• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நான் சிவாஜி கணேசன் இல்லை - ஷூட்டிங்கில் எம்.ஜி.ஆருக்கு வந்த கோபம்

சினிமா

க்ளாசிக் சினிமாவில் சிறந்த எழுத்தாளரும் வசன கர்த்தாவுமாக இருந்த ஆரூர் தாஸ் எம்.ஜி.ஆர் சிவாஜி என இருவரின் படங்களிலும் பணியாற்றியுள்ளார்.

தமிழ் க்ளாசிக் சினிமாவில் போட்டி நடிகர்கள் என்று எடுத்துக்கொண்டால் எம்.ஜி.ஆர் சிவாஜியை தான் சொல்வார்கள். எம்.ஜி.ஆர் படங்களை இயக்க வசனம் எழுத மற்றும் டெக்கினிக்கல் விஷங்களை கவனிக்க ஒரு டீம் இருக்கும். அதேபோல் சிவாஜிக்கு என்று தனி டீம் இருக்கும். இதில் ஒருவர் மற்றொரு டீமுக்கு செல்ல மாட்டார். ஆனாலும் சிலர் விதிவிலக்காக எம்.ஜி.ஆர் சிவாஜி இருவரின் படங்களுக்கும் வேலை செய்திருப்பார்.

அதேபோல் இருவருடனும் நெருக்கமாக இருந்திருப்பார். அப்படி ஒரு நபர் தான் ஆரூர் தாஸ். க்ளாசிக் சினிமாவில் சிறந்த எழுத்தாளரும் வசன கர்த்தாவுமாக இருந்த ஆரூர் தாஸ் டைலாக் எழுதும்போது எழுதிவிட்டு ஷூட்டிங் ஸ்பாட்டில் வந்து நடித்து முடித்தவுடன் அதற்கு பதிலாக இந்த வசனத்தை பேசுங்கள் என்று அவ்வப்போது மாற்றங்களை செய்து வருபவர். எம்.ஜி.ஆர் சிவாஜி என பாகுபாடு இல்லாமல் இருவரின் படங்களுக்கும் இதை தன் வாடிக்கையாக வைத்திருந்தவர் ஆரூர் தாஸ்.

1954-ம் ஆண்டு நாட்டிய திரா என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான ஆரூர் தாஸ், 1959-ல் வெளியான வாழ வைத்த தெய்வம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு பாசமலர் படத்தில் சிவாஜிக்கு வசனம் எழுதிய ஆரூர் தாஸ், 1961-ம் ஆண்டு வெளியான தாய் சொல்லை தட்டாதே என்ற படத்தின் மூலம் எம்.ஜி.ஆர் படத்திற்கு வசனம் எழுத தொடங்கினார்.

இந்த படத்தின் படப்பிடிப்பின்போது,  ஒரு காட்சியில் ஆரூர் தாஸ் குறிப்பிட்ட ஒரு வசனத்தை எம்.ஜி.ஆர் சொல்ல மறந்துவிட்டார். உடனே அதை ஆரூர் தாஸ் எடுத்து சொல்ல, எம்.ஜி.ஆரும் அதை புரிந்துகொண்டார். அதன்பிறகு அடுத்த டேக்கில் அந்த வசனத்தை எம்.ஜி.ஆர் சரியாக சொல்ல டேக் ஓகே ஆகிவிட்டது. அந்த ஷாட் முடிந்ததும் ஆரூர் தாஸை அழைத்த எம்.ஜி.ஆர், உங்களிடம் ஒன்று சொல்கிறேன் தப்பா நினைக்காதீங்க என்று கூறியுள்ளார்.

ஆரூர் தாஸ் உங்களுக்கு எது சொல்லவும் உரிமை இருக்கு நீங்க சொல்லுங்க என்று சொல்ல, ஷாட் எடுக்கும்போது நான் எதாவது வசனத்தை மறந்துவிட்டால் இப்போது சொன்னது போல் எட்டி நின்னு சொல்லாதீங்க, எனக்கு ஒரு மாதிரியா இருக்கு கிட்ட வந்து மெதுவா சொல்லுங்கள். நான் உங்களை புரிந்துகொண்ட அளவுக்கு நீங்கள் என்னை இன்னும் சரியா புரிஞ்சிக்கல. இதுதான என்னுடன் முதல் படம் போக போக எல்லாம் சரியாகிடும் என்று கூறியுள்ளார்.

இதை கேட்ட ஆரூர் தாஸ், படப்பிடிப்பில் சிவாஜி என்னை சத்தம்போட்டு சொல்ல சொல்வார் அதே ஞாபகத்தில் இங்கு சொல்லிவிட்டேன் என்று சொல்ல, நான் சிவாஜி இல்லை, அதை எப்போதும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள். நான் சொல்வது உங்களுக்கு புரியும்னு நினைக்கிறேன் என்று சொல்ல, ஆரூர் தாஸோ நன்றாக புரிந்தது என்று சொல்லியிருக்கிறார். தி ரைஸ் நல்ல சினிமா என்ற யூடியூப் சேனலில் இது குறித்து தகவல் இடம்பெற்றுள்ளது.
 

Leave a Reply