• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கத்தார் இளவரசருடன் பேச்சுவார்த்தை நடத்திய பிரதமர் ட்ரூடோ

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன பிரச்சனை குறித்து கத்தார் இளவரசருடன் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ விவாதித்துள்ளார். இஸ்ரேல் - ஹமாஸ் போர் நீடித்து வரும் நிலையில் போர் நிறுத்த முயற்சியில் கத்தார் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுடன், கத்தார் இளவரசர் தமிம் பின் ஹமத் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
  
இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், 'இன்று பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, கத்தார் இளவரசர் ஷேக் தமிம் பின் ஹமத் அல் தானியுடன் மத்திய கிழக்கில் நிலவும் நிலைமை குறித்து பேசினார்.

பிரதமரும், இளவரசரும் இஸ்ரேல் மற்றும் காஸாவின் நிலைமை குறித்தும், பாலஸ்தீனியர்களுக்கு நிலையான அமைதியைப் பாதுகாப்பதற்கான பாதையின் அவசியம் குறித்தும் விவாதித்தனர்.

ஜஸ்டின் ட்ரூடோ இரண்டு நாடுகளின் தீர்வுக்கான கனடாவின் நீடித்த ஆதரவை அடிக்கோடிட்டுக் காட்டினார். மேலும், இஸ்ரேலியர்கள் மற்றும் பாலஸ்தீனியர்கள் அச்சமின்றி அமைதி, பாதுகாப்பு மற்றும் கண்ணியத்துடன் வாழ்வதற்கான உரிமையை வலியுறுத்தினார்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில், பிரதமர் ட்ரூடோ காஸாவில் உள்ள அனைத்து பணயக்கைதிகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்ற தனது அழைப்பை மீண்டும் வலியுறுத்தினார்.

அத்துடன் கத்தார் மேற்கொண்டவை உட்பட பிராந்தியத்தில் மத்தியஸ்த முயற்சிகளை முன்னெடுக்க கனடாவின் ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தினார் என கூறப்பட்டுள்ளது.

அதேபோல், காஸாவில் நிலவும் மோசமான மனிதாபிமான சூழ்நிலை குறித்து கவலைகொண்ட தலைவர்கள், இதுபோன்ற நிலைமையின்போது நெருக்கமான மற்றும் வழக்கமான தொடர்பில் இருக்க ஒப்புக் கொண்டனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜஸ்டின் ட்ரூடோ தனது பதிவில், 'இன்று தமிம் பின் ஹமத் உடன் காஸாவில் மனிதாபிமான நெருக்கடிக்கு பதிலளிப்பதற்கான எங்கள் முயற்சிகள் பற்றி பேசினேன். சர்வதேச மனிதாபிமான சட்டத்தை நிலைநிறுத்துவது மற்றும் பொதுமக்களைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் மற்றும் இஸ்ரேலியர்கள், பாலஸ்தீனியர்களுக்கு நீடித்த அமைதியைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்தும் நாங்கள் விவாதித்தோம்' என தெரிவித்துள்ளார். 
 

Leave a Reply