• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தியேட்டரில் செட் போட்ட சிவாஜி; நிஜப் புலியையே கொண்டு வந்து நிறுத்திய எம்.ஜி.ஆர்

சினிமா

கர்ணன் vs வேட்டைக்காரன் மோதல்: தியேட்டரில் செட் போட்ட சிவாஜி; நிஜப் புலியையே கொண்டு வந்து நிறுத்திய எம்.ஜி.ஆர்

கர்ணன் படத்தை சிவாஜி பிலிம்ஸ் நிறுவனமும், வேட்டைக்காரன் படத்தை எம்.ஜி.ஆர் பிச்சர்ஸ் நிறுவனமும் வாங்கி வெளியிடுகின்றனர்.

பிளாக் அன்ட் வொயிட் காலத்தில் தமிழ் சினிமாவின் 2 முக்கிய ஆளுமைகளாக இருந்தவர்கள் எம்.ஜி.ஆர் – சிவாஜி. இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்ததாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகும். அதேபோல் சிவாஜி வந்த பிறகுதான் எம்.ஜி.ஆர், அம்மா இருவருக்கும் சாப்பாடு பரிமாறுவார் என்றும், சிவாஜியின்’ அம்மாவும் இதையே தான் செய்வார் என்றும் பலர் சொல்ல கேட்டிருப்போம்.

திரையுலகில் இருவரும் சமகால நடிகர்கள் என்றாலும் இருவருக்கும் தனித்தனியாக ரசிகர்கள் பட்டாளம் இருந்தது. அதே போல் எம்.ஜி.ஆர் சிவாஜி இருவரும் நெருங்கிய நண்பர்கள் தான் என்றாலும் கூட இவரும் கூண்டுக்கிளி என்ற ஒரே ஒரு படத்தில் தான் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்தில் எம்.ஜி.ஆர் ஹீரோவாகவும், சிவாஜி கணேசன் வில்லனாகவும் நடித்திருந்தனர்.

எம்.ஜி.ஆர் சிவாஜி இடையே நெருங்கிய நட்பு இருந்தாலும், தொழில் என்று வரும்போது இருவருக்கும் இடையே ஆரோக்கியமான போட்டி இருந்தது. யார் படம் அதிகம் வசூலிக்கிறது. யார் படம் அதிக நாட்கள் திரையரங்குகளில் ஓடுகிறது, யாருக்கு அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள் என்ற போட்டி இருந்துள்ளது. இதை இருவருமே மிகவும் கவனமாக கண்கானித்து வந்துள்ளனர். இருவரின் படங்கள் வெவ்வேறு நாட்களில் வெளியானாலே பற்றிக்கொள்ளும். ஒரே நாளில் வெளியானால் என்னாவாகும்?

அப்படி ஒரு நாள் குறித்து சு. செந்தில் குமரன் என்பவர் தனது யூடியூப் சேனலில் பேசியுள்ளார். இதில் 1964-ம் ஆண்டு ஜனவரி மாதம் 14-ந் தேதி எம்.ஜி.ஆர் நடித்த வேட்டைக்காரன், சிவாஜி நடித்த கர்ணன் ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஒரு நாளில் வெளியானது. இதில் வேட்டைக்காரன் படம் சிறிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட படம். ஆனால் மகாபாரத கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட கர்ணன் படம் பெரும் பொருட் செலவில் எடுக்கப்பட்டது.

இதனால் அந்த படம் வெளியாகும்போது போட்டிக்கு எந்த படமும் வரவில்லை என்றால் தான் போட்ட பணத்தை எடுக்க முடியும். ஆனால் வேட்டைக்காரன் படம் அதே நாளில் ரிலீஸ் ஆவதால் எம்.ஜி.ஆர் ரசிகர்கள் அந்த படத்திற்கும் சிவாஜி ரசிகர்கள் கர்ணன் படத்திற்கும் சென்றுவிடுவார்கள். இதனால் கர்ணன் வசூல் பாதிக்கும். ஆனால் வேட்டைக்காரன் வரவில்லை என்றால் மகாபாரத கதை என்று கர்ணன் பொதுவாக படமாக மாறிவிடும் அப்போது அனைத்து தரப்பு ரசிகர்களும் படம் பார்க்க வருவார்கள் என்று யோசித்தார்கள்.

அப்போது வேட்டைக்காரன் படத்தை ரிலீஸ் தேதியை தள்ளி வைக்க கோரி எம்.ஜி.ஆரிடம் எப்படி சொல்வது என்று கர்ணன் படத்தின் நாயகன் சிவாஜி, இயக்குனர் பந்தலு யோசித்தபோது வேட்டைக்காரன் படத்தின் தயாரிப்பாளர் சின்னப்பதேவரை சந்திக்கின்றனர். அப்போது சின்னப்பதேவர் எம்.ஜி.ஆர்-க்கு கர்ணன் படத்தின் ஒரு ஷோ போடுங்கள் என்று கூறுகிறார். அதன்படி எம்.ஜி.ஆருக்காக கர்ணன் படம் ஒரு ஷோ போடப்படுகிறது.

கர்ணன் படத்தை பார்க்க எம்.ஜி.ஆர் மிகுந்த சந்தோஷமாக வருகிறார். படத்தை பார்த்துக்கொண்டிருக்கும்போது சிவாஜியின் நடிப்பை பார்த்து அவரை பாராட்டிய எம்.ஜி.ஆர் படம் முடிந்து வெளியே வந்ததும் இயக்குனர் பந்தலுவை பாராட்டியுள்ளார். அதன்பிறகு இயக்குனர் பந்தலு வேட்டைக்காரன் ரிலீஸ் தேதி தள்ளி வைப்பது குறித்து பேசியுள்ளார். அதற்கு எம்.ஜி.ஆர் சின்னப்பதேவரிடம் சொல்லி விடுவதாக கூறிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார்.

அதன்பிறகு சின்னப்பதேவரை வர சொன்ன எம்.ஜி.ஆர் இது உங்க வேலை தானா என்று கேட்டுவிட்டு, கர்ணன் படம் பிரம்மாண்ட படம் தான் அதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் இரண்டு படமும் ஒன்னா பொங்கலுக்கு வரும் என்று அறிவித்து விட்டோம். அதனால் ரசிகர்கள் ஏமார்ந்து விடுவார்கள் அதனால் மன்னித்துவிடுங்கள். நம்ம படம் வந்தாலும் கர்ணன் படம் ஓடும் என்று சொல்லிவிடுகிறார்.

இதை கர்ணன் படக்குழுவும் ஏற்றுக்கொண்டதை தொடர்ந்து கர்ணன் படத்தை சிவாஜி பிலிம்ஸ் நிறுவனமும், வேட்டைக்காரன் படத்தை எம்.ஜி.ஆர் பிச்சர்ஸ் நிறுவனமும் வாங்கி வெளியிடுகின்றனர். படத்திற்கு ப்ரமோஷனாக சிவாஜி 7 குதிரைகளுடன் கொண்ட ஒரு தேர் செட்டை தனது சாந்தி தியேட்டரில் அமைக்கிறார். அதற்கு பதில் தரும் விதமாக எம்.ஜி.ஆர் சித்ரா தியேட்டரில் காடு மாதிரியான ஒரு செட் போட்டு அதில் நிஜமான புலியை விட்டுள்ளார்.

இந்த ப்ரமோஷன் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. படம் ரிலீஸ் ஆனபோது வேட்டைக்காரன் பெரிய வெற்றிப்படமாக மாறியது. ஆனால் பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்ட கர்ணன் திரைப்படம் அன்று சரியாக போகவில்லை. நம்ம படம் வந்தாலும் கர்ணன் படம் ஓடும் என்று எம்.ஜி.ஆர் நினைத்தார். ஆனால் நேர்மாறாக வேட்டைக்காரன் ஓடி கர்ணன் சரியாக ஓடவில்லை. இதனால் பந்தலுவுக்கு பெரும் நஷ்டம்.

இதை பார்த்த எம்.ஜி.ஆர் பந்தலுவை அழைத்து என்னால் கர்ணன் படத்திற்கு உதவி செய்ய முடியவில்லை. உங்கள் நஷ்டத்தை ஈடுகட்ட நான் உங்களுக்கு கால்ஷீட் கொடுக்கிறேன் என்று சொன்னார். அதில் உருவான படம் தான் ஆயிரத்தில் ஒருவன். இந்த படம் பெரிய வெற்றிப்படமாக மாறியது. இதை வைத்து தனது அனைத்து கடன்களையும் அடைத்தார் பந்தலு என்று கூறியுள்ளார்.
 

Leave a Reply