• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஒரே நாள் இரவில் 16 டியூன் போட்ட இளையராஜா: படத்தை பார்த்துட்டு எதுவும் பேசாமல் போன எம்.ஜி.ஆர்

சினிமா

ஒரே இரவில் இளையராஜா 16 டியூன் போட்டார் ஆனால் அதை பார்த்துவிட்டு எம்.ஜி.ஆர் ஒன்றும் சொல்லாமல் சென்றுவிட்டார்.

இளையராஜா இசையமைத்த படத்தை பார்த்துவிட்டு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் ஒன்றும் சொல்லாமல் சென்றுவிட்டதாக தயாரிப்பாளரும் அரசியல்வாதியுமான கோவை தம்பி கூறியுள்ளார்.

இந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் இளையராஜா. 1976-ம் ஆண்டு அன்னக்கிளி என்ற படத்தின் மூலம் தனது இசைப்பயணத்தை தொடங்கிய இளையராஜா, தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் பலருக்கும் தனது இசையால் பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். இளையராஜா இசையமைத்தால் போதும் அந்த படம் வெற்றியாகி விடும் என்று சொல்லும் அளவிற்கு இசையில் சாதனை படைத்தவர்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு கன்னடம் மலையாளம் இந்தி உள்ளிட்ட மொழிகளில் இசையமைத்துள்ள இளையராஜா இன்றைய இளம் இசையமைப்பாளர்களுக்கு இணையாக பல படங்களை கைவசம் வைத்துள்ளார். அவ்வப்போது தனது பேச்சால் சர்ச்சையில் சிக்கினாலும் தனது இசையால் அந்த சர்ச்சை பேச்சுக்களை மறக்கடிக்கும் திறனை வைத்துள்ளார். தற்போது தமிழ் தெலுங்கு மற்றும் ஆங்கிலம் என 8-க்கு மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில், ஒரே இரவில் இளையராஜா 16 டியூன் போட்டார் ஆனால் அதை பார்த்துவிட்டு எம்.ஜி.ஆர் ஒன்றும் சொல்லாமல் சென்றுவிட்டார் என்று தயாரிப்பாளர் கோவை தம்பி கூறியுள்ளார். இது குறித்து சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில்,

கடந்த 1981-ம் ஆண்டு இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜன் என்னை ப்ரைவன்வாஷ் செய்து படம் தயாரிக்க வேண்டும் என்று கேட்டார். அவர் சொன்ன கதை ரொம்ப பிடித்திருந்தது. அதனால் தயாரிக்க முடிவு செய்து எம்.ஜி.ஆர் அவர்களின் சம்மதத்துடன் படத்தை எடுத்து முடித்தோம். ஆனால் படம் தொடங்கும் முன்பு இசையமைப்பதற்காக இளையராஜாவை சந்தித்தோம். ஆனால் இந்த படம் சரியாக வரும் என்று அவருக்கு நம்பிக்கை இல்லை.

அடுத்து நான் சுந்தர்ராஜனையும் அழைத்துக்கொண்டு இளைராஜாவிடம் சென்றேன். அவர் கதை கேட்கிறேன் எனக்கு கதை பிடித்திருந்தாலும் இசையமைக்க 3 மாதங்கள் ஆகும் என்று சொல்லிவிட்டார். அதற்கும் சம்மதம் சொல்லி விட்டோம். கதையை கேட்டுவிட்டு சொல்லி அனுப்புகிறேன் என்று சொல்லிவிட்டார். அடுத்த சில நாட்களில் போன் செய்து கம்போசிங்கு டேட் கொடுத்து என்னையும் இயக்குனர் சுந்தர்ராஜனையும் வர சொன்னார். பயணங்கள் முடிவதில்லை என்ற இந்த படத்திற்கு ஒரு இரவில் 16 டியூன் போட்டார் இளையராஜா.

இந்த 16 டியூன்களில் இருந்து 7 டியூன்களை தேர்வு செய்தோம். இந்த பாடல்கள் அனைத்தும் ஹிட் ஆகிவிட்டது. தலைவர் எம்.ஜி.ஆர் இந்த படத்தை பார்க்க வேண்டும் என்று முடிவு செய்தேன். அவரும் சம்மதம் கொடுத்தார். ஆண்டாள் தியேட்டரில் படம் எம்.ஜி.ஆருக்காக திரையிடப்பட்டது. படத்தை பார்த்த எம்.ஜி.ஆர் ஒன்றும் சொல்லாமல் எழுந்து சென்றுவிட்டார்.

ஆனால் தியேட்டரை விட்டு வெளியே செல்லும் முன் எம்.ஜி.ஆர் என்னை மட்டும் அழைத்து நீ சினிமாவில் பெரிய ஆளா வரக்கூடிய வாய்ப்பு இந்த படத்தில் இருக்கு. நல்ல இயக்குனரை தேர்ந்தெடுத்திருக்கிறாய்.நீ பெரிய ஆளா வருவ என்னுடைய ஆசீர்வாதம் என்று சொன்னார். அவரது ஆசீர்வாதத்தால் தொடங்கப்பட்ட இந்த பயணங்கள் முடிவதில்லை முடிவில்லாமல் சென்றுகொண்டிருக்கிறது என்று கூறியுள்ளார்.
 

Leave a Reply