• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கமலுக்கு மேக்கப் ஒரு பேஷன்னு சொல்லலாம்.

சினிமா

அவர் நடிப்பு, கதை, பாடல்னு எந்த வழியில் இருந்தாலும் அவரே பார்த்து வியக்கும் ஒரு துறை தான் மேக்கப். அதிகமா முயற்சி செய்வதும் அதில் தான் என்பதை பல தருணங்கள்உணர்த்தும்.

சினிமாவில் நடிக்க முயற்சி செய்யும் காலங்களில் கமல் ஒரு மேக்கப்மேனா இருந்திருக்கார்னு சமீபத்திய தேவா பேட்டியில் சொல்லி இருந்தார். தேவா இசையமைக்கும் ஒரு நாடகத்துக்கு மேக்கப்மேனாக கமல் வந்திருக்கிறார். அந்த ராமாயண நாடகத்தில் ராவணன் வேடத்தில் நடித்தது அந்த ஊர்ப்பெரிய மனிதரின் மகன். அவருக்கு பத்து தலை செட் பண்ண வேண்டும். கமல் பத்து பொம்மை தலையை செட் பண்ணி அதை கம்பியால் கழுத்தோடு கட்டிவிடுகிறார். சில காட்சிகளுக்கு பிறகு அந்த கம்பி இறுக்கி மூச்சு விடமுடியாம ராவணன் மேடையில் விழ பெரிய கலவரமாகிவிட கமல் ஒரு பக்கம், தேவா ஒரு பக்கம் தப்பிச்சோம் பிழைச்சோம்னு ஓடிடறாங்க.

இந்த மேக்கப் காதல் கமலுக்கு தொடக்கம் முதலே இருக்கிறது. அவர் தன்னை சகநடிகர்களிடமிருந்து வேறுபடுத்தி காட்ட நடிப்பை விட மேக்கப் முக்கியம் என்பதை உணர்ந்து வைத்திருந்தார். ஏனென்றால் அவர் நடிக்க வந்த காலத்து நாயகர்களான ஜெய்சங்கர், முத்துராமன், ரவிச்சந்திரன், ஸ்ரீகாந்த்  எல்லோருமே நூறு படங்களாவது ஒரே தோற்றத்தில் வருவாங்க. நன்றாக கவனித்தால் கமல் 'அவர்கள்' படத்தில் வந்த மாதிரி 'அவள் ஒரு தொடர்கதை'யில் வந்திருக்கமாட்டார். அபூர்வராகங்கள் படத்தில் வந்த மாதிரி மன்மதலீலையில் வந்திருக்கமாட்டார். தப்புதாளங்கள் படத்தில் சிறிய ரோலான அம்ரித் லால் என்கிற வடக்கத்தியானாக வந்தாலும் எடுப்பான பல் வைத்து வித்தியாசமாக வருவார். 

சிகப்பு ரோஜாக்கள் படத்தில் அவர் போட்டிருந்த கண்ணாடி அவரை மென்மையாக காட்டும். பாதி படத்துக்குப்பிறகு அவர் ஒரு சைக்கோ கொலைகாரர்னு நம்ப முடியாமல் படம் பார்ப்போம். அது தான் அந்த படத்தின் வெற்றி. பதினாறு வயதினிலே சப்பாணியாக ஒரு மேக்கப்பும், கோபாலகிருஷ்ணனாக வேறொரு மேக்கப்பும் பயன் படுத்தி இருப்பார். 

இரட்டை வேடப்படங்களில் கல்யாணராமன் படத்தில் அவர் பல் வைத்து நடித்தது அன்று ஒரு பேசு பொருளானது. ஒரு பல் டாக்டரிடம் போய் தன் தாடை அளவெடுத்து பிரத்தியேகமாக செய்யப்பட்ட பல் செட்டை பயன் படுத்தினார். அவர் எதிர்பார்த்தது போலவே அது ஹிட்டானது. அவர் போகும் இடமெல்லாம் ரசிகர்கள் இதையே கேட்டனர். சகலகலாவல்லவன் படத்தின் இளமை இதோ இதோ பாடலில் ஒரு செகண்ட் அப்படி பல் வைத்து காட்டுவார். 'பசி' படத்தில் ஷோபா அவரிடம் பல் வைத்த கல்யாணத்தைக்கேட்க கமல் திரும்பி நின்று பல்லை வைத்து காட்டுவதாக காட்சி வைத்திருந்தார்கள். 

தனது அபிமான இயக்குனர் ஜி.என்.ரங்கராஜனுக்கு 'எல்லாம் இன்ப மயம்' நடிக்கும் போது கதையில் பல கெட்டப்களில் வருவதாக காட்சியை அமைத்திருந்ததில் நிச்சயம் கமல் அல்லாது வேறு யார்? வேலு என்கிற கிராமத்தா,சிறைக்கு சென்று வந்த வேலு, நீக்ரோ, வக்கீல்,ரிக்ஷாக்காரன் என பல மேக்கப்களில் வருவார் கமல். இந்த நீக்ரோ மேக்கப்பில் சென்னையில் வலம் வந்ததையும்,யாருமே அவரை கண்டுபிடிக்கவில்லை என்பதையும் கவர் ஸ்டோரியாக எழுதியது ஒரு வாரப்பத்திரிக்கை. அதேப்போல தன் நண்பர் ஆர்.சக்தியின் மனிதரில் இத்தனை நிறங்களா படத்தில் வெறொரு கெட்டப்பில் வந்திருப்பார். 

தாயில்லாமல் நானில்லை படத்தில் தொங்கு மீசை வைத்து மீசையின் அடிபாகம் வட்டமாக வைத்து ஒரு புதிய ஸ்டைலை உருவாக்கி வைத்திருந்தார். குரு படத்தில் சொல்லவே வேண்டாம். முதல் காட்சியிலேயே ரயில் கொள்ளையடிக்க வரும் மேக்கப் அசத்தலாக இருக்கும். ஸ்ரீதேவியின் வீட்டில் மின்சாரம் போனதும் மின்சார வாரிய ஊழியராக வரும் போது முழு வழுக்கையராக நாமம் இட்ட ஒரு பாத்திரத்தில் வருவார். 

கல்யாண ராமன் போன்றே மங்கம்மா சபதம் படத்தில் வித்தியாசமான மேக்கப்போடு கண்ணாடி பல்லெல்லாம் வைத்து தந்தை கமலாக வந்திருப்பார். எனக்குள் ஒருவன் படமான ஹிந்தி கர்ஸ் படத்தில் இரண்டு நடிகர்கள் நடித்திருப்பார்கள். ஒரு மறுபிறவிக்கதையில் இரண்டு நடிகர்கள் நடித்து ஹிந்தியில் படு ஹிட்டான படம். தமில் கமலே இரு வேடங்களில் நடித்தும் அதில் ஒரு கமல் நேபாளி மார்ஷியல் ஆர்ட் வீரனாக தன் புருவத்தின் தசையை இழுத்துக்கட்டி வலியோடு நடித்தும் அப்படம் ஏனோ எதிர்பார்த்த வெற்றியைப்பெறவில்லை.

கடல் மீன்கள், சங்கர்லால், ஒரு கைதியின் டைரி படங்களில் இரண்டு கமலையும் மேக்கப் தான் வேறு வேறு மனிதர்களாளாகவே காட்டும். தூங்காதே தம்பி தூங்காதே படத்தில் கூட அண்ணனாக வரும் கமல் மஸ்குலராக இருப்பதாகவும், தம்பியாக வரும் கமல் கொஞ்சம் ஒல்லியாக இருப்பதாக தோன்றும். இதுவும் கமலின் ஆடைத்தேர்வில் தோன்றுவதே. அபூர்வ சகோதரகள் படத்தில் குள்ள கமலை விட மற்ற கமல் உயரமாக தெரிய டைட்டான பேண்ட்கள், உயரமாக தெரியும் ஹேர் ஸ்டைல், கோடு போட்ட மீசை என தன்  மேக்கப் நேர்த்தி மூலம் உணர்த்தி இருப்பார். 

தேவர்மகன் படத்தில் கமலின் அந்த மாடர்ன் பையன் இமேஜுக்கு கமல் தாடியையும், அப்போது முடிந்து போயிருந்த பங்க் ஸ்டைலையும் பயன்படுத்தி இருப்பார். பின் ஊர் தலைவராக அவர் செய்த மேக்கப் மாற்றம் ஊர் மக்கள் மட்டுமல்ல படம் பார்க்கும் நம் வாயையும் பிளக்கச்செய்தது நிஜம். புன்னகை மன்னனின் சாப்ளின் செல்லப்பா பாலச்சந்தர்-கமலின் முந்தைய அவள் ஒரு தொடர்கதையின் மிமிக்ரிகாரன், அவர்களின் வென்ட்ரிக்கியூலிஸம் ஆர்ட்டிஸ்ட் போல மற்றொரு பரிமாணம். சமூகத்தில் எங்காவது ஓரிடத்தில் வாழும் ஒரு கேரக்டர். அது தான் கே.பி-கமல்கூட்டணியின் ஸ்பெஷல்.

நாயகனுக்குப்பிறகு கமலின் நாட்டம் எடிமர்பியின் 'மேக்கப்புக்குள் தன்னை மறைதுக்கொள்வதில்' நாட்டம் ஏற்பட்டதில் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை. ஹாலிவுட் மேக்கப்மேன் மைக் வெஸ்ட்மோரிடம் பிராஸ்தடிக் மேக்கப் கலையை கற்க அமெரிக்காவே சென்று விட்ட கமல் தன் பயிற்சியில் ஒரு பாகமாக அப்போது படமாக்கப்பட்டிருந்த Rambo படத்தில் ஸ்டாலோனுக்கு மேக்கப் செய்திருக்கிறார். அந்த தனித்துவமே பின்னாளில் தன்னுடன் நடிக்கும் த்ரிஷா, ஆண்ட்ரியா, விஜய் சேதுபதி போன்றோருக்கு அவரே மேக்கப்போடும் வரை வளர்ந்திருக்கிறது. அதில் எந்த ஈகோவும் இல்லை அவருக்கு.

பிராஸ்தடிக் மேக்கப்பில் இந்தியனில் தன்னை மறைத்த கமலை பலரும் ரசித்ததால் அவர் அவ்வை சண்முகியை தேர்ந்தெடுத்தார். அவ்வை சண்முகிக்கு முன்பே அவர் தன் அக்கா நளினி போல பெண் வேடமிட்டு போட்டோ எடுத்துப்பார்த்திருக்கிறார்...இல்லை வேற வேற என மனசு சொல்ல பெண் வேடமிட்டு அன்றைய அம்மா நடிகைகள் சுகுமாரி, கவியூர் பொன்னம்மா போன்றோரை சந்தித்து தன் மேக்கப் பற்றி கேட்டறிந்ததோடு பல டிப்ஸ்களையும் பெற்றிருக்கிறார். இந்த மேஜிக்கை சோதித்துப் பார்க்க தமிழக முதல்வர் கலைஞரிடமே இதே மேக்கப்போடு சென்றதும் அவரால் கண்டுடிக்க முடியாமல் போனதாகவும் பின்னாளில் சொன்னது தனிக்கதை. அவ்வை சண்முகியும் ஆச்சர்யப்படுத்தியது உண்மை.

உத்தமவில்லன் படத்தின் ப்ரோமோவாக அவர் செய்திருந்த கேரளத்தின் 'தெய்யம்'  மேக்கப் படத்துக்கு வேறொரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. எப்படி ஆளவந்தானில் இரு கமல்களின் போட்டோக்கள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதோ அது போல. ஆனால் உத்தமவில்லன் கதை வெறொன்றாகி சலிப்பை ஏற்படுத்தியது.

தசாவதாரம் மேக்கப்பின் சிகரத்தை தொட்டது. சில கேரக்டர்கள் இது கமலில்லை. வேறு ஆள் எனக்கூட சொல்ல வைக்கும் விதமாக இருந்தது. 

இன்னும் நிறைய சொல்லலாம். கமலின் அன்று ராவணனை வீழ்த்திய அந்த மேக்கப்கலையில் கமல் ராவணனாக விஸ்வரூபமெடுத்து நிற்கிறார் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. உலகிலேயே இத்தனை கெட்டப்களில் நடித்த ஒரெயொரு சில நிமிடக்காட்சிக்காக உழைப்பையும், நேரத்தையும் கொட்டிய வேறொரு நடிகன் இருந்தால் எனக்குச்சொல்லுங்கள்...

Leave a Reply