• Welcome to TamilsGuide
செய்திகள் 1

உரும்பிராய் இந்து  பழைய மாணவர் சங்கம்- கனடா நடத்திய 30வது பொங்கல் விழா

கனடா

உரும்பிராய் இந்து  பழைய மாணவர் சங்கம்- கனடா நடத்திய 30வது பொங்கல் விழாவில் தொழிலதிபர் சாந்தா பஞ்சலிங்கத்தின் பன்முகப் பங்களிப்புக்களுக்கு பாராட்டு

உரும்பிராய் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் - கனடா, தங்களது 30வது ஆண்டு பொங்கல் விழாவை கடந்த 20-01-2024 சனிக்கிழமை அன்று ஸ்காபறோ மாநகரில் அமைந்துள்ள தமிழ் இசைக் கலாமன்ற அரங்கில் வெகு சிறப்பாகக் கொண்டாடியது. சிறப்புப் பேச்சாளராக பட்டிமன்ற நட்சத்திரப் பேச்சாளர் திரு. மோகனசுந்தரம் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

மேற்படி விழாவில் தொழிலதிபர் சாந்தா பஞ்சலிங்கம் உரும்பிராய் இந்துக் கல்லூரியின் பழைய மாணவராக இருந்தாலும் உரும்பிராயில் உள்ள பல பாடசாலைகளின் வளர்ச்சிக்கு உதவிகளை வழங்கியதோடு கனடாவிலும் பல அமைப்புக்களின் வளர்ச்சிக்கு உதவியுள்ளார் என்பதை பலர் சுட்டிக் காட்டினார்கள்.

மங்கல விளக்கு பிரதம விருந்தினர்கான திரு, திருமதி..சாந்தலிங்கம், பவளமலர் மற்றும் திரு.திருமதி. கதிர்காமநாதன் தையல்நாயகி ஆகியோரால் ஏற்றப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பெற்றன. தமிழ்த்தாய் வாழ்த்தைத் தொடர்ந்து கனடிய தேசிய கீதம் தமிழில் பாடப்பட்ட.து. மௌன அஞ்சலியைத் தொடர்ந்து “கவியாலயா நடனப்பள்ளி” மாணவிகளின் சிறப்பான வரவேற்பு நடனம் இடம் பெற்றது.

அடுத்த நிகழ்வாக  சங்கத்தினால் நடத்தப்பெற்ற கணிதம், மற்றும் ஆங்கிலப் போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கான முதலாவது பரிசளிப்பு நிகழ்வு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வயலின், மிருதங்கம், கஞ்சிரா ஆகிய வாத்தியங்கள் இணைந்த இனிமையான வாத்தியக் கச்சேரி ஒன்று நடைபெற்றது. தொடர்ந்து 2வது பரிசளிப்பு விழா இடம் பெற்றது. தலைவர் உரையை திரு.ஜெயமுகுந்தன் ஜெயரட்ணமும், பிரதம விருந்தினர் உரையை திரு. சாந்தலிங்கம் பஞ்சலிங்கமும் நிகழ்த்தினர். சங்கத்தின் தலைவரான ஜெயமுகுந்தன்  அவர்கள் , தொழிலதிபர் சாந்தா பஞ்சலிங்கம் அவர்கள் பொதுவான கனடிய சமூகத்திற்கும் உரும்பிராய் பாடசாலைகளுக்கும் செய்த நிதி உதவிகளைப்பற்றி வெகுவாகப் பாராட்டிப் பேசினார்.

செல்வி. கவிசா வைகுந்தனின் நெறியாள்கையில் நடைபெற்ற இராக சங்கமம் நிகழ்வில் வீணைக் கச்சேரி சிறப்பாக நடைபெற்றது. தொடர்ந்து திரு.ஜெயந்திராஜா தம்பிராஜாவின் சிறப்புரையும்,  “சரஸ்வதி நர்த்தனாலயா” ஆசிரியை பரதகலா வித்தகர் ஸ்ரீமதி. சுபிதா ரத்மேனன் அவர்களின் மாணவிகள் வழங்கிய நடனமும், “சாயி நிருத்திய நாட்டியக் கலாசாலை” ஆசிரியை நாட்டியக் கலைமணி பரதகலா வித்தகர் ஸ்ரீமதி. சுஜீவி மகாதேவன் மாணவிகளின் நடன விருந்தும் சிறப்பாக இடம் பெற்றது. செல்வி.வந்திகா நிற்சுதனினின் இன்னிசை விருந்தும் ரசிக்கும் படியாக இருந்தது.

