• Welcome to TamilsGuide
செய்திகள் 1

திடீர் ஹீரோயின் ஊர்வசி கோடி வசூல் முருங்கைக்காய்... முந்தானை முடிச்சு ஹைலைட்ஸ்

சினிமா

22 ஜூலை 1983 அன்று வெளியான ‘முந்தானை முடிச்சு’, வரலாறு காணாத வணிக வெற்றியைப் பெற்றது. தமிழகத்தில் மட்டுமல்லாது தென்னிந்தியாவிலும் பரவலாக அதிக நாள்கள் ஓடி சில்வர் ஜூப்ளி அந்தஸ்தை அடைந்த திரைப்படம் இது.
இதைத் தயாரித்த ஏவிஎம் நிறுவனம், தங்களின் ஆஸ்தான இயக்குநர்கள், கதை இலாகா போன்ற சொந்தக் குழுவைக் கொண்டே திரைப்படங்களைத் தயாரிப்பது பொதுவான வழக்கம். பாக்யராஜ் இயக்கும் படங்கள் தொடர்ந்து வரவேற்பு பெறுவதைக் கண்டு அவரை ஏவிஎம்-மிற்காக அணுகினார்கள். அப்போது ‘சின்ன வீடு’ படத்தின் கதையை விவரித்தார் பாக்யராஜ். அவர்களுக்கும் கதை பிடித்துப் போனது. ஆனால் தலைப்பு மட்டும் பிடிக்கவில்லை.
இந்த நிலையில் ‘கோபுரங்கள் சாய்வதில்லை’ திரைப்படத்தின் ப்ரிவியூ ஷோவைக் கண்ட பாக்யராஜ், அதற்கும் தான் உருவாக்கி வைத்திருக்கும் ‘சின்ன வீடு’ படத்தின் கதைக்குமான (திரைக்கதைக்கு அல்ல) மையப்புள்ளியில் ஒற்றுமை இருப்பதை அறிந்து திட்டத்தை மாற்றி ‘நான் வேறு கதையை உருவாக்குகிறேன்’ என்று தயாரிப்பு நிறுவனத்திடம் தெரிவித்தார். 'இப்போ இருக்கும் குறுகிய நேரத்தில் எப்படி கதையை தயார் செய்ய முடியும்?' என்கிற கேள்வி தயாரிப்பு நிறுவனத்திற்கு எழுந்தது.
ஆனால் இந்த நெருக்கடியிலும் சிறிய அவகாசத்திலும் பாக்யராஜ் எழுதி முடித்த கதைதான் ‘முந்தானை முடிச்சு’. இந்தக் கதையும், குறிப்பாக தலைப்பும் ஏவிஎம்மிற்கு பிடித்துப் போக பச்சைக்கொடி காட்டினார்கள்.
மனைவி இறந்த பிறகும், இரண்டாம் திருமணம் செய்யாமல் பிடிவாதமாக மனஉறுதியுடன் இருந்த தனது நண்பர் ஒருவரின் அனுபவத்தைக் கொண்டு பாக்யராஜ் உருவாக்கிய கதைதான் ‘முந்தானை முடிச்சு’.
ஆனால், முதல் மனைவியின் பிரிவுத் துக்கத்தில் அடுத்து வரும் பெண்ணை ஏற்க மனமில்லாமல் ஓர் ஆண் தவிப்பது குறித்து ஏற்கெனவே பல கதைகள் வந்துள்ளன. உதாரணமாக, கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் 1963-ல் வந்த ‘கற்பகம்’ திரைப்படக் கதையின் ஒரு பகுதி இதுவே. முதல் மனைவிக்கு நிகழும் மரணத் துக்கம் காரணமாக இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட பெண்ணிடம் நெருங்காமல் விலகியே நிற்பார் ஜெமினி கணேசன். பிறகு மெல்ல மெல்ல அவரின் மனம் மாறும்.
