• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மனதில் நினைத்த பாரதிராஜா... பாடல் வரிகளாக கொடுத்த கண்ணதாசன் -16 வயதினிலே சீக்ரெட்

சினிமா

ஸ்டூடியோவுக்குள் முடங்கி கிடந்த தமிழ் சினிமாவை வெளியில் அழைத்து சென்ற பெருமைக்கு சொந்தக்காரர் இயக்குனர் பாரதிராஜா.

தமிழ் சினிமாவில் காலத்தால் அழியாத பல திரைப்படங்களை இயக்கியவர் இயக்குனர் பாரதிராஜா. 1977-ம் ஆண்டு வெளியான 16 வயதினிலே படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர், ஸ்டூடியோவுக்குள் முடங்கி கிடந்த தமிழ் சினிமாவை வெளியில் அழைத்து சென்ற பெருமைக்கு சொந்தக்காரர். அதேபோல் இவரின் முதல் படமான 16 வயதினிலே படம் தமிழ் சினிமாவின் சிறந்த படங்களில் ஒன்றாக உள்ளது.

கமல்ஹாசன், ரஜினிகாந்த், ஸ்ரீதேவி உள்ளிட்டோர் முக்கிய கேரக்டரில் நடித்த இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இந்த படத்தில் மயிலு (ஸ்ரீதேவி) வீட்டில் வேலை செய்யும் சப்பாணி (கமல்ஹாசன்) மயிலுவின் அம்மா இறந்தவுடன் மயிலுக்கு பாதுகாவலனாக மாறுகிறான். அப்போது அம்மா இறந்த துக்கத்தில் இருக்கும் மயிலுவை சந்தோஷப்படுத்த சப்பாணி ஒரு பாடல் பாடுகிறான்.

இந்த பாடல் அவன் வாய்க்கு வந்த வார்த்தையில் பாடுவது போல் அமைய வேண்டும் என்று இயக்குனர் பாரதிராஜா விரும்பியுள்ளார். அதற்காக கவிஞர் கண்ணதாசனை அழைத்து பாடல் எழுத சொல்லியிருக்கிறார்கள். அப்போது கண்ணதாசன் எழுதிய பாடல்தான் ‘’ஆட்டுக்குட்டி முட்டையிட்டு கோழி குஞ்சு வந்ததுன்னு யானை குஞ்சு சொல்ல கேட்டு பூனை குஞ்சு வந்ததுன்னு”

இந்த பாடலை கேட்ட பாரதிராஜா ஒன்றுமே புரியவில்லை என்று சொல்ல, பின்னணி இசை சேர்த்து பாடலை கேட்டபோது அவருக்கு மிகவும் பிடித்துவிட்டது. இதில் இன்னொரு சுவாரஸ்யம் என்னவென்றால் இந்த பாடல் முடியும்போது பழைய நெனப்புடா தம்பி பழைய நெனப்புடா என்று வர வேண்டும் என்று எதிர்பார்த்துள்ளார். ஆனால் இதை கண்ணதாசனிடம் சொன்னால் என்ன சொல்வார், என் பாட்டில் நீங்கள் வரி சேர்க்கிறீர்களா என்று கேட்பாரோ என்று பயந்து அவரிடம் சொல்லாமல் இருந்துள்ளனர்.

ஆனால் கவிஞர் கண்ணதாசன், இந்த பாட்டுக்கு எதிர்பாட்டு பாடுவது போல் பழைய நெனப்புடா பேராண்டி பழைய நெனப்புடா என்று எழுதியுள்ளார். இந்த வரிகளை படித்து பார்த்த பாரதிராஜா நான் மனதில் நினைத்ததை அப்படியே வரிகளாக கொடுத்து விட்டாரே என்று ஆச்சரியமடைந்ததோடு மட்டுமல்லாமல் அவரை நினைத்து பூரித்து போயுள்ளார்.

Surendran Embanath

Leave a Reply