• Welcome to TamilsGuide
செய்திகள் 1

எம்.ஜி.ஆர். எடிட் செய்த சண்டைக் காட்சி!

சினிமா

நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், அரசியல் வித்தகர் என பன்முகத்தன்மை வாய்ந்தவராக எல்லோராலும் அறியப்பட்ட புரட்சித் தலைவர், தான் சார்ந்த சினிமாவின் அத்தனை துறைகளிலும் நிபுணத்துவம் பெற்றிருந்தார் என்பது பலர் அறியாத விஷயம்.
ஒளிப்பதிவு, ஒப்பனை, உடை அலங்காரம் உள்ளிட்ட துறைகளுடன் படத்தொகுப்பு (எடிட்) செய்யும் ஆற்றலும் கற்றவராக இருந்தார்.
இதற்கு ஒரு உதாரணம்.
எம்.ஜி.ஆர். இயக்கிய ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தின் பிரதான சண்டைக் காட்சிகளில் ஒன்று, புத்தர் கோயிலில் எம்.ஜி.ஆரும், நம்பியாரும் ஆக்ரோஷமாக மோதிக்கொள்ளும் காட்சி.
சத்யா ஸ்டூடியோவில் அரங்கம் அமைத்து இந்த காட்சி எடுக்கப்பட்டது. நம்பியார், நெற்றி முதல் பாதம் வரை முடிகள் நீக்கி, உடம்பு முழுவதும் ஒருவித எண்ணை தடவி அந்த காட்சியில் நடித்திருந்தார்.

30 ஆயிரம் அடிக்கு மேல் அந்த காட்சி ’ஷுட்’ செய்யப்பட்டிருந்தது.
ஆனால், நான்கு நிமிடம் மட்டுமே அந்த சண்டை காட்சியைப் படத்தில் பயன்படுத்த வேண்டிய சூழல்.
இதனால் 30 ஆயிரம் அடியை 4 ஆயிரம் அடியாக குறைக்க வேண்டும்.
எம்.ஜிஆரை வைத்து பல வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குநர் சங்கரை அழைத்துப் பேசினார்.
பிலிம் சுருளை ஷங்கர் கையில் கொடுத்த எம்.ஜி.ஆர். ‘30 ஆயிரம் அடியை நான்கு நிமிடங்கள் ஓடும்படியாக குறைக்க வேண்டும்’ என பணித்தார்.
பல பிரபல எடிட்டர்கள் உதவியுடன், ‘கட்’ செய்யும் வேலையில் இறங்கினார், சங்கர்.
அவர்களால் 25 ஆயிரம் அடி கொண்ட சண்டை காட்சியாக மட்டுமே குறைக்க முடிந்தது.
இதற்காக அவர்கள் பல நாட்கள் எடுத்துக்கொண்டார்கள். அதற்கு மேல் அவர்களால் ‘கட்’ செய்ய முடியவில்லை.
எம்.ஜி.ஆரை சந்தித்த சங்கர், ‘நாங்கள் எவ்வளவோ முயன்றும், 5 ஆயிரம் அடியை மட்டுமே குறைக்க முடிந்தது. நீங்கள் சொன்னவாறு குறைக்க இயலவில்லை..’’ என தயங்கித் தயங்கி சொல்லி, பிலிம் சுருளை கொடுத்தார்.
அதனை கேட்ட எம்.ஜி.ஆர்.’ சரி.. இன்று இரவு நான் எடிட்டிங் வருகிறேன்.. நீங்கள் அனைவரும் எடிட்டிங் அறையில் இருங்கள்’ என சொல்லிவிட்டு வேறு படத்தின் படப்பிடிப்புக்கு கிளம்பிச் சென்று விட்டார்.
இரவில் ஷுட்டிங் முடிந்ததும் வீட்டுக்கு கூட போகாமல், நேராக எடிட்டிங் நடைபெறும் ஸ்டூடியோவுக்கு வந்து விட்டார்.
25 ஆயிரம் அடி நீளம் கொண்ட சண்டை காட்சியை அவரே எடிட் செய்ய ஆரம்பித்தார்.
ஒரு மணி நேரத்தில் 4 ஆயிரம் அடியாக அந்தக் காட்சியை குறைத்துவிட்டார்.
டைரக்டர் சங்கர் மற்றும் உடன் இருந்த எடிட்டர்கள் பிரமித்துப்போய் விட்டார்கள்.
எம்.ஜி.ஆர். எடிட் செய்த காட்சிதான், உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தில் நாம் திரையில் பார்க்கும், மெய் சிலிர்க்க வைக்கும் அந்த ’ஸ்டண்ட்’ காட்சி.
– பாப்பாங்குளம் பாரதி.
-தாய் இதழ்
 

 

Leave a Reply