‘முந்தானை முடிச்சு’ கதையும் இதுவே. இதில் ஆண், பெண் பாத்திரத்தை அப்படியே மாற்றிப் போட்டால் ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’, ‘மெளன ராகம்’, ‘ராஜா ராணி’ ஆகிய திரைக்கதைகளோடு ஒப்பிட்டுப் பார்க்க முடியும்.
இப்படி கதையமைப்பின் அடிப்படையில் ஒற்றுமை இருந்தாலும் அந்தந்த இயக்குநர்களின் பிரத்யேகமான திரைக்கதையும் கையாண்ட விதமும்தான் சம்பந்தப்பட்ட படங்களின் வித்தியாசத்திற்கும் வெற்றிக்கும் காரணமாக அமைந்தன. அதன்படி ‘முந்தானை முடிச்சு’ திரைப்படத்திற்கு பாக்யராஜ் அளித்த ஜனரஞ்சகமான திரைக்கதையும் சுவாரஸ்யமான ட்ரீட்மெண்ட்டும் அவருக்கு பிரமாண்ட வெற்றியை அள்ளிக் கொடுத்தது. ‘தூறல் நின்னு போச்சு’ திரைப்படத்திற்குப் பிறகு கிராமத்துப் பின்னணியில் உருவான ‘முந்தானை முடிச்சு', ஏ, பி, சி… என அனைத்து சென்டர்களிலும் பாக்யராஜிற்கு ஏராளமான ரசிகர்களை அள்ளிக் கொடுத்தது. குறிப்பாக பெண் பார்வையாளர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றார்.

முந்தானை முடிச்சின் கதை இதுதான். இளம்பெண்ணான பரிமளம், பள்ளிச் சிறுவர்களுடன் இணைந்து குறும்புகள் செய்து விளையாட்டுத்தனமாக இருப்பவள். மாமன் பையன்கள் ஏராளமாக இருந்தும் அவர்களைத் திருமணம் செய்ய மறுக்கிறாள். ஆண்கள் வைப்பாட்டி வைத்துக் கொள்வது அந்தச் சமூகத்தில் மிக இயல்பாக இருப்பதுதான் அதற்குக் காரணம்.
இந்தச் சமயத்தில், அந்தக் கிராமத்தில் உள்ள பள்ளிக்காக ஒரு புதிய ஆசிரியர் வருகிறார். வழக்கப்படி பரிமளம் அவரிடமும் தன் குறும்புகளைச் செய்தாலும் அவரின் நல்லியல்புகளால் மெல்ல கவரப்படுகிறாள். ‘வாத்தியார்’ மனைவியை இழந்தவர். அன்பு மனைவியிடம் தந்த வாக்குறுதியின்படி இரண்டாம் திருமணத்தை பிடிவாதமாக மறுக்கிறார். தன்னுடைய குழந்தையைக் கண்ணும் கருத்துமாக வளர்க்கிறார்.
வாத்தியாரின் நற்குணங்களைப் பார்த்து அவரின் மீது தன்னிச்சையாக காதல் கொள்கிறாள் பரிமளம். ஆனால் அவரோ இவளை எரிச்சலுடன் விரட்டியடிக்கிறார். அவர் மறுமணம் செய்யாமலிருப்பதற்கு கூடுதல் காரணம் ஒன்றும் இருக்கிறது. சித்தி கொடுமையால் தன் பிள்ளை பாதிக்கப்படக்கூடாது என்று எண்ணுகிறார். எனவே தன் முடிவில் மிக உறுதியாக இருக்கிறார்.
வாத்தியாரை எப்படியாவது திருமணம் செய்ய வேண்டும் என்கிற நெருக்கடி காரணமாக ‘அவர் என்னிடம் தவறாக நடந்து கொண்டார்’ என்கிற பொய்ப்பழியைப் போட்டு பஞ்சாயத்தைக் கூட்டுகிறாள் பரிமளம். இதற்காக வாத்தியாரின் குழந்தையைத் தாண்டி பொய் சத்தியம் செய்யவும் துணிகிறாள். ஊரார் தரும் நெருக்கடி காரணமாக வேறு வழியின்றி பரிமளத்தை திருமணம் செய்கிறார் வாத்தியார்.
ஆனால் அபாண்டமான பழி போட்டு தன்னைத் திருமணம் செய்து கொண்ட பரிமளத்தை வெறுக்கிறார், வாத்தியார். அவளை நெருங்காமல் புறக்கணிக்கிறார். அப்படி விலகியிருத்தலே தான் அவளுக்கு தரும் தண்டனை என்று நினைக்கிறார்.
ஆனால் பல்வேறு சம்பவங்கள், சூழல் காரணமாக வாத்தியாரின் மனம் மெல்ல மாறுகிறது. இதன் உச்சமாக பரிமளம் செய்யத் துணியும் ஒரு தியாகம், வாத்தியாரின் பிடிவாதத்தை முற்றிலுமாக கலைத்துப் போடுகிறது. தம்பதிகள் இணைகிறார்கள். சுபம்.
அந்தக் காலக்கட்டத்தில், வெகுசன ரசனையை துல்லியமாகவும் கச்சிதமாகவும் புரிந்து வைத்திருந்த இயக்குநர்களில் பாக்யராஜ் முன்னணி வரிசையில் இருந்தார். எனவே அதன்படி சுவாரஸ்யமான கதை, திரைக்கதையை உருவாக்கும் அசாதாரணமான திறமையும் அவரிடம் இருந்தது.
சுவாரஸ்யமாக கதை சொல்லல், பாலியல் வாசனையுடன் கூடிய நகைச்சுவை, பெண்களைக் கவரும் சென்டிமென்ட் போன்றவற்றின் கலவைதான் பாக்யராஜ் உருவாக்கும் திரைக்கதைகளின் பொதுவான பாணி. இது ‘முந்தானை முடிச்சில்’ மிகக் கச்சிதமாக கூடி வந்திருந்தது.
இந்தத் திரைப்படத்தில் பாக்யராஜின் கதாபாத்திரத்திற்கு என்று தனியாக பெயர் எதுவுமில்லை. அனைத்துக் காட்சிகளிலும் ‘வாத்தியார்’ என்றே அழைக்கப்படுவார். ஆக்ஷன் ஹீரோவாக அல்லாமல் சாதாரண நபர்களைப் பிரதிபலிக்கும் நாயகனாக வெற்றி பெற்றவர்களில் பாக்யராஜ் முக்கியமானவர். எந்த ஹீரோவாவது கண்ணாடி அணிந்து கொண்டு டூயட் பாடியிருக்கிறாரா? இவர் அந்தச் சாதனையை இயல்பாக படைத்தார்.
இந்த ‘வாத்தியார்’ பாத்திரத்திற்கு மிக கச்சிதமாகப் பொருந்தியிருந்தார் பாக்யராஜ். ‘நான் வெவரமானவன். என்னை லேசுல ஏமாத்திட முடியாது” என்று பில்டப் தந்து, பரிமளம் குழுவிடம் ஏமாறும் துவக்கக் காட்சியிலேயே இவரது பாணி களைகட்டி விடுகிறது. கிராமத்து நபர்களிடம் ‘வணக்கம்’ வைத்து ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு மாதிரியான எதிர்வினை பெறும் காட்சி ஒன்றே போதும். பாக்யராஜின் பிரத்யேகமான நையாண்டிக்கு உதாரணம் அது.
நகைச்சுவைக்கு ஈடாக வலுவான சென்டிமென்ட் காட்சிகளையும் உருவாக்குவதில் பாக்யராஜ் விற்பன்னர். இவரின் குழந்தையை ‘பரிமளம்’ கீழே போட்டு தாண்டும் காட்சியில் பரபரப்பு அதன் உச்சத்தைத் தொட்டிருக்கும். இதைப் போலவே பாலியல் வாசனையுடன் கூடிய நகைச்சுவையை இடையில் செருகுவதிலும் வல்லவர்.
‘முந்தானை முடிச்சு’ திரைப்படத்தில் கவர்ச்சி அம்சத்திற்காக தீபா பயன்படுத்தப்பட்டிருந்தார். இவரிடம் ‘அ.. ஆ’ கற்றுக் கொள்வதற்காக ஊர் முதியவர்கள் அலைபாயும் நகைச்சுவைக் காட்சி மிக பிரபலமானது. ஆனால் இந்தத் திரைப்படத்தின் நகைச்சுவையின் எல்லை சில இடங்களில் அத்து மீறி முகஞ்சுளிக்கவும் வைத்தது. உதாரணமாக தீபாவும் பாக்யராஜூம் எப்படியெல்லாம் நெருங்கிப் பழகுவார்கள் என்கிற கற்பனையை பள்ளிச் சிறுவர்கள், முக்கல் முனகலுடன் கட்டிப் பிடித்து பாடிக் காண்பிக்கும் பாடல் காட்சி ("வா.. வா.. வாத்தியாரே.. வா”) அருவருக்கத்தக்கதாக இருந்தது.
ஆனால் தீபாவை வெறுமனே கவர்ச்சிக்காக மட்டும் பயன்படுத்தாமல் கதையின் போக்கு நகர்வதற்கும் ஏற்ற வகையில் பயன்படுத்தியது பாக்யராஜின் புத்திசாலித்தனம்.
‘பரிமளம்’ என்கிற முக்கியமான பாத்திரத்திற்குள் ‘ஊர்வசி’ வந்ததே ஒரு சுவாரஸ்யமான விஷயம். இதுதான் அவர் அறிமுகமான படம். உண்மையில் இந்தப் படத்திற்காக ஊர்வசியின் அக்காவான ‘கலாரஞ்சனி’தான் அழைக்கப்பட்டிருந்தார். அவர் தமிழ் வசனங்களை படிக்கத் திணறிய போது கூட வந்திருந்த தங்கையான ஊர்வசி, துடுக்குத்தனமாக வாங்கி படித்துக் காண்பிக்க 'அப்படி ஓரமா போய் உட்காரு’ என்று பாக்யராஜால் கண்டிக்கப்பட்டிருக்கிறார். அதனால் பாக்யராஜின் மீது மெல்லிய கோபமும் அவருக்குள் இருந்தது.
பிறகு இந்தப் படத்திற்காக எந்த நாயகியும் அமையாமல் பாக்யராஜ் திணறிக் கொண்டிருக்கும் போது அவருக்கு ‘ஊர்வசி’யின் ஞாபகம் வந்திருக்கிறது. அவரை அழைத்து வந்து பாவாடை, தாவணி அணிய வைத்து ‘டெஸ்ட் ஷூட்’ செய்து பார்த்ததில் இயக்குநருக்கு பரம திருப்தி. இந்த டெஸ்ட் ஷூட்டை செய்தவர், அப்போது பாக்யராஜிடம் உதவியாளராக இருந்த பாண்டியராஜன். “இப்படி நில்லு... அப்படி நட... அழு... சிரி…” என்று ஏகப்பட்ட கெடுபிடிகளை செய்தாராம் பாண்டியராஜன். ஒரு நேர்காணலில் பிற்பாடு இதை நினைவுகூர்ந்து சிரிக்கிறார் ஊர்வசி.
தன்னைப் பழிவாங்கவே, இயக்குநர் இந்தப் படத்தில் நாயகியாக வேடம் தந்திருக்கிறார் என்கிற எண்ணம் ஊர்வசிக்குள் எப்படியோ வந்திருக்கிறது. இரவு ஏழு மணிக்கே தூங்கி விடும் பழக்கமுள்ள அவர், படப்பிடிப்புகளில் இதற்காக எழுப்பப்படும் போதெல்லாம் ‘டைரக்டர் தம்மைப் பழிவாங்குகிறார்’ என்றே நினைத்தாராம். ஆனால் படம் முடிந்து தன்னைத் திரையில் பார்க்கும் போதுதான் ‘இத்தனை முக்கியத்துவம் கொண்ட பாத்திரமா’ என்பதே அவருக்கு உறைத்திருக்கிறதாம். படப்பிடிப்புகளில் விளையாட்டுத்தனமாக இருந்ததை எண்ணி பிற்பாடு வருந்தியிருக்கிறார் ஊர்வசி.
பிற்காலத்தில் ‘நடிப்பு ராட்சசி’ என்பது போல் கமல்ஹாசனிடமிருந்து கிடைத்த பாராட்டு உள்ளிட்டவைகளை எதிர்கொள்ளும் ஒவ்வொரு முறையும் பாக்யராஜை நன்றியுடன் நினைவுகூர்வாராம், ஊர்வசி.
நடிப்பில் ஆர்வமோ அனுபவமோ இல்லாத நிலையில் கூட ‘பரிமளம்’ என்கிற பாத்திரத்தை சிறப்பாக கையாண்டார் ஊர்வசி. பாக்யராஜிடம் குறும்புகள் செய்வதாகட்டும், தன் காதலை வெள்ளந்தியாக வெளிப்படுத்தி வாங்கிக் கட்டிக் கொள்வதாகட்டும், அதை எப்படியாவது நிறைவேற்றிக் கொள்வதற்காக என்று பொய் சத்தியம் செய்வதாகட்டும்., அதனால் குழந்தைக்கு ஆபத்து வந்து விடுமோ என்று எண்ணி உண்மையில் பொதுவில் சொல்லி கதறுவதாகட்டும்... என்று பல காட்சிகளில் பிரகாசிக்கிறார்.
குறிப்பாக படத்தின் இரண்டாம் பகுதியில் பரிமளத்தின் கொடி உயரே பறக்கிறது. தன்னை நிராகரிக்கும் வாத்தியாரிடம் கலங்குவதாகட்டும், தன் கணவருடன் சினிமா போகும் வைபவத்தை ஊர் முழுக்க தம்பட்டம் அடிக்கும் பெருமையாகட்டும், தன் கணவனுக்காக பெற்றோரையே எள்ளி நகையாடும் வீராப்பாகட்டும்... அத்தனை காட்சிகளிலும் ஒரு சம்பிரதாயமான தமிழ் பெண்ணின் குணாதிசயங்களை கச்சிதமாக வெளிப்படுத்துகிறார். கவர்ச்சியான ஆடையில் திரியும் தீபாவின் மீது தன் கணவன் சபலப்பட்டு விடுவாரோ என்று அஞ்சி தீபாவிடம் கோபமாகப் பேசி விட்டு, ‘அவ்வாறில்லை’ என்று அறிந்தவுடன் மனநிம்மதியுடன் தீபாவை விருந்து உபச்சாரம் செய்யும் காட்சியில் ஊர்வசியின் நடிப்பு அபாரமாக இருக்கும்.
ஊர்வசியுடன் சுற்றித் திரியும் சிறுவர்களின் குறும்பு, இந்தப் படத்தின் ஹைலைட் எனலாம். அதிலும் ‘தவக்களை’யின் தோற்றமும் நகைச்சுவையும் அந்தக் காலத்தில் பெருவாரியாக ரசிக்கப்பட்டது. ‘வாத்தியார்’ இவரது கிழிந்த டிரசவுரில் ‘பின்’ குத்தும் போது அது எசகுபிசகான இடத்தில் பட்டுவிட இவர் தரும் முகபாவம் சிரிப்பை வரவழைக்கக்கூடியது. இவரின் உண்மையான பெயர் சிட்டிபாபு. இவரின் தந்தை பாக்யராஜின் முந்தைய படங்களில் துணைநடிகராக நடித்திருந்தார். அந்தப் பழக்கத்தில் ‘தவக்களை’யை பாக்யராஜிடம் அறிமுகப்படுத்தியிருக்கிறார். உண்மையில் ‘தவக்களை’யின் இடத்தில் நடிப்பதற்காக பாக்யராஜ் திட்டமிட்டிருந்தது ‘பாண்டியராஜனை’ என்கிற தகவல் சுவாரஸ்யமானது.
