• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சடலமாக கிடந்த சிவாஜி, நாகேஷ் சொன்ன ஒற்றை வார்த்தை - ஒய்.ஜி மகேந்திரன் நினைவுகள்

சினிமா

சிவாஜியோடு நடித்த அனுபவங்கள் அவர் கற்றுக்கொண்ட பாடங்கள் குறித்து ஒய்.ஜி.மகேந்திரன் பேசியுள்ளார்.

தமிழ் சினிமாவில் தனக்கென தனி ஆளுமையை உருவாக்கிய நடிகர் திலகம் சிவாஜி கணேசன் குறித்து நடிகரும் நாடக கலைஞருமான ஒய்.ஜி.மகேந்திரன் கூறிய நினைவுகள் குறித்த வீடியோ வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் காமெடி குணச்சித்திரம் உள்ளிட்ட பல கேரக்டரில் நடித்து புகழ்பெற்ற நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன், சிவாஜி கணேசனின் நினைவு நாள் குறித்து ஒரு நேர்காணலில் பேசியுள்ளார். இதில் சிவாஜியோடு அவர் நடித்த அனுபவங்கள் அவர் கற்றுக்கொண்ட பாடங்கள் குறித்து பேசியுள்ள ஒய்.ஜி.மகேந்திரன், அவர் இறந்தபோது நடிகர் நாகேஷ் சொன்னது குறித்து பகிர்ந்து கொண்டுள்ளார்.

படிக்காத மேதை படம் பார்த்து நான் சிவாஜியின் அடிமையாக மாறிவிட்டேன். அதன்பிறகு ட்ராமாவில் நான் நடிக்க தொடங்கியபோது 1961-ம் ஆண்டு ஒரு படத்தில் அவருடன் நடிக்க வேண்டியது. ஆனால் இரு ஆண்கள் தொடர்பாக இருந்த கதையில் கேரக்டர்களை பெண்களாக மாற்றியதால் என்னால் நடிக்க முடியவில்லை. அதன்பிறகு 10 வருடங்கள் கழித்து கவுரவம் படத்தில் அவருடன் இணைந்து நடித்தேன்.

கவுரவம் படம் நல்ல பாராட்டுகளை பெற்று கொடுத்தாலும் அந்த படத்தின் டைட்டிலில் என் பெயர் இருக்காது. இதற்காக நான் இயக்குனரிடம் சண்டை போட்டேன். ஆனால் உன் நடிப்பை பார்த்து பாராட்டுவார்கள் பெயர் இல்லனா என்ன என்று கேட்டு எனக்கு சமாதானம் சொன்னார். அதேபோல் சிவாஜி செட்டில் கலகலப்பாக இருப்பார். அதே சமயம் தனக்கு நெருக்கமானவர்களுடன் மட்டுமே அப்படி இருப்பார். செட்டில் தேவையில்லாமல் பேசமாட்டமார்.

சிவாஜி எனக்கு மட்டுமல்ல அவரது படங்களில் என்னை போன்று பல நடிகர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார். அதில் குறிப்பாக திருவிளையாடல் படத்தில் அவர் இல்லை என்றால் நாகேஷ் இல்லை என்று சொல்லலாம். அதைத்தான் நாகேஷ் அவரது இறந்த உடலை பார்க்க வந்தபோது சொல்லி அழுதார். அப்போது அவருக்கு அடிப்பட்டிருந்தது. அதனால் நான் தான் அவரை அழைத்து வந்தேன். அப்போது சிவாஜியை பார்த்து அழுத அவர், இந்த மனுஷன் இல்லை என்றால் திருவிளையாடல் தருமி இல்லை என்று சொல்லி அழுதார்.

அந்த வகையில் சிவாஜி மட்டும் தான் தனது படங்களில் மற்ற நடிகர்களுக்கும் சமமான வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த நடிகர். தன் வாழ்நாளில் கடைசி வரைக்கும் நடிக்க வேண்டும் கேமரா முன்னாடி நிற்க வேண்டும் என்ற வெறி அவரிடம் இருந்தது என்று நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் கூறியுள்ளார்.

தமிழச்சி கயல்விழி
 

Leave a Reply