• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஆபீஸ் பையனுக்கு புரியலை.. உடனே மொத்த பாட்டையும் மாற்றிய கண்ணதாசன்; எந்த பாடல் தெரியுமா?

சினிமா

ஆபிஸ் பையனுக்கு புரியாததால் மொத்த பாட்டையும் உடனே மாற்றிய கண்ணதாசன்; அதற்கு கொடுத்த சூப்பர் விளக்கம் என்ன தெரியுமா?
தமிழ் சினிமாவின் பிரபலமான பாடல் ஒன்று பிறந்த சுவாரஸ்யமான கதையை இப்போது பார்ப்போம்.
தமிழ் சினிமாவில் பாடலாசிரியராக கோலோச்சியவர் கவிஞர் கண்ணதாசன். அவரது வரிகளுக்கு மயங்காதவர் எவருமே இல்லை. மடைதிறந்த வெள்ளம் போல் பாடல் வரிகளைக் கொட்டும் கண்ணதாசன் ஐந்தாயிரத்திற்கும் அதிகமான பாடல்களை எழுதியுள்ளார். சிறந்த கவிஞரான கண்ணதாசன், ஒரு பாடலை தனது ஆபிஸ் பையன் புரியல என்று கூறியதால் மொத்தமாக மாற்றியுள்ளார். அதற்கு கண்ணதாசன் கொடுத்த விளக்கமும் சூப்பர்.
அந்த பாடல் என்ன என்பதையும், அப்போது என்ன நடந்தது என்பதையும் கண்ணதாசனின் மகன் அண்ணாதுரை கூறியுள்ளார்.
அந்தப் பதிவில், கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா.. பாடல் பிறந்த சூழல்..
ஒரு படத்திற்கு பாடல் எழுத போனார் அப்பா கண்ணதாசன் அவர்கள். இயக்குனர் பாட்டிற்கான சூழலை சொல்ல.. அப்பா யோசித்து விட்டு பல்லவியை சொன்னார்.
பல்லவி இதுதான்...
“தாமரை உயரம் தண்ணீர் அளவு
உள்ளத்தளவே உலகளவு
காவிரி ஆறு கரைபுரண்டாலும்
காக்கைக்கு தேவை மூக்களவு”
இயக்குனருக்கும் மற்றவர்களுக்கும் பிடித்து விட்டது. தொடர்ந்து மூன்று சரணங்கள் எழுதி, ஒரு மணி நேரத்தில் பாடலை எழுதி முடித்து விட்டார்கள். பிறகு வழக்கம் போல அரட்டை கச்சேரி.

அப்போது ஆபீஸ் பையன் காபி கொண்டு வந்து தருகிறான். அப்பா சும்மா இருக்காமல் அவனிடம் “டேய்... பாட்டை கேட்டியா? எப்படி இருக்கு..? எனக் கேட்க, அதற்கு அவன் “ஐயா பாட்டு பாடுறதுக்கு ரொம்ப நல்லா இருக்கு. ஆனா எனக்கு எதுவும் புரியலை” என்றான்.
அப்பாவுக்கு அதிர்ச்சி... “உனக்கு என்னடா புரியலை?” எனக் கேட்க, “எனக்கு ஒண்ணும் புரியலை. என்னமோ தாமரை, காக்கானு வருது, அது மட்டும் தெரியுது. ஆனா அர்த்தம் புரியலே” என்று அந்த பையன் கூறியுள்ளார்.
உடனே அப்பா, “டேய் விசு... வேற டியூன் போடு.  புதுசா வேற பாட்டு எழுதுவோம்” என்றார். இப்போது விஸ்வநாதனுக்கு அதிர்ச்சி. “அண்ணே.. அவன் புரியாம பேசுறான். எல்லாருக்கும் இந்த பாட்டு பிடிச்சு இருக்கு. இதையே வச்சுக்குவோம் என்று விஸ்வநாதன் கூறியுள்ளார்.
விஸ்வநாதன், தயாரிப்பாளர், இயக்குனர், யார் சொல்லியும் கேட்காமல் அப்பா பிடிவாதமாக இருக்கிறார். “டேய் நாம பாட்டு எழுதுறது பண்டிதனுக்கு இல்லை. இவனை மாதிரி இருக்கிற ரசிகர்களுக்குத்தான். இவனுக்கு புரியலைனா, புரியிறது போல் வேற ஒண்ணு எழுதுவோம்” என்றிருக்கிறார்.
அப்பா அன்று பிடிவாதமாக இருந்து மாற்றி எழுதிய பாடல் தான்.. சிவாஜி கணேசன்- ஜெயலலிதா நடித்த "தெய்வமகன்" படத்தில் இடம்பெற்ற “கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா” என்ற பாடல். இது எல்லா பாடல் கம்போசிங்லயும் நடக்கின்ற ஒன்று! என கண்ணதாசன் மகன் அண்ணாதுரை கண்ணதாசன் கூறினார்.

Leave a Reply