• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வியட்நாம் வீடு ஒரு quintessential சிவாஜி படம்

சினிமா

வியட்நாம் வீடு படத்துக்காக மேக்கப்  போடும் நடிகர் திலகத்துடன் ஹிந்தி நடிகர் ராஜ்கபூர் அவர்கள்

சாரதா கொடுத்த சுட்டியிலிருந்து மீள்பதிவு செய்திருக்கிறேன். நன்றி, சாரதா!அவர்கள் வியட்நாம் வீடு ஒரு quintessential சிவாஜி படம். ஆனால் வி. வீடு பற்றி எனக்கு விமர்சனங்கள் உண்டு. அதை நான் சிவாஜியின் இரண்டாம் நிலை படங்களில் ஒன்றாகத்தான் கருதுகிறேன். ஒரே நேரத்தில் சிவாஜி படங்களின் பலத்தையும் பலவீனத்தையும் காட்டும் படம். இப்படி நினைக்கும் என்னையே சாரதாவின் இந்த விமர்சனம் – இல்லை இல்லை புகழுரை – கவர்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். நேரத்தை வீணடிக்காமல், ஓவர் டு சாரதா!

சிவாஜி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான இப்படம், நடிகர் திலகத்தின் உணர்ச்சிபூர்வமான நடிப்பைக் கொண்ட படங்களில் கண்டிப்பாக இடம் பெறுவது. ஏற்கெனவே விடிவெள்ளி (பிரபுராம் பிக்சர்ஸ்), பாசமலர், குங்குமம் (ராஜாமணி பிக்சர்ஸ்), புபுதிய பறவை (சிவாஜி பிலிம்ஸ்), அன்னை இல்லம் (கமலா பிக்சர்ஸ்), தெய்வ மகன் (சாந்தி பிலிம்ஸ்) போன்ற படங்கள் சொந்தப் படமாக இருந்தபோதிலும் ‘சிவாஜி புரொடக்ஷன்ஸ்’ என்ற நிறுவனம் தொடங்கப்பட்டு முதல் படமாக தயாரிக்கப்பட்டது. இப்போதும் சிவாஜி புரொடக்ஷன்ஸ் எம்ப்ளமாக நடிகர் திலகமும், ராஜாமணி அம்மையாரும் சாமி படங்களுக்கு பூஜை செய்வதைக் காட்டும்போது அங்கு வியட்நாம் வீடு படத்தின் கிளாப் போர்டு இருப்பதைப் பார்க்கலாம்.

ஒரு பெரிய தொழில் நிறுவனத்தில் மாதச் சம்பளத்தில் உயர் பதவியில் இருக்கும் ஒரு பிராமண குடும்பத் தலைவருக்கு பொறுப்பில்லாத பிள்ளைகளால் ஏற்படும் வாழ்க்கைப் போராட்டமே கதையின் ஆணிவேர். புதிதாக வீடு கட்டி குடி புகும் விழாவோடு படம் துவங்குகிறது. எல்லாவற்றிலும் கௌரவம் பார்க்கும் (கர்வம் அல்ல) பத்மநாப ஐயர். அதனால் பெயரே பிரஸ்டிஜ் பத்மநாபன். கோடு போட்டதுபோல வாழ்க்கை முறையை அமைத்துக் கொண்டு அதன்படியே நெறி பிறழாமல் வாழ நினைக்கும் அவருக்கு, ஜாடிக்கு ஏற்ற மூடியாக மனைவி சாவித்திரி (பத்மினி) அமைந்தாரே தவிர, அவரது பிள்ளைகளை அவரைப் போல நேர்கோட்டில் வளர்க்க முடியவில்லை. ஒரு நிறுவனத்தில் மாதச் சம்பளத்தில் பணி புரியும் மூத்தபிள்ளை ஸ்ரீதர் (ஸ்ரீகாந்த்). மனைவி சொல்லே மந்திரமாக மனைவியின் சொல்வதற்கெல்லாம் ‘பூம் பூம் மாடாக’ தலையாட்டும் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை. அவன் அடிமைத்தனத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, நேரம் கிடைக்கும்போதெல்லாம் மாமனார், மாமியார் பற்றி வத்தி வைப்பதையே வேலையாக அலையும் அவன் மனைவி மாலா (ரமாப்ரபா). ரமாப்ரபாவுக்கு இப்படியெல்லாம் வில்லியாக நடிப்பில் கொடிகட்ட முடியுமா என்பது நமக்கு ஆச்சர்யமாக இருந்தாலும், மாமியா
ருக்கு எதிராக வில்லத்தனம் என்றால்தான் நம் பெண்கள் வெளுத்து வாங்குவாங்களே (ஆனால் நான் ரொம்ப நல்ல் பொண்ணுங்க, என் மாமியாரைக் கேட்டுக்குங்க).

இரண்டாவது மகனாக, அன்றைய கல்லூரி மாணவர்களின் ஸ்டைலில் நீளமாக தலைமுடி வளர்த்துக்கொண்டு அலையும் கல்லூரி மாணவன் (நாகேஷ்), இவர்கள் இருவருக்கும் கீழே பருவமெய்திய ஒரு தங்கை. குழந்தைகள் இப்படி பொறுப்பில்லாமல் இருக்கிறார்களே என்று எண்ணி மனதுக்குள் குமுறும் தந்தை, ஆனாலும் அவருக்கு வெறும் வார்த்தைகளால் மட்டும் ஆறுதல் சொல்லும் மனைவி. அதனால்தான் வேலையிலிருந்து திடீரென்று ரிட்டையர் ஆகும்போது அது அவருக்கு மட்டுமல்ல, மனைவிக்கும் அதிர்ச்சியாக இருக்கிறது. கையில் தானே சாப்பாட்டுக் கூடையைத் தூக்கிக் கொண்டு வீட்டுக்குள் வரும் அவர், நேராக அம்மாவின் படத்துக்கு முன்பு போய் நின்று கொண்டு “அம்மா, நான் ரிட்டையர் ஆயிட்டேன், உன் பிள்ளைக்கு இன்னைக்கு அம்பத்தஞ்சு வயசு ஆயிடுத்து. I AM COUNTING MY DAYS TO GRAVE” என்று குரல் உடைந்து தடுமாறுகிறார். அப்போது அங்கே வரும் மனைவியிடம் “சாவித்திரி, நான் ரிட்டயர் ஆயிட்டேண்டி” என்று சொல்ல “என்னன்னா சொல்றேள்? அதுக்குள்ளாகவா?” அன்று கேட்க “என்னடி பண்றது, திடீர்னு கூப்பிட்டு ‘உனக்கு வயசாடுச்சு, நீ வீட்டுக்கு போடா’ன்னு அனுப்பிச்சுட்டான். அந்த கம்பெனியோட வளர்ச்சிக்காக நான் என்னவெல்லாம் பாடுபட்டிருப்பேன்! எல
்லாத்தையும் மறந்திட்டு போடான்னு அனுப்பிட்டானே” என்று குமுறும்போது முகத்தில், சோகம், ஏமாற்றம், விரக்தி, இனி மிச்சமுள்ள காலத்துக்கு என்ன செய்யப் போகிறோம் என்ற அச்சம், இனி நாளையிலிருந்து வேலையில்லாதவனாகிவிட்டோம் என்ற சூன்யம்… எல்லாம் கலந்த கலவையாக அந்த ஒரு முகத்தில்தான் எத்தனை முகபாவம், என்னென்ன உணர்ச்சிப்பிரவாகம்!

(அடப்பாவி மனுஷா… எங்கிருந்தய்யா கத்துக்கிட்டே இதையெல்லாம்?. உனக்குப்பிறகு வந்தவர்கள் உன்னை காப்பியடித்து செய்திருக்கலாம். ஆனால் நீ யாரையும் காப்பியடிக்கவில்லையே..!. காரணம், உனக்கு முன் எவனும் இதையெல்லாம் செய்து காட்டவேயில்லையே… பின் எங்கிருந்து உனக்கு மட்டும் இப்படியெல்லாம்…!!!)

வேலை முடிந்து வீட்டுக்குள் நுழையும் மூத்த மகனிடம், தாய் மெதுவான குரலில் “டேய் ஸ்ரீதரா, உங்க அப்பா ரிட்டயர்ட் ஆயிட்டாருடா. நீ உங்க அப்பா கிட்டே போயி ‘அப்பா கவலைப்படாதீங்க, இனிமே குடுமபத்தை நான் பாத்துக்கறேன்’ன்னு ஆறுதலா ரெண்டு வார்த்தை சொல்லுடா” என்ற் கெஞ்சுவது போல கேட்கும் தாயின் குரலுக்கு செவி மடுத்து அப்பாவின் அறைக்குப் போகப்போகும் கணவனை மனைவி மாலா வழி மறித்து, தன் அறைக்கு அழைத்துச்சென்று அவனுக்கு தூபம் போடுவது டிபிகல் நடுத்தர வர்க்க குடும்பத்தின் அச்சடித்த பிரதிபலிப்பு என்றால்…

