• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சுவிற்சர்லாந்தில் நடிகமணிக்கு ஒரு பெருவிழா

காலம் அழைத்துச் சென்ற கலைஞர்களில் நடிகமணி வி.வி வைரமுத்து ஒருவரானலும் காலகாலமாக மக்கள் மனங்களில் வாழ்ந்து நிறைந்திருக்கிறார். இலங்கையின் இசை நாடக வரலாற்றில் தனி ஆளுமை மிக்கவராகவும் பல்துறை கலை ஆற்றல் உள்ளவராகவும் விளங்கிய நடிகமணியவர்கள் அரிச்சந்திர மயானகாண்டம் நாடகத்தை 3000 தடவைகளுக்கு மேலாகவும் பக்த நந்தனார் நாடகத்தை1000 தடவைகளுக்கு மேற்படவும் நடித்து பெருமை சேர்த்தார். இவற்றை விட மேலும் பல நாடகங்கள்  பற்பல முறை மேடையேற்றங்கள் கண்டுள்ளன. இலங்கையில் ஒரு அரங்க நடிகனுக்கு இரசிகப்பட்டாளம் அதிகம் உருவாகியிருப்பதும் நாடக அரங்குக்கு பின்னரான கதைக் களங்கள் உருவாகியும் பின்னர் அவை கொத்தணிக் கதைக் களங்களாகப் பல்கிப் பெருகிய பெருமையும்  நடிக மணி வைரமுத்து அவர்களையே சாரும். இவ்வகை அரங்காடல், கதையாடல் என்பன வைரமுத்து அவர்களை இலங்கையின் தேசிய மகா கலைஞனாகவும் இனங்காட்டியது .பேராதனைப் பல்கலைகழகத்தில் சிங்கள நாடகப் பேராசான் சரத்சந்திரா முன்னிலையில் அரிச்சந்திரா மாயான காண்டம் மேடையேற்றப்பட்டு பெரும் பாராட்டைப் பெற்றுக் கொண்டது . யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் 1984 இல் நடிகமணி யவர்களை அழைத்து கைலாசபதி கலையரங்கில் மதிப்பளித்தும் 200
4 இல்  கௌரவ கலாநிதிப் பட்டத்தை வழங்கியும் தன்னைப் பெருமைப்படுத்திக் கொண்டது .இ.ஒலி பரப்புக் கூட்டுத்தாபனம் இவரது நாடகத்தை ஒலிப்பதிவு செய்து ஒலிபரப்பியும் ஒலிப்பேழையாகவும் வெளியீடு செய்துள்ளது. லண்டன் BBC நிறுவனமும் இவரது நாடகத்தை ஒளிப்பதிவு செய்து வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது . பேராசிரியர் வித்தியானந்தன் அவர்கள் நடிக மணியின் இசை நாடகத்தை புதிய பாய்சலுக்கான பல ஆலோசனைகள் , உதவிகளையும் வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும் .

இவ்வாறு பெருமை பெற்றுள்ள கலைஞனுக்கு மதிப்பளிக்கும் வகையிலும் அவரது 100 ஆவது அகவை வருடத்தை நினைவு கூரவும்  சுவிஸ் நாட்டின் தலைநகரில் ஐரோப்பிய மதிப்பளிப்புக் கழக நிறுவுனர் வைகுந்தன் அவர்களில்  தலைமையில்  (28 .O1.2024 ) நிகழ்வு இடம்பெற்றது .இந்த நிகழ்வில் நடிக மணியவர்களின் பிள்ளைகள் உறவுகள் மற்றும் பலரும் பங்கு பற்றி நிகழ்ச்சிகளையும் வழங்கியிருந்தனர். பல் துறைக் கலைஞன் மயிலை இந்திரன் குழுவினரின் அரிச்சந்திரா மாயானகாண்டம் , கலைவளரி இரமணன் குழுவினரின் பண்டாரவன் னியன் நாடகம் என்பன மேடையேற்றப்பட்டு மக்களின் பாராட்டைப் பெற்றுக் கொண்டன. நடிக மணி நினைவுப் பேருரையை நானும் (க.அருந்தவராஜா) வழங்கியிருந்தேன் . யாழ் பல்கலைக்கழகத்தில் 1984 இல் நடிக மணியவர்களுக்கு பாராட்டு விழா நடைபெறும் போது அங்கு ஒரு மாணவனாக இருந்து அந்த நிகழ்வை கண்டு களித்தவன் என்ற வகையில் இன்று 40 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் அவரது மறைவுக்குப்பின் சுவிஸ் நாட்டில் அவருக்கான நினைவுரையை வழங்கியிருக்கிறேன். காலங்கள் தான் ஓடுகின்றனவே தவிர நினைவுகள் காலை வரை கதவைத் தட்டிக் கொண்டேயிருக்கின்றன. காலத்தால் மறக்கமுடியாத மகா கலைஞன் நடிகமணி வி.வி.வைரமுத்து இலங்கையின் 
இசை நாடக வரலாற்றில் மாபெரும் சொத்து .காலங்கள் கடந்தும் பேசப்படுவார் .

அருந்தவராஜா .க
ஜெனீவா
01.02.2024

Leave a Reply