• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இரண்டு நடிகர்கள் நடித்து தூக்கப்பட்டு 3வதாக சிவாஜி நடித்த படம்!.. தமிழ் சினிமாவின் பெஸ்ட் இதுதான்..

சினிமா

சிவாஜி ஹீரோவாக மட்டுமில்லை. நடிக்க வந்த புதிதில் வில்லனாகவும் நடித்திருக்கிறார். அதுவும் ஒரு படத்தில் 2 ஹீரோக்கள் நடித்து அதன்பின் அவர்கள் தூக்கப்பட்டு மூன்றாவதாக சிவாஜி நடித்து ஒரு படம் வெளிவந்திருக்கிறது. அதுபற்றித்தான் இங்கே பார்க்கப்போகிறோம்.

பாடல்களே இல்லாமல் எஸ்.பாலச்சந்தர் ஒரு கதையை உருவாக்கி ஏவிஎம் செட்டியாரிடம் போய் சொன்னார். செட்டியாருக்கும் இந்த கதை பிடித்திருந்தது. ஏனெனில், அவர் ஜப்பான் சென்றிருந்த போது அகிரா குரோசாவா இயக்கத்தில் உருவான ஒரு படத்தை பார்த்து இதுபோல ஒரு படத்தை தமிழில் எடுக்க வேண்டும் என நினைத்தார். எஸ்.பாலச்சந்தர் சொன்ன கதை அது போலவே இருந்தது. அதே ஜப்பான் படத்தை பார்த்து அந்த இன்ஸ்பிரேசனில்தான் எஸ்.பாலச்சந்தர் அந்த கதையை உருவாக்கினார் என்பது தனிக்கதை.

முதலில் ஒரு நடிகரை போட்டு இப்படத்தை துவங்கினார்கள். கொஞ்ச நாள் படப்பிடிப்பு நடந்து எடுத்தவரை போட்டு பார்த்தபோது அந்த ஹீரோ மிகவும் வயதானவராக இருந்தார். எனவே, அவரை படத்திலிருந்து தூக்கிவிட்டார்கள். அதன்பின் கல்கத்தாவில் நாடகங்களில் நடித்து வந்த கோபாலகிருஷ்ணன் என்பவரை ஹீரோவாக போட்டு 80 சதவீத படத்தை எடுத்துவிட்டார் எஸ்.பாலச்சந்தார்.

ஆனால், அவரையும் செட்டியாருக்கு பிடிக்கவில்லை. எனவே, எஸ்.பாலச்சந்தரை அழைத்து ‘இந்த ஹீரோவும் வேண்டாம். சிவாஜியை வைத்து மறுபடியும் எடுப்போம்’ என செட்டியார் சொல்ல அதில் எஸ்.பாலச்சந்தருக்கு உடன்பாடு இல்லை. இதில் கடுப்பான செட்டியார் ‘பாலச்சந்தருக்கு கொடுக்க வேண்டிய சம்பளத்தை கொடுத்துவிட்டு அவர் எடுத்த காட்சிகள் கொண்ட பிலிமை அவர் கண் முன்னே எரித்துவிடுங்கள்’ என சொல்ல எஸ்.பாலச்சந்தர் பதட்டமடைந்தார்.

எனவே, செட்டியார் சொன்னதுபோல சிவாஜியை வைத்து எடுப்பது என முடிவெடுத்தார். ஆனால், கதைப்படி கதாநாயகன்தான் இந்த படத்தின் வில்லனும் கூட. அது ஒரு நெகட்டிவ் ரோல். எனவே, சிவாஜியிடம் எப்படி கேட்பது என தயங்கினார். மேலும், அப்போது சிவாஜி 10 படங்களில் நடித்து கொண்டிருந்தார். ஆனாலும், அவரை சந்தித்து கதையை சொல்ல சிவாஜி அதில் நடிக்க ஒப்புக்கொண்டார். 13 நாட்கள் மட்டுமே கால்ஷீட் கொடுத்தார் சிவாஜி.

அப்படி உருவான திரைப்படம்தான் அந்த நாள். 1954ம் வருடம் ஏப்ரல் மாதம் வெளியான இந்த படத்தை மிகவும் குறுகிய நாட்களில் இப்படத்தை எடுத்து முடித்தார் எஸ்.பாலச்சந்தர். இந்த படத்தில் பாடல்களே கிடையாது. முதல் காட்சியிலேயே சிவாஜியை பண்டரிபாய் சுட்டு கொல்வது போல காட்சி வரும். இதைப்பார்த்த சிவாஜி ரசிகர்கள் தியேட்டரில் பெரிய ரகளையே செய்தார்கள்.

இந்த படம் பெரிய லாபமில்லை என்றாலும் நல்ல கருத்தைகொண்ட படமாக வெளிவந்து நல்ல விமர்சனத்தை பெற்றது. மணிரத்னம், பாலச்சந்தர், அமீர் ஆகியோரிடம் தமிழில் வெளிவந்த சிறந்த திரைப்படம் எது என ஒருமுறை கேட்டபோது அவர்கள் சொன்ன படம் ‘அந்த நாள்’.
 

Leave a Reply