அப்பா ரிட்டையர் ஆன முதல் மாதம் மகன் சம்பளத்தை வாங்கி வந்து தங்களிடம் தருவான் என்று எதிர்பார்த்திருக்கும்போது, அவன் வந்து “அம்மா, இந்த மாதத்துக்கு எனக்கும் மாலாவுக்கும் சாப்பாட்டுப் பணம்” என்று நீட்டுவது கொடுமை.

தங்களுக்குள் திறந்த புத்தகமாக வாழ்ந்து விட்ட பத்மநாபன்-சாவித்திரி தம்பதியினரிடையே, எந்த ஒளிவு மறைவுமில்லை என்பதை எடுத்துக் காட்டும் அந்த வசனம். ரிட்டையராகி வீடு வந்த பத்மநாபன், தயங்கி தயங்கி தன் மனைவியிடம் “சாவித்திரி, என்னுடைய சம்பளத்தில் இருந்து மாசாமாசம் எதுவும் சேர்த்து வச்சிருக்கியா?” என்று கேட்க “என்னன்னா, உங்களுக்கு தெரியாமல் நான் என்னைக்கு…”, முடிக்கும் முன்பாகவே அவர் “இல்லையில்லை, சும்மாதான் கேட்டேன்” என்று பதறும் இடம்.

பார்க்கில் வாக்கிங் போகும்போது எவனோ ஒருத்தன், “நாளைக்கு இந்நேரம் நான் பிரஸ்டிஜ் பத்மனாபனுடைய மாப்பிள்ளையாகியிருப்பேன்” என்று சொல்வதைக்கேட்டு அதிர்ச்சியில் உறைந்துபோகும் அவர், வீட்டுக்குத் தெரியாமல் அந்த எவனோ ஒருவனுடன் ஓடிப்போகும் மகளை ரயில்வே ஸ்டேஷனில் தோளில் கைவைக்க, திரும்பிப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்துபோகும் மகளை, கோபமும், ‘நீயாடி இப்படி’ என்று அதிர்ச்சியுமாக பார்க்கும் அந்த பார்வை, அந்த பாவம், அந்த உணர்ச்சிக் கொந்தளிப்பு… நூறு பக்க வசனங்களுக்கு சமம்.

மனைவி மாலாவின் பேராசையால் அலுவலக வேலைகளில் ஊழல் செய்து லஞ்சம் வாங்கி தன் வசதிகளைப் பெருக்கிக்கொள்ளும் ஸ்ரீதர், அப்படி தவறான பாதையினால் ஏற்பட்ட கூடா நட்புகளின் காரணமாக மதுவருந்திவிட்டு, தள்ளடியபடி வீட்டுக்குள் நுழைய, அதைப் பார்த்து பதறிப் போன அம்மா, இந்த விஷயம் பத்பநாபனுக்கு தெரியாமல் மறைக்க, அவனது ரூம் வரை கொண்டு விட்டு விட்டுத் திரும்பும்போது, இத்தனையையும் பார்த்துக்கொண்டு கண்களில் ரௌத்ரமும், அதிர்ச்சியும் பொங்க பத்மநாபன் நின்று கொண்டிருப்பதைப் பார்த்து பத்மினி அதிர்வது உச்சம்.

அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லாத நேரத்தில் அவருக்கு இடையூறாக அண்ணனும் அண்ணியும் ட்ரான்ஸிஸ்டரில் சத்தமாக கிரிக்கெட் கமெண்ட்ரி கேட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்த தங்கை, அவர்களுடன் சண்டைபோட்டு, ட்ரான்ஸிஸ்டரைப் பிடுங்கி வீச, தங்கையை அவன் கை நீட்டி அடிக்க, தான் செல்லமாக வளர்த்த தன் மகளை கைநீட்டி அடிப்பதைப் பார்த்து பத்மநாபன் மகனை அடிக்க, அவனும் அவன் மனைவியும் கோபம் கொண்டு வீட்டை விட்டு வெளியேறும்போது, அப்படியே கேமரா சுவரின் பக்கம் திரும்ப சுவரில் விரிசல். (சுவரில் தெரிவது விரிசல் மட்டுமல்ல, இயக்குனர் பி.மாதவனின் முகமும்தான்).

கோபித்துக்கொண்டு தன் தந்தை வீட்டுக்குப் போகும் மாலாவையும் ஸ்ரீதரையும், அவளுடைய தந்தை மட்டும் ஏற்றுக்கொள்வாரா? பிரஸ்டிஜ் பத்மநாபனின் சம்மந்தியாயிற்றே! வாசலிலேயே நிற்க வைத்து அவர்களைக் கண்டித்து, மீண்டும் பத்மநாபன் வீட்டுக்கே அழைத்து வருகிறார். நடந்தவற்றைக் கொஞ்சம் கூட மனதில் வைத்துக்கொள்ளாமல் “ஏன் இன்னும் நிக்கறேள்? மேலே போங்கோ” என்று அனுப்பிவைக்க, அவர்கள் மாடியில் ஏறும் சமயம் இன்னொரு பெரிய வில்லங்கம் வருகிறது. ஆம், லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரி விஜயன், தன் சக அதிகாரிகள் சகிதம் வீட்டை சோதனை போட வருகிறார். சோதனையின்போது, ஏராளமான சொத்துக்கள், நகைகள், பக்கத்து வீட்டுப் பெண் பெயரில் ஓடும் டாக்ஸி போன்றவை சிக்க பத்மநாபன் அதிர்ந்து போகிறார். ஸ்ரீதரை அரெஸ்ட் பண்ணி அழைத்துப் போகும்போது, மாலாவின் அப்பா வி.எஸ்.ராகவனைப் பார்த்து, “சம்மந்தி, பாத்தேளா? இந்த வீட்டோட பிரஸ்டிஜும் போயிடுத்து, ஜஸ்டிஸும் போயிடுத்து” என்று பத்மநாபன் புலம்பும்போது நம்மை பரிதாபத்தின் உச்சத்துக்கு கொண்டு போய்விடுவார்.

நம்மை நெஞ்சைப் பிழியும் இன்னொரு முக்கியமான கட்டம், ‘உன் கண்ணில் நீர் வழிந்தால்‘ பாடல் காட்சி. முதலிரண்டு வரிகளை மட்டும் பாரதியார் பாடலில் இருந்து எடுத்துக் கொண்டு, மேற்கொண்டு காட்சிக்கு தகுந்தாற்போல கவியரசர் கண்னதாசன் புனைந்த அற்புத பாடல், ‘மாமா’வும் ‘சின்ன மாமா’வும் (புகழேந்தி) சேர்ந்தமைத்த மனதை வருடும் மெட்டு. இந்த மாதிரிப் பாடல்களைப் பாடுவதற்கென்றே பிறந்த டிஎம்எஸ் பாட, அதற்கு நடிகர் திலகமும், நாட்டியப் பேரொளியும் முகபாவங்காளாலேயே உணர்ச்சிகளைக் கொட்ட…

உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி

என் கண்ணின் பாவையன்றோ கண்ணம்மா என்னுயிர் நின்னதன்றோ

பல்லவி முடிந்து இடையிசையில், கைப்பிடித்தபடி மணவறையை சுற்றி வரும் பஞ்சகச்சம் கட்டிய பத்மநாபன், மடிசார் கட்டிய சாவித்திரி தம்பதியின் இளமைக் கால நினைவுகள். அந்த நினைவில் தொடரும் அனுபல்லவி…

உன்னைக் கரம் பிடித்தேன் வாழ்க்கை ஒளிமயமானதடி

பொன்னை மணந்ததனால் சபையில் புகழும் வளர்ந்ததடி

உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி

நம்பிய பிள்ளைகள் ஏமாற்றி விட்டனர். விழுதுகளாய் நின்று தங்களைத் தாங்குவார்கள் என்று நம்பியிருந்த விழுதுகள் ஒவ்வொன்றாக மறைய, துவண்டு விழப் போகும் சமயம், மனைவி ஓடிவந்து தாங்கி அணைத்துக்கொள்ள…

