• Welcome to TamilsGuide
செய்திகள் 1

எம்.ஜி.ஆர் நடிப்பில் தொடக்கம்... கமல் நடிப்பில் முடிவு - ஸ்ரீதர் இப்படி செய்தது ஏன்?

சினிமா

எம்.ஜி.ஆர் நடிப்பில் தொடங்கப்பட்ட ஒரு படம் 2 நாட்களில் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு சில வருடங்கள் கழித்து கமல்ஹாசன் நடிப்பில் தொடங்கப்பட்டது.

தமிழ் சினிமாவில் புதுமை இயக்குனர் என்று பெயரெடுத்தவர் ஸ்ரீதர். 1954-ம் ஆண்டு வெளியான ரத்தபாசம் என்ற படத்தின் மூலம் எழுத்தாளராக தமிழ் சினிமாவில் நுழைந்த ஸ்ரீதர், முத்துராமன், ஜெமினி கணேசன் உள்ளிட்ட நடிகர்களின் நடிப்பில பல படங்களை இயக்கினார். அதே சமயம் அப்போது முன்னணி நடிகர்களாக இருந்த எம்.ஜி.ஆர் சிவாஜி ஆகியோரை வைத்து குறைவான படங்களே இயக்கி இருந்தார்.

அந்த வகையில், கடந்த 1964-ம் ஆண்டு ஸ்ரீதர் இயக்கத்தில் வெளியான காதலிக்க நேரமில்லை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று அப்போதே சில மொழிகளில் ரீமேக்கும் செய்யப்பட்டது. இந்த படத்தின் மூலம் நடிகர் ரவிச்சந்திரன் நாயகனாக அறிமுகமானார். இந்த படத்தை தொடங்கியபோது ஸ்ரீதர் எம்.ஜி.ஆர் நடிப்பில் அன்று சிந்திய ரத்தம் என்ற படத்தை தொடங்கினார்.

சில நாட்கள் நடந்த இந்த படப்பிடிப்பு திடீரென நின்று போனது அதன்பிறகு ஸ்ரீதரும் – எம்.ஜி.ஆரும் இணையாத நிலையில், 70-களில் இறுதியில் கடன் சுமையில் இருந்த ஸ்ரீதர் எம்.ஜி.ஆரை சந்தித்து கால்ஷீட் கேட்க, எம்.ஜி.ஆரும் அவருக்கு கால்ஷீட் கொடுத்துள்ளார். அப்போது உருவான படம் தான் உரிமைக்குரல். எம்.ஜி.ஆர் லதா நடிப்பில் வெளியான இந்த படம் பெரிய வெற்றியை பெற்ற நிலையில், பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படம் 1974-ம் ஆண்டு வெளியானது. அதன்பிறகு ஒரு சில வருடங்கள் கழித்து எம்.ஜி.ஆர் ஸ்ரீதர் கூட்டணியில் தயாரான படம் தான் நானும் ஒரு தொழிலாளி. இந்த படத்தின் படப்பிடிப்பு 2 நாட்கள் நடைபெற்ற நிலையில், திடீரென ஸ்ரீதர் படப்பிடிப்பை நிறுத்தியுள்ளார். அதன்பிறகு எம்.ஜி.ஆரை சந்தித்து இந்த கதை நான் நினைத்தபடி வரவில்லை. அதனால் புதிய கதையுடன் எடுக்கலாம் என்று நினைக்கிறேன் என்று ஸ்ரீதர் கூறியுள்ளார்.

இதை கேட்ட எம்.ஜி.ஆர் கதையில் உங்களுக்கு திருப்தி இல்லை என்றால் விட்டுவிடுங்கள் அடுத்து எப்போது வேண்டுமானாலும் எடுக்கலாம் உங்கள் விருப்பம் என்று கூறியுள்ளார். அதன்பிறகு ஸ்ரீதர் பல படங்களை இயக்கியிருந்தாலும் இந்த நானும் ஒரு தொழிலாளி படம் உருவாகவே இல்லை. ஒரு கட்டத்தில் எம்.ஜி.ஆர் தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராகிவிட்ட நிலையில், 1986-ம் ஆண்டு ஸ்ரீதரின் இயக்கத்தில் நானும் ஒரு தொழிலாளி படம் வெளியானது.

எம்.ஜி.ஆர் நடிப்பில் 2 நாட்கள் படப்பிடிப்பு நடத்தி திடீரென நிறுத்தப்பட்ட இந்த படம் பின்னாளில் கமல்ஹாசன் – அம்பிகா நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இளையராஜா இசையமைத்த இந்த படத்திற்கு வாலி அனைத்து பாடல்களையும் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply