• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அன்னக்கி்ளி படம் ஓடவே கூடாது!.. வேண்டிக்கொண்ட நடிகைக்கு… 

சினிமா

இசைஞானி இளையராஜா முதன் முதலில் இசையமைத்து வெளியான திரைப்படம் அன்னக்கிளி. இந்த படத்தின் பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானது. இந்த படத்தில் அன்னக்கிளியாக சுஜாதா நடித்திருப்பார். அவருக்கு ஜோடியாக சிவக்குமார் நடித்திருப்பார். இந்த படம் ஓடவேண்டும் என வேண்டிக்கொண்டவர் இளையராஜா என்றால், ஓடவே கூடாது என நினைத்தவர் சுஜாதா என்றால் நம்ப முடிகிறதா?..

15 வயது முதலே சினிமாவில் நடித்து வரும் சுஜாதாவை பாலச்சந்தர் தனது அவள் ஒரு தொடர்கதை படத்தில் நடிக்க வைத்தார். அந்த படம்தான் அவரை ரசிகர்களிடம் பிரபலப்படுத்தியது. அதன்பின் பல திரைப்படங்களிலும் தொடர்ந்து நடித்தார். ஆனால், அவருக்கு நடிப்பதே பிடிக்கவில்லையாம்.

ஆனால், பணத்திற்காக அவரின் குடும்பத்தினர் வற்புறுத்தி அவரை நடிக்க வைத்ததாக சொல்லப்படுகிறது. அன்னக்கிளி படத்தின் போது சிவக்குமாரிடம் ‘சார் இந்த படம் ஓடாது. இதோட நான் சினிமாவை விட்டு போயிட்டா ரொம்ப நல்லது. வீட்டில் ரொம்ப டார்ச்சர் பண்றாங்க.. என்ன படம்? யார் ஹீரோ?. எனக்கு என்ன சம்பளம்? எதுவுமே எனக்கு தெரியாது. எனக்கு சொந்தமா பேங்க அக்கவுண்ட் கூட கிடையாது. இந்த படம் ஓடலன்னா சினிமாவுக்கு முழுக்கு போட்டு யாரையாவது கல்யாணம் பண்ணி்க்கிட்டு போயிடலாம்னு இருக்கேன்’ என சொன்னாராம். பல சினிமா நடிகைகளின் வாழ்க்கை இப்படித்தான். பெற்றோர் பணத்திற்காக கட்டாயப்படுத்தி நடிக்க வைப்பார்கள்.

ஆனால், அன்னக்கிளி படமோ சூப்பர் ஹிட் அடித்தது. அதன்பின் சுஜாதா தொடர்ந்து நடிக்க வேண்டியதாயிற்று. வெற்றியை கொண்டாட அன்னக்கிளி படக்குழுவினர் ஊர் ஊராக போனார்கள். ஆனால், சுஜாதா போகவில்லை.  எந்த சினிமாவை வெறுத்தாரோ அதே சினிமாவில் அன்னக்கிளிக்கு பின் 30 வருடங்கள் நடித்தார். அழுகை காட்சிகளில் கிளிசரின் போடாமலே அழுவார் சுஜாதா. டப்பிங்கின்போது கண்ணில் கண்ணீர் தாரைதாரையாக கொட்டுமாம். பெரும்பாலும் எல்லா திரைப்படங்களிலும் சோகமாகவே வருவார். மனதிற்குள் இருந்த வலியை காட்டவும் அதை சுஜாதா பயன்படுத்திகொண்டாரா என்பது தெரியவில்லை.

இந்த படம் ஓட வேண்டும் என நினைத்த இளையராஜாவுக்கு அவர் நினைத்தது நடந்தது. சுஜாதாவுக்கு எதிர்மறையாக நடந்தது. சிலரின் வாழ்வில் இப்படித்தான் திருப்பங்கள் நிகழும். தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னட மொழி படங்களிலும் சுஜாதா நடித்தார். 2006ம் வருடம் அஜித் நடித்த ‘வரலாறு’ திரைப்படம்தான் சுஜாதா கடைசியாக நடித்த திரைப்படம். 2011ம் வருடம் தனது 58வது வயதில் சுஜாதா மரணமடைந்தார்.

சினிமாவில் சோகமான அம்மா நடிகையாக பல படங்களிலும் நடித்த சுஜாதா பல பெண்களின் உள்ளுணர்வை பிரதிபலித்தார் என்றுதான் சொல்ல வேண்டும்.

பிரசாந்த் 

Leave a Reply