ஆனால் இதில் பாண்டியராஜன் இல்லாமல் போனதற்குப் பின்னாலும் சுவாரஸ்யமான சம்பவங்கள் இருக்கின்றன. ‘முந்தானை முடிச்சு’ படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த சமயத்தில், தனியாக படம் இயக்குவதற்கான சந்தர்ப்பம் பாண்டியராஜனுக்கு அமைந்திருக்கிறது. எனவே அப்போது உதவியாளர்களாக இருந்த பாண்டியராஜன், லிவிங்ஸ்டன், ஜி.எம்.குமார் ஆகிய மூவரும் பாக்யராஜின் கோபத்திற்குப் பயந்து சொல்லாமல் கொள்ளாமலேயே ‘எஸ்கேப்’ ஆகியிருக்கிறார்கள்.
தனது உதவியாளர்கள் இப்படி நட்டாற்றில் கைவிட்டாலும் படத்தின் முழு சீன்களும் பாக்யராஜின் மனதில் இருந்ததால் திறமையாக சமாளித்திருக்கிறார். அந்தக் கோபத்தை இந்தப்படத்தின் ஒரு காட்சியிலும் சாமர்த்தியமாக வெளிப்படுத்தியிருப்பார், பாக்யராஜ். மூன்று சிறுவர்களும் பஞ்சாயத்தில் வாத்தியாருக்கு எதிராக பொய் சொன்னதையடுத்து ‘உங்களை மாதிரி குரு துரோகிகளை நான் பார்த்ததே இல்லை’ என்று அந்தக் காட்சியில் சொல்வார் பாக்யராஜ்.
ஆனால் குருவை மிஞ்சிய சிஷ்யனாக செயல்பட்டிருக்கிறார் பாண்டியராஜன். இந்தக் காட்சி தங்களைத்தான் குறிக்கிறது என்பது அவருக்குப் புரிந்து விட்டது. எனவே தான் இயக்கிய முதல் திரைப்படமான ‘கன்னிராசி’யில் முதல் சீனிலேயே இதற்கான பிராயச்சித்தத்தை செய்திருக்கிறார். பாக்யராஜின் தோற்றம் கொண்ட ஒரு நபர், கோயிலுக்கு வந்து, ‘தனிக்குடித்தனம் போகணும்னு ஆசைப்பட்டுட்டோம்.. பெரியவங்க கோச்சுக்காம ஆசிர்வாதம் பண்ணணும்’ என்று சொல்வது போல் ‘சீனை’ வைத்து பாக்யராஜை கூல் செய்ய முயன்றிருக்கிறார். தன் சிஷ்யன் திறமையாக இயக்கிய இந்தப் படத்தைப் பார்த்த பாக்யராஜிற்கு கோபமெல்லாம் பறந்து விட்டதாம்.
இந்தச் சிறுவர்களில் ஒருவராக நடித்திருந்தவர் ‘மாஸ்டர்’ சுரேஷ். கே.கே.செளந்தர், பயில்வான் ரங்கநாதன் (வைத்தியர்), ‘பசி’ சத்யா போன்ற திறமையான துணைநடிகர்களும் தங்களின் பங்களிப்பைத் தந்திருக்கிறார்கள். ‘வாத்தியாரின்’ முதல் மனைவியாக, பூர்ணிமா பாக்யராஜ் சில காட்சிகளில் உருக்கமாக வந்து போகிறார். இதில் கர்ப்பிணி பெண்ணாக நடித்த கோவை சரளா, உண்மையில் அப்போது பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாராம்.
