• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வெறும் 80 ரூபாயிலிருந்து 1600 கோடி ரூபாய் நிறுவனம்: அப்பளம் விற்று சாதித்து காட்டிய பெண்கள்

இந்தியா

இந்தியாவில் 7 பெண்கள் இணைந்து தொடங்கிய சிறிய தொழில் இன்று சுமார் 1600 கோடி நிறுவனமாக உருவெடுத்துள்ளது.

இந்தியாவில் வணிகம் செய்ய நினைக்கும் பெண்களுக்கு கிடைக்கும் குறைவான வாய்ப்பு மற்றும் சந்தர்ப்பங்களுக்கு மத்தியில் 7 பெண்கள் இணைந்து சுமார் 1600 கோடி ரூபாய் நிறுவனத்தை உருவாக்கியுள்ளனர்.

ஜஸ்வந்திபென் ஜம்னாதாஸ்(Jaswantiben Jamnadas) தலைமையின் கீழ் குஜராத் மாநிலத்தில் 1959ம் ஆண்டு 7 பெண்களால் தொடங்கப்பட்ட லிஜ்ஜத் பாபாட்(Lijjat Papad, அப்பளம்) என்ற நிறுவனம் இன்று உறுதி மற்றும் தன்னம்பிக்கைக்கு சான்றாக உருவாகியுள்ளது.

பார்வதிபென் ராம்தாஸ் தோதானி, உஜம்பென் நரந்தாஸ் குண்டாலியா, பானுபென் என்.தன்னா, லகுபென் அம்ரித்லால் கோகானி, ஜெயபென் வி. வித்தலானி மற்றும் திவாலிபென் லுக்கா ஆகியோருடன் இணைந்து ஜஸ்வந்திபென் இணைந்து உருவாக்கிய நிறுவனம் குடும்பத்திற்கான சிறிய அளவு பணத்தை உருவாக்க வேண்டும் என்ற சிறிய கனவுடன் உருவாகவில்லை.

முதன் முதலில் 4 பாக்கெட் அப்பளத்துடன் தொடங்கிய வணிகம், தொழில்முனைவோர்களால் அடையாளம் காணப்பட்டு அதன் உற்பத்தி அதிகரிக்கப்பட்டது. இதனால் ரூ.6196 என்ற சிறிய ஆண்டு வருமானத்தில் தொடங்கிய லிஜ்ஜத் பாபாட்(அப்பளம்) வியாபாரம், இன்று ரூ.1600 கோடி ரூபாய் வணிகமாக வளர்ச்சி பெற்றுள்ளது.

இந்த நிறுவனத்தில் தற்போது 45,000 பெண்கள் பணி புரிந்து வருகின்றனர். பெண்கள் முன்னேற்றத்திற்கு ஊக்கமாய் உருவெடுத்த ஜஸ்வந்திபென் ஜம்னாதாஸுக்கு இந்திய அரசு பத்ம ஶ்ரீ விருது வழங்கி கவுரவித்துள்ளது.

லிஜ்ஜத் பாபாட்(அப்பளம்) நிறுவனம் 82 கிளைகளுடன் 17 இந்திய மாநிலங்களில் பரவியுள்ளது. அத்துடன் இங்கிலாந்து, நெதர்லாந்து, பிரான்ஸ், பஹ்ரைன், சீனா, ஹாங்காங், தாய்லாந்து மற்றும் மலேசியா ஆகிய 25 வெளிநாடுகளுக்கு தங்களின் அப்பளத்தை ஏற்றுமதியும் செய்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.  
 

Leave a Reply