• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பாடும் நிலா பாலு..

சினிமா

ஆந்திர மாநிலம் நெல்லூரில் பிறந்து தமிழகத்தின் இசைக்குரலாய் ஒலித்தவர்.
எஸ்பிபி அவர்களின் இசை வாழ்வில் நடந்த சில சுவாரஸ்யமான சம்பவங்களை மட்டும் தேர்ந்தெடுத்து தர முயற்சிக்கிறேன்.
எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு முதல் தேசிய விருதை பெற்று தந்த படம், சங்கராபரணம். கே.விஸ்வநாத் இயக்கி இருந்த இந்த படம் 1980 ஆம் ஆண்டு வெளியானது. சோமையாஜூலு, மஞ்சு பார்கவி, ராஜலட்சுமி, துளசி, சந்திரமோகன் உள்பட பலர் நடித்திருந்த படம் இது. பாலு மகேந்திரா ஒளிப்பதிவு செய்திருந்தார். கே.வி.மகாதேவன் இசை அமைத்திருந்தார்.
சங்கராபரணம் இன்றளவும் கர்நாடக சங்கீதத்தின் இலக்கணம் போன்று பாவிக்கப்படும் ஒரு படம். இதில் அமைந்த பாடல்கள் ஒவ்வொன்றும் வார்த்தைகளால் வர்ணிக்க இயலாதவை.
சரி இந்த படத்தில் பாடியதற்கு தேசிய விருது கிடைத்ததில் என்ன அற்புதம் என கேட்கலாம்.
இந்த படத்தை பார்த்த பின் பல சங்கீத மேதைகளே பாராட்டிய போது பாலசுப்ரமணியம் அமைதியாக சொன்னது இதுதான் எனக்கு கர்நாடக சங்கீதம் தெரியாது.
தூக்கி வாரிப்போட்டது பலருக்கு. என்னது முறைப்படி சங்கீதம் கற்றவனே தடுமாறும் இந்த காலத்தில் சங்கீத வாடையே இல்லாமல் இந்த ஆள் எப்படி பாடினான்.???
ஒரு வேளை சரஸ்வதியே வந்து நாவில் நர்த்தனம் செய்தாளோ என்னவோ என நினைத்துக் கொண்டனர்.
இந்த படத்திற்கு முதலில் பாடுவதாக இருந்தவர் பெயரை கேட்டால் நீங்க ஆச்சர்யப்படுவீர்கள். சங்கீத சக்கரவர்த்தியாக வலம் வந்த பாலமுரளி கிருஷ்ணாதான் அவர். அவர் பாட இயலாத காரணத்தால் பாலு பாடவைக்கப்பட்டார்.பாலமுரளி கிருஷ்ணா செய்யாத வியத்தை பாலுவை வைத்து வெற்றிகரமாக முடிப்பது என்பது கேவி மகாதேவன் போன்ற மேதைகளுக்கு மட்டுமே சாத்தியம்.
இந்த படம் வெளிவந்த போது பாலமுரளி கிருஷ்ணா கடுமையாக விமர்சித்து இருந்தார். ஆனால், அதை பாசிட்டிவாக எடுத்துக் கொண்டார் எஸ்.பி.பி. அவருக்கு எதிராக எந்த பதிலையும் கூறவில்லை. இதனால் எஸ்.பி.பி மீது மரியாதைக் கூடியது. பின்னர் ஒரு பேட்டியில் பாலமுரளி கிருஷ்ணா சொன்னார், 'பாலமுரளி கிருஷ்ணா போல எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாட முடியும். ஆனால், பாலமுரளி கிருஷ்ணாவால், எஸ்.பி.பி மாதிரி பாட முடியாது' என்று.
அதுதான் பாலு.
அடுத்தபடியாக தேசிய விருது பெற்ற அடுத்த படம் ஏக் துஜே கேலியே. கே பாலச்சந்தர் இயக்கத்தில் கமல் ரதி நடித்த இந்த படம் வந்த போது ஏகத்துக்கும் இந்தி திரையுலகம் அதிர்ந்து போனது. பாடல்கள் அனைத்தும் அதிரிபுதிரி ஹிட். தமிழகத்து ஜாம்பவான்கள் அசால்டாக இந்தி திரையுலகை வெற்றி கொண்ட நேரம் அது.
இதில் வந்த தேரே மேரே பீச் மே பாடல் இன்றளவும் வற்றாத இளமை ஊற்று என்றால் மிகையாகாது. வழக்கம் போல பாலுவின் வசீகர குரல் வடக்கத்தான்களையும் கட்டி போட்டது.
சரி இந்த படத்திற்கு விருது கிடைத்ததில் என்ன ஆச்சர்யம் என பார்க்கிறீர்களா???
தேசிய விருதை வாங்கிய கையோடு பாலு மீண்டும் அமைதியாக சொன்னது எனக்கு இந்தி தெரியாது…
க்யா ரே க்யா பாத் கர்த்தே தூம் என கொலைவெறியாக பையாக்கள் வெறித்து பார்த்தனர்.
இதெல்லாம் பாலசுப்பிரமணியத்தால் மட்டுமே சாத்தியம்.

சமீபகாலமாக சில இசையமைப்பாளர்கள் ஜேசுதாஸ் அவர்களை வேலை வாங்கிவிட்டேன் எஸ்பிபி யை வேலை வாங்கி விட்டேன் என இறுமாப்புடன் பேசி திரிகிறார்கள் அவர்களுக்கு நான் சொல்வது ஒன்றே ஒன்றுதான் இசை என்றால் என்னவென்று தெரியுமா கேவி மகாதேவனும் எம்எஸ்வி அவர்களும் கடித்து துப்பியதுதான் இசை என ஒரு போடு போட்டாரே பார்க்கலாம். எதிர்தரப்பில் மயான அமைதி.
இதை மறுக்க வேண்டிய தகுதி இருந்தும் இளையராஜா அமைதியாக சிரித்து கொண்டார். ஏனென்றால் எஸ்பிபி எந்த அளவு அந்த மேதைகளை மதித்தாரோ அதைவிட ஒரு படி அதிகமாகவே நேசித்தவர் ராஜா. இப்போது உள்ள தாறுமாறு இசையமைப்பாளர்களுக்கு பாலு கொடுக்கும் பதில்தான் சரியான கடிவாளம் என நினைத்து இருந்திருப்பார்.
இளையராஜா அவர்களுடன் ராயல்டி விசயத்தில் முரண்பட்டாலும் மோதி கொள்ளவில்லை.
தனது தொழிலில் சமகால ஜாம்பவானன ஜேசுதாஸ் அவர்களுடன் சகோதரன் மாதிரி பழகியது இந்த தலைமுறை பாடகர்கள் கற்று கொள்ள வேண்டிய விசயம்.
தனது வாழ்நாளில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட மொழிகளில் 40000 பாடல்களை பாடி தள்ளுவது என்பது சாதாரன சாதனை அல்ல.
இன்றைக்கும் அனைத்து கோவில் விழாக்களில் தவறாமல் ஒலிக்கும் ஹர ஹர சிவனே அருணாச்சலனே பாடல் சிவபெருமானே இவரது பாடலை அங்கீகரித்ததற்கு சமம்.
தான் வாழ்ந்து வந்த பூர்விக வீட்டை காஞ்சி சங்கர மடத்திற்கு சொந்தமான பாடசாலைக்கு அர்ப்பணித்து விட்டது ஒரு சனாதன வாதியாக அவரின் மீதுள்ள மதிப்பை கூட்டுகிறது.
பாடுவதற்கென்றே பிறந்தவர் பாலு நீங்கள், சலிக்காமல் பாடினீர்கள், உங்கள் வாழ்க்கையையும் பாடலையும் பிரித்து பார்க்க முடியாது. வாழும்போதே நிறைவான வாழ்வை வாழ்ந்து விட்டீர்கள் பாலு உங்கள் உயிர் உடலை பிரிந்தாலும் பாடலாக வாழ்ந்து கொண்டுதான் இருப்பீர்கள் பாலு…
இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்..!!!

Rj Nila

Leave a Reply