• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கண்ணதாசனை கடிந்த பிரபலம்

சினிமா

கவிஞனாக இருந்தா எந்த பெண்ணையும் தொடலாமோ? பாட்டை மாத்துடா... கண்ணதாசனை கடிந்த பிரபலம்

கண்ணதாசன் இன்றைக்கும் திரையுலகில் பேசப்படும் முக்கிய பிரபலமாக இருக்கிறார் என்றால் இதற்கு முக்கிய காரணம் மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர் சுந்தரம் தான்.

தமிழ் திரையுலகில் காலத்தை வென்ற கவிஞர்கள் பட்டியலை எடுத்துக்கொண்டால் அதில் முக்கிய இடம் கவியரசு கண்ணதாசனுக்கு உண்டு. தனது பாடல் வரிகளின் மூலம் வாழ்க்கையின் தத்துவங்களை உணர்த்திய கண்ணதாசன், மனிதனின் அத்தனை உணர்ச்சிகளுக்கும் தனது பாடல் மூலம் பதில் கூறியுள்ளார்.எம்.ஜி.ஆர் சிவாஜி உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுக்கு தனது வரிகள் மூலம் பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார்.

கண்ணதாசன், எழுத்தாளர், திரைக்கதை ஆசிரியர், தயாரிப்பாளர் இயக்குனர் என பன்முக திறமை கொண்டனர். பல திறமைகளை உள்ளடக்கி இருந்தாலும் கண்ணதாசன் தனது பாடல்கள் மூலமாகவே மக்கள் மத்தியில் பிரபலமானார். அதேபோல் இவரும் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனும் இணைந்தால் அந்த படம் பெரிய வெற்றி பெற்றுவிடும் என்று பேச்சுக்கள் இருந்த காலக்கட்டம் தமிழ் சினிமாவில் இருந்துள்ளது.

கண்ணதாசன் இன்றைக்கும் திரையுலகில் பேசப்படும் முக்கிய பிரபலமாக இருக்கிறார் என்றால் இதற்கு முக்கிய காரணம் மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர் சுந்தரம் தான். கவிஞராக வேண்டும் என்று முயற்சித்தபோது முதலில் அவருக்கு சினிமா வாய்ப்பு கொடுத்தவர் தான் இந்த டி.ஆர்.சுந்தரம். அவருடன் பணியாற்றி மற்றவர்களை விடவும் கண்ணதாசனுக்கு அதிக சம்பளம் கொடுத்த அவர் கண்ணதாசன் மீது மிகுந்த பாசத்துடன் இருந்துள்ளார்.

இது குறித்து கண்ணதாசன் எழுதியதாக அவரது மகன், அண்ணாதுரை கண்ணதாசன் வெளியிட்டுள்ள பதிவில், 33 ஆண்டுகளுக்கு முன்பு அற்புதமான அந்த இளமைக் காலத்தில் என்னை மரியாதையோடு வரவேற்ற முதன் நகரம் சேலம். கைவிலங்கு கால் விலங்கு வில்லங்கமில்லாத அந்த நாளில் தனது பத்திரிக்கையின் ஆசிரியனாக மாடர்ன் தியேட்டர்ஸ் முதலாளி டிஆர் எஸ் என்னை ஏற்றுக்கொண்டார். அங்கிருந்துதான் எனது எதிர்காலமே ஆரம்பமாயிற்று

பத்திரிக்கையிலிருந்து திரைக்கதை பாட்டு என்று என்னை. வளர்த்து விட்டது மாடர்ன் தியேட்டர்ஸ் நான் மிக பயபக்தியோடு" முதலாளி என்று அழைப்பது டி ஆர் எஸ் ஒருவரைத்தான். அவர் என்னிடம் காட்டிய அன்பையும் பரிவையும் வேறு யாரிடமும் நான் கண்டதில்லை ஆங்கிலப் படிப்பே படித்ததால் தானோ என்னவோ தமிழ் மீது அளவற்ற பக்தியும் வெறியும் டி.ஆர்.எஸ்ஸுக்கு உண்டு

அந்த நாளில் மாடர்ன் தியேட்டர்ஸில் எனக்கு நூற்று இருபத்தைந்து ரூபாய் சம்பளம். ஓ.ஏ.கே.தேவர், சீர்காழி கோவிந்தராஜன், கே.கே சௌந்தர் எல்லோருக்குமே தலா ஐம்பது ரூபாய் சம்பளம் அதிலிருந்து படிப்படியாக என்னை உயர்த்தினார் முதலாளி. இல்லற ஜோதி-க்கு கதை வசனம் பாடல்கள் நான். அப்போது டால்மியாபுரம் வழக்கு நடந்துகொண்டிருந்தது. முதலாளி லண்டன் போயிருந்தார். நாங்கள் கதையை எழுதிப் படத்தை முடித்து விட்டோம்.

அதிலே கதாநாயகன் கல்யாணமான ஒரு கவிஞன். இன்னொரு பெண்னை அவன் தொட்டு விடுகிறான் உடனே அவன் கவிஞனுக்கே களங்கமில்லை என்று பாடுகிறாள். லண்டனிலிருந்து திரும்பிய முதலாளி இந்தப் பாட்டைக் கேட்டார். ஓஹோ கவிஞனாக இருந்தால் எந்தப் பெண்ணையும் தொடலாமோ? பாட்டை மாத்தடா என்றார். பிறகு களங்கமில்லாக் காதலிலே என்று மாற்றினோம்.

நான் ஜெயிலுக்குப் போய்விட்டேன். படம் வெளியாகும்போது சிறையிலேயே இருந்தேன். வெளியே வந்ததும் மீண்டும் என்னை மாடர்ன் தியேட்டர்ஸ் அழைத்தது. சேலம் வாழ்க்கையில் நூற்றுக்கணக்கான சம்பவங்கள். சின்னஞ்சிறு பருவத்திலிருந்து ஆடி ஓடித் திரிந்த அந்தக் காலங்கள் இனி வருமா?

எனது சேலம் வாழ்க்கையில் சம்பந்தப்பட்டவர் அனைவருமே மீண்டும் ஒரு பிறவி எடுத்து ஒரே இடத்தில் சந்திக்கப் போகிறோமா? மனம் இங்குமங்குமாகத் தாவுகிறது. காரணம் என்னவோ தெரியாது சில இடங்களுக்குப் போனால் மனம் உற்சாகமாக இருக்கிறது சில இடங்கள் நரகம் போல் தோன்றுகின்றன.

சேலத்தை நினைத்துப் பார்த்தால் கூட எனக்கு உற்சாகம் பிறப்பதற்குக் அரணாக இருபது ஆண்டுகள் டி.ஆர்.எஸ் காட்டிய அன்பும் பதிமூன்று ஆண்டுகளாக ராமசுந்தரம் காட்டிய பாசமும் தானோ என்னவோ’’ என்று எழுதியதாக குறிப்பிட்டுள்ளார்.
 

Leave a Reply