சாலைச் சுமைதாங்கி போலே மார்பில் எனைத் தாங்கி

வீழும் கண்ணீர் துடைப்பாய் அதில் என் விம்மல் தணியுமடி

ஆலம் விழுதுகள் போல் உறவு ஆயிரம் வந்துமென்ன

வேரென நீயிருந்தாய் அதில் நான் வீழ்ந்துவிடாதிருந்தேன்

உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி

மீண்டும் தம்பதிகளின் பழைய முதலிரவுக் காட்சி. மடிசார் மாமியின் மடியில் தலைவைத்து உறங்கும் இளைய பத்மநாபன். அவரது அழகான முகத்தைப் பார்த்துக்கொண்டிருக்கும் சாவித்திரி, சட்டென்று காட்சி மாறி தரையில் தூணில் சாய்ந்து உட்கார்ந்திருக்கும் சாவித்திரியின் மடியில் தலை வைத்து தரையில் படுத்திருக்கும் பத்மநாபனைக் காணும்போது, கல்மனம் படைத்தவர்கள் தவிர அனைவரது கண்களிலும் கண்ணீர் வரும்.

முள்ளில் படுக்கையிட்டு இமையை மூட விடாதிருக்கும்

பிள்ளைக் குலமடியோ என்னை பேதமை செய்ததடி

பேருக்கு பிள்ளை உண்டு பேசும் பேச்சுக்கு சொந்தம் உண்டு

தேவையை யாரறிவார்… என்…… தேவையை யாரறிவார்

உன்னைப்போல தெய்வம் ஒன்றேயறியும்

உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி

என் கண்ணின் பாவையன்றோ கண்ணம்மா என்னுயிர் நின்னதன்றோ

உன் கண்ணில்…. நீர் வழிந்தால்…. என் நெஞ்சில்…..

(இருவரின் விம்மல் நம் நெஞ்சுக்குள் ஊடுருவும்)

பாடல் முடிந்ததும் அமைதி, எங்கும் நிசப்தம், ஒரு கைதட்டல் இல்லை, விசில் இல்லை. மாறாக சத்தமில்லாத விம்மல்கள், கைக்குட்டைகளிலும், வேஷ்டி நுனிகளிலும், முந்தானையிலும் கண்களைத் துடைத்துக் கொள்ளும் ரசிகர் கூட்டம்.

எழுதியவர் இல்லை, இசை வடிவம் தந்தவர்கள் இல்லை, இயக்கியவரும் போய் விட்டார், நடித்தவர்களும் மறைந்து விட்டனர். பாடியவர் மட்டும் இருக்கிறார். பல்லாண்டு வாழ்க.

(எங்கள் பிள்ளைக்கு இப்போதே இந்தப்படங்களைப்போட்டுக் காட்டுகிறோம். ஏனென்றால் நாளை அப்பாவுக்கும் அம்மாவுக்கும் முதியோர் இல்லத்துக்கு அவன் அப்ளிகேஷன் வாங்கிக்கொண்டு வந்து நிற்கக்கூடாதில்லையா?)

இப்படத்தில் இடம் பெற்ற மற்ற பாடல்கள்…..

பத்மநாப ஐயரின் திருமண நாள் கொண்டாட்டத்தில் பாடும் பாடல் “உலகத்திலே ஒருவன் என உயர்ந்து நிற்கும் திலகமே (உண்மைதானே) உடனிருந்து காலமெல்லாம் மணம் பரப்பும் இதயமே“. இப்பாடலை நான்கு வித்தியாசமான மெட்டுக்களில் அமைத்திருப்பார் மாமா.

வயதான காலத்தில், தங்களின் திருமண ஃபோட்டோவைப் பார்க்கும்போது, இருவரது கண்களிலும் விரியும் ஃப்ளாஷ்பேக் பாடல் “பாலக்காட்டு பக்கத்திலே ஒரு அப்பாவி ராஜா“. படத்திலேயே நடிகர் திலகமும், நாட்டியப் பேரொளியும் இளமைத் தோற்றத்தில் முழுக்க வருவது இந்தப் பாடல் காட்சியில் மட்டும்தான்.

கவியரசர் கண்ணதாசனின் பாடல்களுக்கு, திரையிசைத்திலகம் கே.வி.எம். மாமா இசையமைத்திருந்தார். கதை வசனம் எழுதியவரை எங்கே எல்லோரும் மறந்துவிடப்போகிறார்களோ என்ற எண்ணத்தில் பின்னாளில் ‘வியட்நாம் வீடு சுந்தரமாகவே‘ ஆகிப்போனார்.