கணிதம், ஆங்கிலப் போட்டிகளை வெற்றிகரமாக நடாத்துவதற்கு காரணமாக இருந்த தொண்டர்களுக்கான கௌரவிப்பும் பிரத்தியேக நிகழ்வாக நடைபெற்றது. “சந்திரசேகரம் நாட்டிய சங்கீத கலைக்கூடம்” ஆசிரியை ஸ்ரீமதி. அனுசியா ஜெயன் அவர்களின் மாணவிகளின் அற்புதமான நடன நிகழ்வும் இடம் பெற்றது. சிறப்புப் பேச்சாளராக வந்த திரு. மோகனசுந்தரம் அவர்களை பாராட்டி, மாலை அணிவித்து, பொன்னாடை போர்த்தி கௌரவித்ததுடன் நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டன. “நகைச்சுவை அருவி” என்ற பட்டமும் வழங்கப்பட்டது. “உள்ளதைச் சொல்லவா” என்ற நகைச் சுவை நாடகம் தமிழர் மத்தியில் பிரபலமான பல்கலை வித்தகர் திரு.கணபதி. ரவீந்திரன் தயாரிப்பில் இடம் பெற்றது.

அடுத்து பட்டிமன்றப் பேச்சாளரும், நடிகரும், கவிஞருமான நகைச்சுவை நயாகரா என அழைக்கப்படும் மோகனசுந்தரம் வழங்கிய பேச்சு இடம் பெற்றது. தனது நகைச்சுவைப் பேச்சால் பார்வையாளர்களை வாய் விட்டுச் சிரிக்க வைத்தார்.  தனது பேச்சினூடே சிறந்த கருத்துக்களையும் முன் வைத்தார். நிகழ்ச்சி முடிவில் பார்வையாளர்களுக்கான அதிஸ்ட்ட லாபச் சீட்டு இழுப்பில் 10க்கு மேற்பட்ட பெறுமதியான பரிசுப் பொருட்கள் வழங்கப் பட்டன. இறுதியாக நன்றியுரை  சங்கத்தின் செயலாளர் திரு.வரதராஜன் தம்பித்துரையால் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிகளை அழகாக செல்வி. கவிஷா உதயனன், செல்வன் லதீஷன் கிரிகரன், திரு. ஜெயக்குமார் சிந்தாமணி  ஆகியோர் தொகுத்து வழங்கினர்.

அங்கு உரையாற்றிய பலரது உரைகளிலிருந்து பல முக்கிய விடயங்களை கவனிக்கக் கூடியதாக இருந்தது.

கலை நிகழ்ச்சிகளில் பங்கு பற்றியவர்கள் அனைவரும், உரும்பிராய் கல்லூரிகள், பாடசாலைகளில் படித்த பழைய மாணவர்களின் பிள்ளைகள் என்பது சிறப்பான விடயம். ஏறக்குறைய தாயகத்தில் உள்ள 4 பாடசாலைகளின் வளர்ச்சிக்கு இச்சங்கத்தினர் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகிறார்கள். நிர்வாக உறுப்பினர்கள் தலைவர், செயலாளர்  உட்பட ஒவ்வொரு வருடமும் மாற்றப் பட்டு வருவதும் சிறப்பான அம்சம். ரொறொண்;ரோ மாநகரில் முதன் முதலாக பொங்கல் விழாவைக் கொண்டாடியவர்கள் என்ற பெருமையை உரும்பிராய் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர்களின் கனடாசங்கம் பெறுகின்றது. தற்போது, கனடிய அரசாங்கங்களால் தைமாதம் மரபுத் திங்களாகக் கொண்டாடப் படுவது குறிப்பிடத்தக்குது. இந்தச் சங்கம் 30 ஆண்டுகளாக வெற்றிகரமாக இயங்கி வருவதற்கு முக்கிய  காரணம் ஒற்றுமை எனலாம்.  

இங்;கே காணப்படும் படங்கள் அங்கு எடுக்கப்பெற்றவையாகும்.

படங்கள்: சத்தியன்

Leave a Reply