• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நெடுந்தீவின் கல்விக் கலங்கரை விளக்கு தவத்திரு அதிபர் நவரத்தினசிங்கம்  அவர்களின் ஞாபகார்த்தக் கல்வி வளாகத் திறப்பு விழா! 

சினிமா

எதிர்வரும் பெப்ரவரி மாதம்  06  திகதி  மாலை 3.00 மணியளவில் நெடுந்தீவு மகா வித்தியாலய முன்றலில் உள்ள வளாகத்தில் இடம்பெற உள்ள செய்தி மகிழ்ச்சி தருகின்றது. 
எம் நெடுந்தீவகத்தின் தனித்துவத்தை நிலைநிறுத்த அரும்பாடுபட்டுழைத்து, எம் தீவகத்து மாணவர் கல்வியின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு வித்திட்டு நின்ற அரிய கல்விமான் அதிபர்  அமரர் எட்வேட் நவரத்தினசிங்கம் அவர்கள்.  
நெடுந்தீவின் கல்வி வளர்ச்சிக்கு கண்டிப்பும், கருணையும் மிக்க அதிபராக முதலில் கிடைத்த பொக்கிஷம் அவர். கல்வியின் தகுதி,உண்மையில் கற்பிக்கும் ஆசிரியரையே மிகுதியும் சார்ந்திருக்கிறது என்பதற்கு ஒப்பற்ற இலக்கணமாக விளங்கியவர் அவர். 
அவரது ஞாபகார்த்த நினைவாக அவரது பழையமாணவர்களும், நெடுந்தீவக அபிமானிகளும்   நினைவுச்சிலை, நினைவு மண்டபம் என்பன அமைத்து ஆண்டு தவறாமல் நினைவேந்தல்கள், நினைவுரைகள், நினைவு மலர்களால், போற்றி மகிழ்ந்து வருபவர்கள்.
நெடுந்தீவின் மைந்தரும் அவுஸ்திரேலிய வாசியுமான திருவாளர் மருது அவர்களின் முனைப்போடு உலக ஒருங்கிணைப்பில் உருவாகின்ற அதிபரின் அறக்கட்டளைக் கல்வி வளாகம் தீவக கல்வி நற்பணியை மேலும்  சிறக்கச் செய்ய  இனிய வாழ்த்துகள்! 
உன் காலடித்தடம் பட்டுக்
கல்வித்தீவாய் ஆனதெம் மண் 
அதனால் …
நூற்றாண்டு கடந்தும்
சாகாவரம் பெற்று
உயிர்க்கிறது உன் நினைவு! 
கல்லூரி வாசலில்
சைவக் குடிலும், 
மாதா மண்டபமுமாய்
இன்றைக்கும் உங்களால்
தொழுகை நடக்கிறது ..
கல்லில் வளர்ந்தது 
கல்விமட்டுமல்ல…உன்னால்க்
கோணற்புளி, தேக்கு, கத்தாப் பூ
மரங்களென அப் பாலைவனத்தைச்
சோலையாக்கிய சிற்பி நீ…
அஞ்ஞானமறுத்தெமக்கு 
அறிவியலைப் புகட்டவென
திறந்த வெளிமேடை, நாமிருந்த வகுப்பறை
விஞ்ஞான கூடம், விளையாட்டுத் திடலென
எஞ்ஞான்றும் ஊருக்குழைத்த
உன் பெயரே சொல்லும் எம்
ஊரின் கடற்காற்று….
தென்னை பனையோலை
தேடிப் பின்னவைத்து ஊரின்
பசிவிரட்டி நின்ற பகலவனே!
உன்னையும் கூட இருளென்போர்
உண்டாமே??
ஏழைக்கே உலகமென்ற 
இயேசுவைக் கூட தொங்க விட்ட
உலகமல்லவா இது..
எங்கிருந்தோ வந்து 
என்பு தோல் இரத்தமெலாம்
எல்லோர்க்கும் ஒன்றேயென்ற 
 ஒருவனால் ஊரின் மக்கள் 
உயர்ந்தனர் என்றால்
அந்த ஒருவனே நீங்களன்றோ 
உங்களைப் போற்றுகின்றோம் !
 

Leave a Reply