இந்தப் படத்தின் இசை இளையராஜா. இவருக்கும் பாக்யராஜிற்கும் ஆரம்பத்தில் இருந்தே ஏழாம் பொருத்தம். ‘புதிய வார்ப்புகள்’ திரைப்படத்திற்காக பாக்யராஜை ஹீரோவாக போட பாரதிராஜா முடிவு செய்த போது "இவரையா?” என்று ஆட்சேபம் தெரிவித்திருக்கிறார் ராஜா. பிறகு பாக்யராஜ் வெற்றிகரமான இயக்குநராக மாறிய போது தன் பிழையை எண்ணி வருந்தவும் செய்திருக்கிறார்.
பாக்யராஜிற்கும் கங்கை அமரனுக்கும் உள்ள நட்பு நெருக்கமானது. எனவே தன் திரைப்படங்களில் கங்கை அமரனை தொடர்ந்து பயன்படுத்தியிருக்கிறார் பாக்யராஜ். அந்த வரிசையில் ‘முந்தானை முடிச்சிற்கும்’ கங்கை அமரனையே இசையமைக்கச் சொல்லி வாக்களித்திருக்கிறார். ஆனால் இது கிராமம் சார்ந்த கதை என்பதால் ‘இளையராஜா’ இசையமைத்தால் நன்றாக இருக்கும் என்று தயாரிப்பு நிறுவனம் கருதியிருக்கிறது. ஆனால் முதலிலேயே வாக்களித்து விட்டதால் பாக்யராஜ் இதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. இதைப் போலவே, ‘ஏன் என்னை முதலில் அழைக்கவில்லை’ என்று ராஜாவும் இசையமைக்க மறுத்து விட்டாராம். பிறகு எப்படியோ சமாதானப்படுத்தியிருக்கிறார்கள்.
பாடல் ஒலிப்பதிவின் போதும் பாக்யராஜிற்கும் இளையராஜாவிற்கும் இடையில் சிறு உரசல் ஏற்பட்டது. நா.காமராசன் ஏற்கெனவே எழுதிய பாடல் வரிகளில் பாக்யராஜிற்கு திருப்தியில்லை. எனவே கடைசி நேரத்தில் பாடல் வரிகளை மாற்றியிருக்கிறார். அந்தப் பாடல்தான் ‘வெளக்கு வெச்ச நேரத்துல மாமன் வந்தான்’. ஆனால் இது ஆபாசமான அர்த்தத்தை தருவதாக இருந்ததாலும் அதற்குள் பாடல் ஆறு டேக்குகள் முடிந்து இறுதி நிலைக்கு வந்து விட்டதாலும் ராஜா பாட மறுத்து விட்டார். பிறகு சில இடங்களில் தத்தகாரமாக பாடி மழுப்பி விட்டார். ஆனால் ராஜா இப்படி பாடியதுதான் அந்தப் பாடலுக்கு கூடுதல் சுவையைத் தந்து விட்டது என்று சொல்லி மகிழ்கிறார் பாக்யராஜ்.
ஆனால் இத்தனை கலாட்டா நடந்த இந்தப் பாடல், படத்திற்குள் வராமல் டைட்டில் கார்டின் பின்னணியில் முடிந்து விட்டது.
இப்படி சில உரசல்கள் இருந்தாலும் பாடல்களின் இனிமையிலோ பின்னணி இசையிலோ ராஜா வழக்கம் போல் எவ்விதக் குறையும் வைக்கவில்லை. ‘வா.. வா.. வாத்தியாரே.. வா..’, ‘கண்ணத் தொறக்கணும் சாமி’, ‘நான் புடிச்ச மாப்புளதான்’ ஆகிய பாடல்கள் அனைத்தும் அட்டகாசமான துள்ளலிசைப் பாடல்கள்.
