• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சிறிய வீட்டில் முதல் சந்திப்பு... எம்.ஜி.ஆர் பற்றி கணித்த கண்ணதாசன்

சினிமா

கவிஞராக மட்டுமல்லாமல், திரைக்கதை ஆசிரியர், தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முக திறமை கொண்டவர் கண்ணதாசன்.

தமிழ் சினிமாவில் காலத்தால் அழியாத பல பாடல்களை கொடுத்துள்ளவர் கவிஞர் கண்ணதாசன். 1950-60 களில் எழுதிய அவரது பாடல் இன்றைய காலக்கட்டத்திற்கும் பொருந்துவது போல் அமைந்துள்ளதால் தற்போதைய ரசிகர்களும் அவரது பாடல்களை கேட்டு ரசித்து வருகின்றனர். ஒரு மனிதனின் அத்தனை உணர்வுகளையும் பிரதிபலிக்கும் வகையில் அவர் கொடுத்துள்ள பாடல்கள் தமிழ் சினிமாவின் அழியாத பொக்கிஷங்கள் என்று சொல்லலாம்.

கவிஞராக மட்டுமல்லாமல்,  திரைக்கதை ஆசிரியர், தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முக திறமை கொண்ட கண்ணதாசன், எம்.ஜி.ஆர் சிவாஜி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார். அதேபோல் சிவாஜி நடிப்பில் பல படங்களை தயாரித்துள்ள கண்ணதாசன், சினிமா மட்டுமல்லாமல் அரசியலிலும் தனது ஆளுமையை செலுத்தி வந்தார்.

அதேபோல் எம்.ஜி.ஆருக்கு இவர் எழுதிய அத்தனை பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், எம்.எஸ்.வி. – கண்ணதாசன் கூட்டணி இருந்தால் அந்த படம் வெற்றியடைந்துவிடும் என்ற நிலையும் இருந்தது. ஆனால் அரசியலில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக எம்.ஜி.ஆர் – கண்ணதாசன் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. இதில் மேடையில் பலமுறை கண்ணதாசன் எம்.ஜி.ஆரை விமர்சித்துள்ளார்.

இந்த அரசியல் மோதல் காரணமாக இருவரும் பிரிந்திருந்த காலத்தில் எம்.ஜி.ஆருக்கு வாலி பாடல்கள் எழுதி வந்தார். ஆனாலும் தான் தேர்தலில் வெற்றி பெற்று தமிழக முதல்வராக உயர்ந்த் எம்.ஜி.ஆர் கண்ணதாசனுக்கு அரசவை கவிஞர் என்ற பொறுப்பை கொடுத்து அழகு பார்த்தார். இதற்காக கண்ணதாசன் எம்.ஜி.ஆரை நேரில் சந்தித்து தனது நன்றியையும் தெரிவித்திருந்தார், இப்படி பல சம்பங்கள் இருந்தாலும் இவர்கள் இருவரின் முதல் சந்திப்பு மிகவும் சுவாரஸ்யமானது.

1941-ம் ஆண்டு அசோக் குமார் என்ற படத்தில் எம்.ஜி.ஆர் நடித்துக்கொண்டிருந்தபோது, சென்னை வால்ட் டாக்கிஸ் சாலையில் ஒத்தவாடை என்றும் பகுதியில் தனது சகோதரர் சக்கரபாணி மற்றும் தாயாருடன் எம்.ஜி.ஆர் வசித்து வந்துள்ளார். அப்போது அவரை பார்க்க கண்ணதாசனும் கலைஞரும் சென்றுள்ளனர். இந்த சந்திப்புதான் கண்ணதாசன் எம்.ஜி.ஆர் இருவரின் முதல் சந்திப்பு. அப்போது எம்.ஜி.ஆரை பார்த்த கண்ணதாசன் இவர் ஹீரோவாக நடிக்க வேண்டியவர். அப்படி நடித்தால் பெரிய நடிகராக வருவார் என்று நினைத்துள்ளார். பின்னாளில் தமிழ் சினிமாவில் தனது ஆளுமையை செலுத்திய எம்.ஜி.ஆர் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தார். இதன் மூலம் தனது கணிப்பு வீண்போகவில்லை என்று கண்ணதாசன் குறிப்பிட்டிருந்தார்.
 

Leave a Reply