படம் எப்படி முடியப்போகிறது என்பதை சஸ்பென்ஸாகவே வைத்திருப்பார் இயக்குனர் பி.மாதவன். பத்மநாபன் ஆபரேஷனுக்குப் போகும்போது சோகமாக முடியப் போவது போலிருக்கும். ஆபரேஷனுக்காக ஸ்ட்ரெச்சரில் படுக்கப்போகும் பத்மநாபன், தன் கையில் வாட்ச் இருப்பதைப் பார்த்ததும் அதைக் கழற்றி மனைவியிடம் கொடுக்கப் போகும்போது பார்த்துவிட்டுச் சொல்வார் – “கடிகாரம் நின்னு போச்சுடி சாவித்திரி” (இந்த இடத்தில் தியேட்டரில் ‘ஐயோ’ என்ற முணுமுணுப்பு கேட்கும்).

ஆனால் ஆபரேஷன் வெற்றிகரமாக முடிந்து வீட்டுக்கு வந்த பின்னர், சுபமான முடிவை எதிர்நோக்கியிருப்பது போலிருக்கும். திடீரென மீண்டும் கதை மாறி, பத்மநாபன் இறந்து போவதுபோல முடிந்து நம் நெஞ்சில் சோகத்தை சுமக்க வைத்துவிடும். ஆனால் அழுகை, சத்தம், கூக்குரல் என்று எதுவுமில்லாமல் சோகத்தை அப்படியே ஸ்டில்களில் நிறுத்தி படத்தை முடித்திருப்பது அருமையான உத்தி.

சென்னை சாந்தி, கிரௌன், புவனேஸ்வரி, திருச்சி பிரபாத் உட்பட தமிழகத்தில் ஐந்து நகரங்களில் நூறு நாட்களைக் கடந்து ஓடிய இப்படம் நடிகர் திலகத்தின் திறமையின் உரைகல்லாக அமைந்த படங்களில் ஒன்று.

‘வியட்நாம் வீடு’ என்ற காவியப்படம் பற்றிய என்னுடைய கருத்துக்களைப் படித்த அன்பு இதயங்களுக்கு என் நன்றி.

** படமாக்கப்படுவதற்கு முன்னர் இது சிவாஜி நாடக மன்றத்தால் பல நூறு முறை மேடை நாடகமாக நடத்தப்பட்டது. படத்தில் பத்மினி நடித்த ரோலில், நாடகத்தில் (நடிகர் திலகத்தின் ஜோடியாக) நடிகை ஜி.சகுந்தலா நடித்திருந்தார். (சி.ஐ.டி.சகுந்தலா அல்ல, ஜி.சகுந்தலா)

** வியட்நாம் வீடு திரைப்படம், 1970-ம் ஆண்டின் சிறந்த திரைப்படமாக (தி.மு.க. தலைமையிலான) தமிழ்நாடு அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல் பரிசு பெற்றது. (‘தி.மு.க. தலைமையிலான’ என்ற சொற்றொடர் எதற்கு? “அன்றைக்கு காங்கிரஸ் அரசு இருந்தது, சிவாஜி காங்கிரஸ்காரர் என்பதால் கொடுத்தார்கள்” என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். அதைத் தவிர்க்கத்தான்).

** ” I AM COUNTING MY DAYS TO GRAVE” என்ற வார்த்தைகளை டைப் செய்தபின்னர், சுமார் பதினைந்து நிமிடங்களுக்கு என்னால் டைப் செய்ய முடியவில்லை. கண்களில் நீர் வழிந்துகொண்டிருந்தது. கைகள் நடுங்கின. கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு தொடர்ந்தேன்.

மீண்டும் ஆர்வி: என்னதான் விமர்சனங்கள் இருந்தாலும் சாரதாவின் விவரிப்பைப் படிக்கும்போதே மனம் கனக்கிறது. பார்ப்பவர்களுக்கு எப்படி இருந்திருக்கும், அதுவும் படம் வந்த காலகட்டத்தில் என்று சுலபமாக யூகிக்கலாம். படம் வந்தபோது தமிழ் கூறும் நல்லுலகம் என்ன நினைத்தது என்று தெரிந்து கொள்ள விரும்பினால் இந்த விகடன் விமர்சனத்தைப் பார்க்கலாம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: சிவாஜி பக்கம், படங்களின் பட்டியல், சாரதா பதிவுகள்

தொடர்புடைய சுட்டிகள்:

ஆர்வியின் விமர்சனம்

விகடன் விமர்சனம்
Devakottai Dolphin AR Ramanathan
 

Leave a Reply