‘அந்தி வரும் நேரம்’ என்பது ஒரு நல்ல மெலடி. ‘சின்னஞ்சிறு கிளியே’ என்பது கதையின் சூழலுக்கு பொருத்தமான வரிகளுடன் வரும் இனிமையான சோகப்பாடல். காட்சிகள் உணர்ச்சிகரமாக பயணிக்கும் சூழல்களில் ராஜாவின் பின்னணி இசை காட்சிகளின் தரத்தை மேலே உயர்த்திச் செல்கிறது. ‘தன்னிடம் தவறாக நடந்து விட்டார்’ என்று பரிமளம் பஞ்சாயத்து கூட்டும் இடம், ‘தன்னை நிராகரித்துச் செல்லும் பாக்யராஜின் பின்னால் ஊர்வசி அழுது பின்தொடரும் இடம்’ ஆகியவற்றை ராஜாவின் மேதைமைக்கு உதாரணமாகச் சொல்லலாம்.
படத்தின் துவக்க காட்சியில் ஒரு முதிய தம்பதியினர், பரஸ்பர அன்புடன் ஒருவருக்கொருவர் ஊட்டிக் கொண்டு உணவு சாப்பிடும் காட்சி வருகிறது. இது நடிகர் நம்பியாரின் சொந்த வாழ்க்கையில் நடக்கிற விஷயம். நம்பியார் வெளியூர் படப்பிடிப்புகளுக்குச் செல்லும் போதெல்லாம் அங்கு தரும் உணவை ஏற்க மாட்டாராம். மனைவி கையால் தயாரித்து வழங்கும் உணவைத்தான் உண்பாராம். இதற்காக அனைத்து வெளியூர் படப்பிடிப்புகளுக்கும் மனைவியை அழைத்துச் செல்வாராம். ‘தூறல் நின்னு போச்சு’ படப்பிடிப்பில் நம்பியார் இப்படி மனைவியுடன் பாசத்துடன் பழகியதைப் பார்த்து இதில் காட்சியாக இணைத்து விட்டார் பாக்யராஜ்.
முருங்கைக்காய்!
இந்தப் படத்தின் மூலம் பாக்யராஜை விடவும் அதிக புகழ் பெற்றது என்று ‘முருங்கைக்காயை’ச் சொல்லலாம். ஒரு விவகாரமான விஷயத்திற்காக இது பயன்படும் என்கிற அரிய மருத்துவ உண்மை, இந்தப் படத்தின் மூலம் வெளிப்பட அப்போது தமிழகத்தில் முருங்கைக்காய்க்கு ஏகப்பட்ட டிமாண்ட் ஏற்பட்டிருக்கிறது.
கம்புக்காட்டில் மாடு பாய்வது போல முருங்கைக்காய் மீது பாய்ந்திருக்கிறார்கள் தமிழகத்தின் ஆண்கள். என்றாலும் மருத்துவ ரீதியாக இதில் உண்மை இல்லை என்கிறார்கள் வல்லுநர்கள்.
தெலுங்கில் ‘மூடு முள்ளு’ (மூன்று முடிச்சு) என்கிற தலைப்பில் 1983-ல் ரீமேக் செய்யப்பட்ட இந்தத் திரைப்படம் பெரிய வெற்றியைக் கண்டது. அது மட்டுமல்ல. கூடுதல் ஆச்சர்யமும் உண்டு. இதன் வெற்றியைக் கண்ட இன்னொரு தெலுங்கு தயாரிப்பாளர், ‘முந்தானை முடிச்சு’ படத்தை அனுமதி பெற்று தெலுங்கில் ‘டப்’ செய்து வெளியிட அதுவும் நூறு நாள்கள் ஓடியது.
இத்தனை சாதனைகளை புரிந்த இந்தத் திரைப்படம், சமீபத்தில் ‘சசிகுமார்’ நடிப்பில் ரீமேக் ஆகவிருப்பது, பாக்யராஜ் இன்னமும் செல்லுபடியாகக்கூடிய கதாசிரியர் என்கிற உண்மையை வெளிப்படுத்துகிறது.????????
எல்லாம் ‘முருங்கைக்காய்’ மகிமை!

 

Thiyaghu Ktr
 

Leave a Reply