• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சிவாஜியை வைத்து ஒரே ஒரு படம் எடுத்த அனுபவம்; அப்புறம் பிரபலங்களை வைத்து படமே எடுக்காத பாலச்சந்தர்

சினிமா

பாலச்சந்தர் தான் இயக்கிய பெரும்பாலான படங்களில் நாகேஷ்க்கு முக்கிய கேரக்டரை கொடுத்திருந்தார்.

தமிழ் சினிமாவில் இயக்குனர் சிகரம் என்று போற்றப்பட்டாலும் கே.பாலச்சந்தது முன்னணி நடிகர் என சிவாஜி கணேசனை வைத்து மட்டும் ஒரே ஒரு படத்தை இயக்கியுள்ளார்.

1965-ம் ஆண்டு வெளியான நீர்குமிழி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கே.பாலச்சந்தர். நாகேஷ் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த இந்த படம் அவருக்கு பெரிய வெற்றியை கொடுத்தது. அதனைத் தொடர்ந்து, நாணல், மேஜர் சந்திரகாந்த், எதிர்நீச்சல், இரு கோடுகள், அவள் ஒரு தொடர்கதை, அபூர்வராகங்கள், தப்பு தாளங்கள் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார்.

அதேபோல் காமெடி நடிகராக இருந்த நாகேஷை நாயகனாக அறிமுகப்படுத்திய கே.பாலச்சந்தர் தான் இயக்கிய பெரும்பாலான படங்களில் நாகேஷ்க்கு முக்கிய கேரக்டரை கொடுத்திருந்தார். நாகேஷ் இல்லாமல் கே.பாலச்சந்தர் படம் இல்லை என்று சொல்லிவிடும் அளவுக்கு அவரின் படங்களில் நாகேஷ் முக்கிய பாத்திரமாக இருந்தார்.

பல வெற்றிப்படங்களை கொடுத்து இயக்குனர் இமயம் என்று பெயரெடுத்தாலும், எம்.ஜி.ஆர் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் பணியாற்றாத கே.பாலச்சந்தர், சிவாஜி கணேசனுடன் ஒரே ஒரு படத்தில் மட்டும் பணியாற்றியுள்ளார். அந்த படம் எதிரொலி. சிவாஜி, மேஜர் சுந்தர்ராஜன், கே.ஆர்.விஜயா நாகேஷ் உள்ளிட்ட பல நடித்திருந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

வழக்கறிஞரான சிவாஜி பணக்கஷ்டத்தில் இருக்கும்போது ஒரு ரயில் பயணத்தில் அவருக்கு ஒரு பணப்பெட்டி கிடைக்கிறது. இதில் இருக்கும் பணத்தை அவர் பயன்படுத்திக்கொள்ள, இந்த விஷயத்தை தெரிந்துகொண்ட மேஜர் சுந்தர் ராஜன் சிவாஜியை மிரட்டிக்கொண்டிருக்கிறார். ஒரு கட்டத்தில் மேஜர் சுந்தர் ராஜன் கொல்லப்பட அந்த பழி சிவாஜி கணேசன் மீது விழுகிறது.

இதனால் சிவாஜி தண்டனை பெற போகிறாரா என்று எதிர்பார்த்தால், இறுதிக்கட்டத்தில் ஒரு குழந்தையின் சாட்சியை வைத்து அவர் விடுதலை செய்யப்படுவார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படம் தோல்வியை தழுவியது. இது குறித்து கே.பாலச்சந்தர் ஒரு பேட்டியில், எதிரொலி படத்தின் கதையும் திரைக்கதையும் சிவாஜிக்கு மிகவும் பிடித்திருந்தது. இதனால் தான் அந்த படத்தை எடுத்தோம். அப்போது சிவாஜிக்கு பெரிய இமேஜ் இருந்ததால் அவர் தவறு செய்துவிட்டார் என்பதை ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இந்த படத்தை ஒருவேளை புதுமுகங்களை வைத்து இயக்கி இருந்தால் வெற்றி பெற்றிருக்கும். படமும் பாலச்சந்தர் படம் என்று பெயர் பெற்றிருக்கும். ஆனால் இப்போது இது சிவாஜி படமாக மாறிவிட்டது. இந்த படத்தின் தோல்விக்கு காரணம் அவருக்கு இருந்த இமேஜ் தான். இதன் பிறகுதான் இமேஜ் உள்ள நடிகர்களின் படங்களை இயக்குவதில்லை என்று முடிவு செய்தேன்.

ரஜினி, கமல் படங்களை கூட ஒரு கட்டத்தில நான் இயக்கவில்லை. அவர்களுக்கு இருக்கும் இமேஜ் அவர்களின் ரசிகர்களின் எதிர்பார்ப்பை என்னால் பூர்த்தி செய்ய முடியாது என்பதால், மற்ற இயக்குனர்களை வைத்து அவர்களின் படங்களை தயாரித்தேன். சிவாஜியுடன் இணைந்து பணியாற்றியது ஒரு படம் தான் நான் ரசித்து ரசித்து எடுத்த படம் தோல்வியாகிவிட்டது. வாய்ப்பு கிடைத்தால் புதுமுகங்களை வைத்து அந்த படத்தை மீண்டும் இயக்குவேன் என்று கூறியிருந்தார்.
 

Leave a Reply