• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சாமானிய இளைஞனின் சவுக்கடி இந்த சத்யா

சினிமா

36 Years of Sathyaa : சாமானிய இளைஞனின் சவுக்கடி இந்த சத்யா

சத்திய மூர்த்தியாக வாழும் சாமானிய இளைஞனின் வாழ்க்கையை எடுத்துரைத்த சத்யா திரைப்படம் இன்றுடன் வெளியாகி 36 ஆண்டுகள் ஆகிறது.

சத்யா, தமிழ் சினிமா கடந்து விட முடியாத திரைப்படங்களில் இது முக்கிய இடத்தில் இருக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபடும் கமலஹாசனின் புதிய பரிமாணம் தான் இந்த சத்யா. சத்தியமூர்த்தியாக வாழும் சாமானிய இளைஞனின் வாழ்க்கையை எடுத்துரைப்பது இந்த கதையின் களமாகும். 1985 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளிவந்த அர்ஜுன் என்ற திரைப்படத்தின் ரீமேக் படம் தான் இந்த சத்யா.

180 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி பாக்ஸ் ஆபிஸை அடித்து நொறுக்கிய திரைப்படம் இது. இந்த படத்தைப் பார்க்காதவர்களே இருக்க முடியாது அந்த அளவிற்கு நடுத்தர வர்க்க மக்களின் வாழ்க்கையை சத்ருபமாக எடுத்துரைத்த திரைப்படமாகும்.

இந்த படத்தில் கமலின் தோற்றம் முற்றிலும் வித்தியாசமாக இருக்கும். வேலை தேடும் இளைஞன், ஒருவர் வருமானத்தில் வாழும் குடும்பம், வரதட்சணை கொடுமை, சித்தி கொடுமை, ஒண்டி குடித்தனம், அநீதிகளைக் கண்டு கொந்தளித்தல், நண்பர்களுடன் வாழ்க்கை, காதல் என அனைத்து விதமான பரிமாணங்களையும் ஒரே திரைப்படத்தில் எடுக்க முடியுமா என்ற கேள்வி சாத்தியமானது சத்யா திரைப்படம் மூலம் தான்.

வேலை தேடிக் கொண்டிருக்கும் பட்டதாரி இளைஞன், குடும்ப சிக்கல்களைத் தாங்கிக் கொண்டு சமூக சீர்கேடுகளைத் தாங்கிக்கொள்ள முடியாமல் போராடி அரசியலில் சிக்கி அதிலிருந்து எப்படி மீண்டு வருகிறான் என்பதே இதன் மூலக்கதை ஆகும்.

இந்த படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்கியுள்ளார். இசையமைத்தவர் இளையராஜா. படத்தில் இடம் பெற்று இருக்கும் வளையோசை பாடல் ஒலிக்காத இடமே கிடையாது. இந்த வளையோசைக்கு வளையாத காதலர்களே இருக்க முடியாது. அந்த அளவிற்குப் பாடலின் இசையும் வரிகளும் அமைந்திருக்கும்.

இப்படத்தில் கமலின் கெட்டப் அப்போது இருந்த இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. தற்போது வரை இருக்கும் இளம் இயக்குநர்களுக்கு மிகவும் பிடித்த திரைப்படமாக விளங்கி வருகிறது. தமிழ் சினிமாவில் வெற்றி இயக்குநராகவும், கமல் ரசிகராகவும் இருந்து வரும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சத்யா திரைப்படத்தில் கமல் கையில் காப்பு அணிந்து இருப்பதுபோல அவரும் அணிந்திருக்கிறார். அப்பொழுதே புரிந்து கொள்ள வேண்டும் இந்த படத்தின் தாக்கம் எவ்வளவு தூரம் நீடித்து வருகிறது என்று.

சில கதைகளை விளக்குவது என்பது அவ்வளவு எளிதல்ல, உணர்வு ரீதியாக மட்டுமே புரிந்து கொள்ள முடியும் அவ்வாறு உணர்வு கலந்த சாமானியனின் சவுக்கடி தான் இந்த சத்யா. தற்போது வெளியாகி 35 வருடங்கள் ஆனாலும் நடுத்தர வர்க்கத்தினர் இருக்கும் வரை இந்த திரைப்படத்தை மக்களிடம் இருந்து பிரிக்க முடியாது என்பதே நிதர்சனமான உண்மை.
 

Leave a Reply