• Welcome to TamilsGuide
செய்திகள் 1

திருப்தி இல்லாத இயக்குனர்... ரெக்கார்டிங் தியேட்டரிலேயே டியூனை மாற்றிய எம்.எஸ்.வி - சிவாஜி பட சுவாரஸ்யம்

சினிமா

கவிஞர் கண்ணதாசன் – எம்.எஸ்.வி இருவரும் இணைந்தால் அந்த படமும் பாடலும் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.

க்ளாசிக் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக திகழ்ந்தவர் எம்.எஸ்.விஸ்வநாதன். தனது மெல்லிசையால் பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ள எம்.எஸ்.வி எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், முத்துராமன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலரின் படங்களுக்கு இசையமைத்துள்ளார். 1950-60-களில் தமிழ் சினிமாவில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் தான்.

கவிஞர் கண்ணதாசன் – எம்.எஸ்.வி இருவரும் இணைந்தால் அந்த படமும் பாடலும் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. இப்போது இருக்கும் இசையமைப்பாளர்கள் வெளிநாடுகள், ஸ்டார் ஹோட்டல்களுக்கு சென்றால் தான் தங்களுக்கு இசை டியூன் ஆகும் என்று கூறி வரும் நிலையில், அப்போதைய காலக்கடத்தில் இருந்த இடத்தில் இருந்தே பல டியூன்களை கொடுத்து அசத்தியவர் எம்.எஸ்.வி.

படத்தின் சுட்சிவேஷனை நினைத்து எம்.எஸ்.வி டியூன் போட்டால் கண்ணதாசன் உடனடியாக பாடல் வரிகளை கொடுத்துவிடுவார். அதன்பிறகு பாடல் பதிவும் உடனடியாக நடந்து படப்பிடிப்புக்கு பாடல் தயாராகிவிடும். ஆயிரத்தில் ஒருவன் படத்திற்காக எம்.ஜி.ஆர் போனில் சொன்னதை கேட்டு டியூன் போட்டு அதற்கு கண்ணதாசன் வரிகள் எழுதி ரெக்கார்டிங் முடிந்து மைசூருக்கு பாடல் அனுப்பி வைக்கப்பட்டது. அந்த பாடல் தான் ‘’ஏன் என்ற கேள்வி’’ பாடல்.

அதேபோல் ஒரு டியூன் போட்டு பாடல் ரெடியாக ரெக்கார்டிங் வரை சென்று கடைசி நிமிடத்தில் டியூனை மாற்றுங்கள் என்று சொன்னபோதும் அசராமல் எம்.எஸ்.வி டியூனை மாற்றி ஹிட் கொடுத்துள்ளார். ஸ்ரீதர் இயக்கத்தில் 1967-ம் ஆண்டு வெளியான படம் ஊட்டி வரை உறவு. சிவாஜி, கே.ஆர்.விஜயா இணைந்து நடித்திருந்த இந்த படத்தில், ஒரு சுட்சிவேனுக்கு எம்எஸ்.வி போட்ட டியூன் இயக்குனர் ஸ்ரீதருக்கு திருப்தி இல்லை.

ஆனால் இந்த பாடல் முழுவதையும் கேளுங்கள் என்று சொல்லி எம்.எஸ்.வி சம்மதிக்க வைத்துள்ளார். ரெக்கார்டிங் தியேட்டர் பாடல் பதிவுக்கு தயாரான போது இசைக்கலைஞர்கள் ரெடியாக இருந்தனர். ஆனால் இயக்குனர் ஸ்ரீதர் அங்கு வரவில்லை. அப்போது எம்.எஸ்.வி அவரை தேடியபோது அறைக்கு வெளியில் இருந்துள்ளார். அவரை பார்த்து பேசியதும் பாடலில் எனக்கு திருப்தி இல்லை என்று சொல்ல, உடனடியாக அவரை உள்ளே அழைத்து சென்று அனைவரின் முன்னிலையிலும் புதிதான சில டியூன்களை போட்டுள்ளார்.

இந்த டியூன்களில் தனக்கு பிடித்த ஒரு டியூனை ஸ்ரீதர் தேர்வு செய்ததை தொடர்ந்து உடனடியாக கண்ணதாசனை அழைத்து பாடல் எழுதப்பட்டு அப்போதே பாடல் பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. அந்த பாடல் தான் ‘’தேடினேன் வந்தது நாடினேன் தந்தது’’ என்ற பாடல். பி.சுசிலா இந்த பாடலை பாடியிருந்தார். க்ளாசிக் ரசிகர்கள் மத்தியில் இப்போதும் இந்த பாடல் நல்ல வரவேற்பை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply