• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தன்னை மறந்து சொக்கிப் போனார்  கண்ணதாசன்

சினிமா

கூப்பிடுங்கள் கண்ணதாசனை......"
தன்னை மறந்து சொக்கிப் போனார்  கண்ணதாசன் ,
அந்த பருவ மங்கை துள்ளிக் குதித்து பந்து விளையாடும் பேரழகில்..!
இது நடந்தது "ஆதி பராசக்தி" படத்திற்கான பாடல் எழுதும்போது.
'ஆதிபராசக்தி' படத்தில் அபிராமி பட்டர் , அதாவது எஸ்.வி.சுப்பையா பாடுவதாக வரும் பாடல்.
இந்தக் காட்சிக்கு "அபிராமி அந்தாதி" பாடல்களைத்தான் பயன்படுத்த முதலில்  திட்டமிட்டிருந்தார்  இயக்குனர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்.
ஆனால் அவர்  எதிர்பார்த்த உணர்ச்சிகள் அதில் வரவில்லை.
"கூப்பிடுங்கள் கண்ணதாசனை!"
வந்தார் கண்ணதாசன்.
காட்சியை விளக்கினார் இயக்குனர்.
கண்ணதாசன் தயாரானார் :
"முதலில் அபிராமி அந்தாதி வரிகளை அப்படியே போட்டுக் கொள்வோம்.
எழுதிக் கொள்ளுங்கள்."
கண்ணதாசன் சொல்ல சொல்ல உதவியாளர் எழுதிக் கொண்டார்.
"மணியே மணியின் ஒளியே 
ஒளிரும் மணி புனைந்த
அணியே 
அணியும் அணிக்கழகே அணுகாதவர்க்குப்
பிணியே 
பிணிக்கு மருந்தே 
அமரர் பெருவிருந்தே
பணியேன் ஒருவரை 
நின் பத்ம பாதம் பணிந்த பின்னே."
இந்த இடத்தில் பாடலை நிறுத்திய கண்ணதாசன் "போதும் அபிராமி அந்தாதி" என்றார்.
கண்களை மூடிக் கொண்டு மௌனமானார்  கண்ணதாசன்.
சில நிமிட அமைதிக்கு பிறகு வந்தவை , அவரது சொந்த வார்த்தைகள்:
"சொல்லடி அபிராமி 
வானில்
சுடர் வருமோ 
எனக்கு இடர் வருமோ?"
வார்த்தைகள் வந்து விழ விழ , அதை பிடித்து எழுத்தில்  வடித்துக் கொண்டார் உதவியாளர்.
கிட்டத்தட்ட முக்கால்வாசி பாடல் முடிந்து விட்ட வேளை அது.
பாடலின் "இறுதி வரிகளாக" , என்ன என்னவோ சொல்லிப் பார்க்கிறார் கண்ணதாசன். எதுவும் அவருக்கு திருப்தி தரவில்லை.
மீண்டும் கொஞ்ச நேரம் கண்களை மூடுகிறார் கவியரசர்..
அவர் கண்களுக்குள் ஒரு இளம்பெண் வந்து , பந்து விளையாடுகிறாள்.
அவள் துள்ளிக் குதித்து  பந்து விளையாடும் அந்த அழகில் சொக்கிப் போகிறார்..!
ஆம்..!
*****
"திருக்குற்றாலக் குறவஞ்சி" பாடல் , கவியரசர் கண்களுக்குள் திரும்ப திரும்ப வருகிறது.
(தென்காசியை அடுத்த மேலகரத்தில் 
18 -ஆம் நூற்றாண்டில் வசித்து வந்த திரிகூடராசப்பக் கவிராயர் எழுதிய பாடல்கள்தான்  திருக்குற்றாலக் குறவஞ்சி)
அந்த  குற்றாலக் குறவஞ்சியில் வரும் நாயகி  வசந்தவல்லி பந்தாடும் அழகை பற்றிச் 
சொல்லும் வரிகள்.
பந்து துள்ளுவதை போல, 
பாடல் வரிகளும் கூட துள்ளும்.
இதோ , அந்தப் பகுதி :
*வசந்தவல்லி பந்தடித்தல்*
செங்கையில் வண்டு கலின்கலி னென்று செயஞ்செயம்
என்றாட - 
இடை
சங்கத மென்று சிலம்பு புலம்பொடு தண்டை
கலந்தாட - 
இரு
கொங்கை கொடும்பகை வென்றன மென்று குழைந்து
குழைந்தாட - 

மலர்ப்
பைங்கொடி நங்கை வசந்த சவுந்தரி
பந்து பயின்றாளே.
இவைதான் குற்றாலக் குறவஞ்சி வரிகள்.
இந்த பந்து விளையாட்டு பாடலை , பற்றிப் பிடித்துக் கொண்டார் கண்ணதாசன்.
முதல் மூன்று வரிகளை வார்த்தை மாறாமல் அப்படியே எடுத்துக் கொண்டு , கடைசி வரியை மட்டும் இப்படி மாற்றி முடித்தார்...
"மலர்ப் பங்கயமே உனைப் பாடிய பிள்ளை முன் 
நிலவு எழுந்தாட
விரைந்து வாராயோ 
எழுந்து வாராயோ
கனிந்து வாராயோ."
இப்படித்தான் உருவானது"ஆதிபராசக்தி" படத்தில் வரும் பாடல்.
கவியரசரை தவிர வேறு எவரும் இத்தனை பொருத்தமாக வார்த்தைகளை கோர்த்து, இந்த பாடலை வடித்திருக்க முடியாது. ????
டி. எம்.சௌந்தரராஜன் அவர்களை தவிர,   வேறு யாராலும் இவ்வளவு உயிர்ப்பாய் இந்த  பாடலினை பாடி இருக்க முடியாது!
திரை இசை திலகம் கே. வி. மகாதேவனின் அதிஅற்புதமான இசையில், எஸ். வி. சுப்பையா அவர்கள் மிக சிறப்பாக நடித்திருக்கும் இந்த காட்சி, பாடலை எவராலும் மறக்க முடியாது!

 

Viji
 

Leave a Reply