• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அவர் நடித்தால் சரி... இல்லனா எரித்து விடுங்கள் : சிவாஜி படத்துக்கு செக் வைத்த ஏ.வி.எம் - காரணம் என்ன?

சினிமா

பாடல் காட்சிகளே இல்லாமல் வெளியான இந்த படம் தொடக்கத்தில் வரவேற்பை பெறவில்லை என்றாலும், அரசின் பாராட்டு காரணமாக அந்த நாள் படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

தமிழ் சினிமாவில் வித்தியாசமான நடிப்பை கொடுத்து பலரையும் மெய்சிலிர்க்க வைத்த நடிகர் சிவாஜி கணேசன் நடித்த ஒரு படத்தை எரித்து விடுங்கள் என்று ஏ.வி.எம்.நிறுவன அதிபர் மெய்யப்ப செட்டியார் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் வித்தியாசமாக படங்களை இயக்கி வெற்றி கண்டவர் இயக்குனர் எஸ்.பாலச்சந்தர். இவரது இயக்கத்தில் கடந்த 1954-ம் ஆண்டு வெளியான படம் தான் அந்த நாள். தமிழ் சினிமாவில் த்ரில்லர் கதையம்சம் கொண்ட படங்களில் முக்கிய இடத்தை பெற்றுள்ள இந்த படத்தில் சிவாஜி கணேசன், பண்டரிபாய், ஜாவர் சீதாராமன் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தனர்.

பாடல் காட்சிகளே இல்லாமல் வெளியான இந்த படம் தொடக்கத்தில் வரவேற்பை பெறவில்லை என்றாலும், அடுத்தடுத்து வெளியான மக்களின் விமர்சனம், மற்றும் சிறந்த படம் என்று அரசின் விருது காரணமாக அந்த நாள் படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது இந்த படம் இன்றை ரசிகர்கள் மத்தியிலும் ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக இருக்கும் என்று உறுதியாக சொல்லலாம்.

ஆங்கில படத்தின் தழுவலாக இந்த படத்தின் கதையை எழுதிய இயக்குனர் எஸ்.பாலச்சந்தர், ஏ.வி.மெய்யப்ப செட்டியாரிடம் கொடுத்து இந்த படத்தை நீங்கள் தான் தயாரிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். கதையை கேட்ட அவர், கண்டிப்பாக தயாரிக்கிறேன் என்று சொல்ல, படத்திற்காக நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெறுகிறது. நாயகனாக எஸ்.வி.சுஹர்சநாமம் நாயகியாக பண்டரி பாய் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

ஒரு சில வாரங்கள் படப்பிடிப்பு முடிந்தவுடன் படத்தை போட்டு பார்த்த ஏ.வி.மெய்யப்ப செட்டியார் – இயக்குனர் எஸ்.பாலச்சந்தர் இருவருக்குமே திருப்தி இல்லாமல் இருந்துள்ளது. குறிப்பாக எஸ்.வி.சுஹர்சநாமம் வயது முதிர்ந்தவராக இருக்கிறார். அவருக்கும் பண்டரிபாய்க்கும் பொருத்தம் சரியில்லை என்று எஸ்.பாலச்சந்தர் சொல்ல, அந்த படம் அப்படியே கைவிடப்படுகிறது. அடுத்து நாயகனாக புதுமுக நடிகர் கொல்கத்தா என்.விஸ்வநாதன் என்பவரை தேர்வு செய்து நடிக்க வைத்துள்ளனர்.

படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், படத்தை ஒருநாள் போட்டு பார்த்த ஏ.வி.எம். செட்டியார், இயக்குனர் பாலச்சந்தர் இருவருக்கும், அவரின் நடிப்பு பிடிக்கவில்லை. இதனால் இனிமேல் வேறு நாயகனை தேர்வு செய்வதற்கு பதிலாக சிவாஜி கணேசனை நடிக்க வைக்கலாம் என்று ஏ.வி.எம்.செட்டியார் கூறியுள்ளார். இதற்கு இயக்குனர் எஸ்.பாலச்சந்தர் தயக்கம் காட்டியதால் ஏ.வி.எம் செட்டியார் கடுமையாக கோபமடைந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து தனது தயாரிப்பு நிர்வாகியை அழைத்த ஏ.வி.எம்.செட்டியார், பாலச்சந்தர் சிவாஜி நடிக்க வைக்க ஒப்புக்கொள்கிறாரா என்று பாருங்கள் இல்லை என்றால், அவருக்கு பாக்கி இருக்கும் சம்பளத்தை கொடுத்துவிட்டு, இதுவரை எடுத்த அந்த நாள் படப்பிடிப்பின் ஃபுட்டேஜ் அனைத்தையும் அவர் கண் முன்னே எரித்து விடுங்கள் என்று கூறியுள்ளார். ஒரு கட்டத்தில், சிவாஜியை நடிக்க வைக்க எஸ்.பாலச்சந்தர் சம்பதம் தெரிவித்துள்ளார்.

அப்போது சிவாஜி பல படங்களில் பிஸியாக நாயகனாக நடித்து வந்ததால், நெகடீவ் கேரக்டராக இருக்கும் இந்த படத்தில் நடிப்பாரா என்ற தயக்கத்துடன் அவரை அணுகிய எஸ்.பாலச்சந்தர் கதையை சொல்ல, கதை பிடித்து போன சிவாஜி கண்டிப்பாக நான் நடிக்கிறேன் என்று கூறியுள்ளார். அதன்பிறகு புதிதாக முதலில் இருந்து தொடங்கிய படப்பிடிப்பு முடிந்து 1954-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13-ந் தேதி அந்த நாள் படம் வெளியானது.

முதல் படமான பராசக்தி படத்தில் இந்த பையனை எதற்காக நடிக்க வைக்கிறீங்க என்று சிவாஜியை பார்த்து கேட்ட ஏ.வி.மெய்யப்ப செட்டியார் அடுத்து 2 வருடத்தில் சிவாஜியை வைத்து இந்த படத்தை எடுக்கலாம் என்று சொல்லும் அளவுக்கு சிவாஜி நடிப்பில் முத்திரை பதித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply