• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கட்டசேரி ஜோசப் ஜேசுதாஸ் என்னும் கானகந்தர்வன்...

சினிமா

1976ல் வெளிவந்த பத்ரகாளி படத்தில் வாலிப கவிஞரின் வரிகளில் வரும் “கண்ணன் ஒரு கைக் குழந்தை” பாடலே இசைஞானியின் இசையில் இவர் பாடிய முதல் பாடல் ஆகும். ஒரு முறை ஜனனி ஜனனி பாடல் கம்போசிங் முடிந்து இவர் பாட வருவதற்காக ஸ்டுடியோவில காத்திருந்த போது, வர தாமதமானதால் இசைஞானி அந்த பாடலின் டிராக்கை பாடி முடித்தார். தாஸேட்டா வந்ததும் அவருக்கு தான் பாடிய டிராக்கை போட்டு காட்டி இப்படி பாடுங்கள் என கூற.. அதை கேட்ட கானகந்தர்வன் “நீங்க பாடிய இந்த பரவசமான பாடலை காட்டிலும் நான் பெரிசா பாடீர போறதில்லை. எனவே உங்கள் குரலிலேயே இந்த பாடல் படத்திலும் இருக்கட்டும் என்று பாட மறுக்க, அப்படி உதயமானது தான் தாய் முகாம்பிகை படத்தில் இசைஞானி குரலில் வரும் “ஜனனி ஜனனி ஜகம் நீ” பாடல்.

வாய்ஸ், ரிதம், ஸ்டிரிங் மற்றும் பிரேஸ் ஆகிய நான்கும் தனி தனியே ரெக்கார்ட் செய்யப்பட்டு 4 டிராக் டிஜிட்டல் ஸ்டீரியோபோனிக் சவுண்ட் டெக்னாலஜியில் தமிழ் திரை உலகில் வந்த முதல் படம் ப்ரியா. இந்த ஐடியாவை தந்தவர் எழுத்தாளர் சுஜாதா தான். அவர் கூற அந்த நேரத்தில் கானகந்தர்வர் தன்னுடைய தரங்கிணி பாடல் பதிவக ஸ்டுடியோவிற்காக வாங்கப்பட்ட கருவிகளை இதற்காக கொடுத்து உதவினார். அதில் கூட பாடல் பதிவில் சவுண்ட் இஞ்சினியரின் வால்யூம் கண்ட்ரோல் அஜாக்கிரதையால் சில கருவிகள் பழுதாகி போக திரும்பவும் அந்த கருவிகளை வரவழைத்து இந்த படத்தை 4 டிராக் டிஜிட்டல் ஸ்டீரியோ தொழில் நுட்பத்தில் முடித்தனர். ப்ரியா படத்தில் அனைத்து பாடல்களையும் தாஸேட்டா பாடியது கூட அதற்கான ஒரு கிரெடிட்டாக இருந்திருக்கலாம்.

ஸ்ரீ ராகாவேந்திரா படத்தில் “மழைக்கொரு தேவனே வருணனே” என ஒரு சின்ன பாடல் இருக்கும். இந்த பாடல் சின்ன விருத்தத்துடன் அமையபெற்றாலும் அமிர்தவர்ஷினி ராகத்தில் கான கந்தர்வன் குரலில் அந்த ஆரம்ப ஆலாப் பாடுவாரு பாருங்க.... ச்சை சான்சே இல்ல... அந்த ஆலாப்பிலியே நம்மள மழையால கானகந்தர்வரும் இசைஞானியும் நனைய வெச்சிருவாங்க... தூங்காத விழிகள் ரெண்டு.... இசைஞானியின் இசையில் அமிர்தவர்ஷினி ராகத்தில் அமைய பெற்ற இந்த பாடலை ஒரு கோடை காலத்தில் ரெக்கார்டிங் ஸ்டுடியோவில் திரு ஜேசுதாஸும் ஜானகி அம்மாவும் பாடி விட்டு வெளியே வரும் போது பேய் மழை பெய்து பெடலெடுத்தது என்பது உண்மை வரலாறு...

இசைஞானியின் இசையில் கானகந்தர்வனின் குரலில் ஒரு சோறு பதம் போல “நீ பௌர்ணமி என்றும் என்” பாடலை குறிப்பிடலாம். பல்லவியை தன் கந்தர்வ குரலால் பாடி முடிஞ்சி முதல் சரணத்தில அப்படியே மெதுவா ஆரம்பிப்பாரு இசைஞானி தனது தர்பாரை... “நீ இல்லாத வானம் இங்கே.. மெய் இல்லாத ஜீவன் இங்கே” ரெண்டு வரிகளுக்கும் நடுவுல வீணையில ஒரு நர்த்தனம் காட்டுவாரு... ரெண்டாவது இடை இசையில் ஒற்றை புல்லாங்குழலுடன் தபேலா கலந்து சரசமாட ஆரம்பித்து தொடர்ந்து வீணையில் சல்லாபத்தை காட்டும் போதே தெரிஞ்சிக்கலாம்.. ரெண்டாவது சரணத்தில ஏதோ ஒரு அற்புதம் நிகழப்போகும்னு...

ரெண்டாவது சரணத்தில “வாழ்த்து சொல்ல மறந்ததேன்” தாசேட்டா பாட தொடர்ந்து இசைஞானி ஆரம்பிப்பாரு பாருங்க தன்னுடைய கதகளிய.... அதுக்கு ஏத்த மாதிரி கான கந்தர்வன் என்னமா பாடியிருப்பாரு.... “பா தபம பதபம கரி ஸா ரி கரி ஸரிகமப” ஆரம்பிக்கும் போது தபேலாவும் கூட பயணிக்கும். “தனிமையின் கொடுமையில் காதலில்” மற்றும் “பிரிவெனும் சிறைதனில் சாதலில்” வரிகளுக்கு மட்டும் தபேலாவுடன் சேர்ந்து வீணையும் சரசமாடும்... கடைசியில உச்ச ஸ்தாயில “பதநிஸரி கரிஸ நிஸ கரிஸ நிஸ ரிஸநி தநி ஸநிதப நிதபம தபமக” பாடி முடிச்சவுடன் எந்த இசையும் இல்லாம “நீ பௌர்ணமி” அப்படீன்னு ஆரம்பிச்சு “என்றும் என் நெஞ்சிலே” வரிகளில் கான கந்தர்வன் திரு.ஜேசுதாஸ் குரலுடன் தபேலாவும் வீணையும் இணைய வெப்பாரு பாருங்க..... இதுக்கு மேல சொல்றதுக்கு ஒன்னுமில்ல... கேட்டவுடன் விழிகள் ஈரமானது தான் மிச்சம்....

- கானா பிரபா 

Leave a Reply