• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நடக்கவே முடியாத நிலை... பாடல் பாட வற்புறுத்திய நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் : எஸ்.ஜானகி என்ன செய்தார்?

சினிமா

முன்னணி இசையமைப்பாளர்கள் பலரின் இசையில் பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ள எஸ்.ஜானனி, கடைசியான 2016-ம் ஆண்டு வெளியான திருநாள் படத்தில் 'தந்தையும் யாரோ' என்ற பாடலை பாடியிருந்தார்.

உடல்நிலை சரியில்லாமல் நடக்கவே முடியாத நிலையில், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வற்புறுத்தலின் பேரில் மேடை ஏறிய பின்னணி பாடகி எஸ்.ஜானகி 15 பாடல்களை பாடிய சம்பவம் நடந்துள்ளது.

இந்திய சினிமாவின் முன்னணி பின்னணி பாடகிகளில் முக்கியமானவர் எஸ்.ஜானகி. 1957-ம் ஆண்டு எஸ்.எஸ்.ராஜன் இயக்கத்தில் மகதல நாட்டு மேரி என்ற படத்தின் மூலம் பின்னணி பாடகியாக அறிமுகமான இவர், தொடர்ந்து, கே.வி.மகாதேவன், எம்.எஸ்.வி, இளையராஜா, சங்கர் கணேஷ், தேவா, ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட முன்னணி இசையமைப்பாளர்கள் பலரின் இசையில் பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார்.

கடைசியான ஜீவா நடிப்பில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான திருநாள் படத்தில் தந்தையும் யாரோ என்ற பாடலை பாடியிருந்தார். தமிழ் மட்டுமல்லாமல் இந்திய தெலுங்கு கன்னடம் மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் பல ஹிட் பாடல்களை பாடியுள்ள எஸ்.ஜானகி உடல்நிலை சரியில்லாமல் 9 நாட்கள் ஐசியூவில் சிகிச்சை பெற்று விட்டு நடக்கவே முடியாத நிலையில் மேடை ஏறி 15 பாடல்களை பாடியுள்ளார்.

ஒருமுறை அமெரிக்காவில் இசை நிகழ்ச்சி நடத்துவதற்காக சென்றிருந்த எஸ்.ஜானகி நிகழ்ச்சிக்கு முதல்நாள் தூக்கிக்கொண்டிருந்தபோது லேசான மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. ஆனால் அவருக்கு ஆஸ்துமா பிரச்சனை இருப்பதால், அதுதான் பாதிப்பு என்னு நினைத்து மாத்திரை போட்டுக்கொண்டு தூங்கியுள்ளார். ஆனால் மறுநாள் அவரால் எழுந்திருக்க முடியவில்லை. இதனைத் தொடர்ந்து ஜானகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இதயத்திற்கு ரத்தம் செல்லும் பாதையில் அவருக்கு கட்டி இருப்பது தெரியவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து 9 நாட்கள் ஐசியூவில் சிகிச்சை பெற்ற ஜானகி, மருத்துவர்களின் உதவியுடன் உடல்நலம் தேறியுள்ளார். அதனைத் தொடர்ந்து வீட்டுக்கு வந்த ஜானகியை அடுத்த நாள் ஒரு இசை நிகழ்ச்சிக்கு அழைத்துள்ளனர். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் 5 நிமிடமாவது மேடையிலாவது அமருங்கள் என்று வற்புறுத்தியதியுள்ளனர்.

இதனை ஏற்றுக்கொண்ட எஸ்.ஜானகி நடக்கவே முடியாத சூழ்நிலையாக இருந்தாலும் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். நிகழ்ச்சி தொடங்கியபோது ஏற்பாட்டாளர்கள் உங்களால் முடிந்தால் கடவுள் வாழ்த்தாவது பாடுங்கள் என்று சொல்ல, அதை ஏற்றுக்கொண்டு நமோ நாராயணா என்று கடவுள் வாழ்த்து பாட தொடங்கிய எஸ்.ஜானகி, தொடர்ந்து 10-15 பாடல்களை பாடியுள்ளார். அவர் பாடி முடித்தவுடன் அனைவரும் கரகோஷம் எழுப்ப ஜானகி மேடையிலேயே கண் கலங்கினார்.

நடக்கவே முடியாத என்னால் அன்றைக்கு மேடையில் பாடல்களை பாட முடிந்தது என்றால், அந்த பாபாவின் அனுகிரகம் தான் என்று ஒரு பத்திரிக்கை பேட்டியில் எஸ்.ஜானகி கூறியதாக டூரிங் டாக்கீஸ் சித்ரா லட்சுமணன் தனது யூடியூப் சேனலில் தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply