திரைப்படம் ஒரு ப்ரேக் கொடுக்க, அதன்பின் தன் வாழ்நாள் முழுக்க பாடலாசிரியராக தனக்கென ஓர் வரலாற்றையே படைத்தார் கவிஞர் வாலி! 

- வத்திராயிருப்பு தெ.சு.கவுதமன்
 

Leave a Reply