• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சீரான மனநிலை உள்ளவர்கள்தான் அதிபராக வேண்டும் - டிரம்பை விமர்சிக்கும் நிக்கி

இவ்வருட இறுதியில் நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியை சேர்ந்த தற்போதைய அதிபர் ஜோ பைடனும், குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பும் தீவிரமாக களம் இறங்கி வாக்குகளை சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

டொனால்ட் டிரம்ப் மீது சில மாநிலங்களில் வழக்கு விசாரணை நடைபெறுவதால், அவர் அதிபர் ஆவதில் சிக்கல்கள் எழலாம் என நம்பப்படுகிறது.

எனவே, குடியரசு கட்சியின் மற்றொரு தலைவரும், முன்னாள் தென் கரோலினா கவர்னருமான நிக்கி ஹாலேயும் போட்டியில் இறங்கி வாக்கு சேகரித்து வருகிறார்.

இரு தினங்களுக்கு முன், டொனால்ட் டிரம்ப், நியூ ஹாம்ப்ஷயர் மாநிலத்தில் ஒரு பேரணியில் 2021 அதிபர் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் போது பாராளுமன்றத்தில் நடந்த வன்முறை சம்பவங்கள் குறித்து பேசினார்.

அப்போது பேசிய டிரம்ப், நிக்கி ஹாலேயின் பெயரை குறிப்பிட்டு பாராளுமன்றத்திற்கான பாதுகாப்பை நிக்கி சரிவர கையாளவில்லை என குற்றம் சாட்டினார்.

ஆனால், டிரம்ப் பேச முற்பட்டது அப்போதைய முன்னாள் சபாநாயகர் நான்சி பெலோசியை குறித்து என்பது பின்னர் தெளிவாகியது. பெயர்களை மாற்றி டிரம்ப் உரையாற்றியது விமர்சனத்திற்கு உள்ளானது.

நிக்கி ஹாலே தனது எக்ஸ் கணக்கில் இது குறித்து பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:

ஒரு பேரணியில், 2021 அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியான போது நான் ஏன் பாதுகாப்பு ஏற்பாடுகளை சரிவர கவனிக்கவில்லை என டிரம்ப் குற்றம்சாட்டி பேசி உள்ளார்.

அப்போது நான் வாஷிங்டன் பகுதியிலேயே இல்லை.

டிரம்ப், நான்சி பெலோசியை குறிப்பிட நினைத்து என் பெயரை பயன்படுத்தி விட்டார் என பிறகு நான் அறிந்தேன்.

ஆனால், அந்த உரையில் "நிக்கி ஹாலே" என தெளிவாக பல முறை என் பெயரைத்தான் அவர் பயன்படுத்தினார்.

கடும் அழுத்தத்தை தர கூடிய அமெரிக்க அதிபர் பதவியில் அமர மிக அதிகமான மன உறுதி வேண்டும். அந்த மன நிலை இல்லாதவர்கள் அப்பதவிக்கு வர கூடாது.

இவ்வாறு நிக்கி பதிவிட்டுள்ளார்.
 

Leave a Reply