• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இன்றும் பளார் விட்டுக் கொண்டிருக்கும் வேதம் புதிது படத்தின் வசனம்

சினிமா

பாலுங்கிறது உங்க பேரு.. இன்றும் பளார் விட்டுக் கொண்டிருக்கும் ‘வேதம் புதிது’ படத்தின் வசனம்

முப்பத்தி ஆறு வருடங்களுக்கு முன்பு இதேநாளில் வேதம் புதிது என்ற படைப்பு மூலமாக தன் இனிய தமிழ் மக்களுக்கு பாடம் நடத்தி இருந்தார் பாரதிராஜா. அந்த பக்கங்களை இன்று புரட்டி பார்க்கும் போது கூட நிறைய கேள்விகள் தொற்றிக் கொள்ளும்.  படம் நெடுகிலும் சாதியம் பேசுகிறது. 

படத்தில் பாலுத்தேவராக சத்யராஜ். அவரது மனைவி பேச்சியாக சரிதா. இவர்களின் ஒரே மகன் சங்கரபாண்டியாக ராஜா... நீலகண்ட சாஸ்திரியாக சாருஹாசன்.. அவர் மகள் வைதேகியாக அமலா... மகனாக மாஸ்டர். தாசரதி. இவர்களோடு நிழல்கள் ரவி, ஜனகராஜ், ஆகியோர் தான் கதை மாந்தர்கள்.

நாத்திகம் பேசும் சத்யராஜ் அந்த ஊரின் மிக முக்கியமானவர். அவரது பேச்சுக்கு கட்டுப்பட்டு கிடக்கும் ஜனங்கள்.  ஊரில் எந்த பெண் திருமணத்திலும் இவர் வீட்டு சீதனம் தான் பிரதானம். அவரின் ஓரே மகன் சங்கரபாண்டி வெளியூரில் பட்டபடிப்பை முடித்துவிட்டு ஊர் திரும்புகிறார்.  யதேச்சையாக கோயிலில் முதல் பார்வையிலேயே வைதேகி சங்கரபாண்டியை கவர்கிறார். அரும்பிய காதல் இருவரின் மனதிலும் வளரும் காட்சிகளை அழகாக உருவாக்கி இருப்பார் பாரதி ராஜா.

பூட்டப்பட்ட கோயிலுக்குள் யாரோ புகுந்து விட்டார்கள் என்று ஊரே திரண்டு வரும் போது இந்த இளம் ஜோடிகள்தான் கோயிலுக்குள் இருப்பார்கள். சாதுர்யமாக சங்கரபாண்டி குற்றவாளி ஆக தன்னை காட்டி கொண்டு வைதேகியை காப்பாற்றுவார். ஊர் பஞ்சாயத்தில் மகனின் தவறுக்காக தான் எல்லோர் காலிலும் விழுந்து மன்னிப்பு கேட்பார். நீலகண்ட சாஸ்திரிகளிடமும் தனது காதலை உணர்த்துவார் வைதேகி.

இந்த தருணத்தில் ராஜாவும் சாஸ்திரிகளும் நீர் வீழ்ச்சி ஒன்றில் விழுந்து இறக்க அமலாவும் வெள்ளத்தில் அடித்து செல்ல படுகிறார்... யாரும் இல்லாத தம்பி அக்ரஹாரத்தில் தஞ்சமடைய வயிற்று பசி ஆற்றக்கூட பார்ப்பணியம் பேசும் எவரும் தயாராக இல்லை. பாலுத்தேவர் அடைக்கலம் தர காப்பாற்ற பட்ட அமலா ஊர் திரும்பி வரும் போது ஊரே திரண்டு எதிர்ப்பதும் சிறு குழந்தைகள் சாதிய வன்மத்தோடு திரியும் பெரியவர்களை உதறிவிட்டு கிளம்புகிற  கதை களம் தான்  பாடமாக மாறிப்போனது.

சத்யராஜ் நாத்திக கொள்கைகள் பேசி படம் முழுக்க நிறைந்திருப்பார். ஆஜானுபாகுவான சத்யராஜ் கூனி குறுகி நிற்கும் இடங்களில் கூட நம்மை ரசிக்க வைத்திருப்பார். அளவான இயல்பு மீறாது பாலுத்தேவராக வாழ்ந்திருப்பார்.  சரிதாவும் சத்யராஜ்க்கு இணையான தன்  பாத்திரத்தில் கச்சிதமாக அசத்தியிருப்பார். பல இடங்களில் சிறுவன் தாசரதி மூலமாக கூர்மையான வசனங்களை தெறிக்க விட்டார் பாரதி ராஜா. இரண்டு மணி நேர படத்தில் காட்சிக்கு காட்சி அடுக்கடுக்காக வசனங்கள் மூலம் கண்ணன் வசீகரம் செய்கிறார்.  தேவேந்திரன் இசையில் பாடல்கள் அனைத்தும் அற்புதம் நிகழ்த்துகிறது. படத்தை பார்க்கும் நம்மை அந்த கிராமத்துக்கு அழைத்து செல்கிறது கண்ணன் அவர்களது ஒளிப்பதிவு. வைரமுத்து வரிகளில் வசியம் செய்து இருப்பார். அன்றைய நாளில் இந்த படைப்பு இரண்டு தேசிய விருதுகளையும் மூன்று பிலிம்பேர் விருதுகளையும் அள்ளியது.

முப்பத்தி ஆறு வருடங்களுக்கு முன்பு அந்த காலத்தில் துணிச்சலாக சமூக நீதி பேசிய படம் நெற்றிப்பொட்டில் அடித்தாற் போல் வசனங்கள் இத்தனை காலம் கடந்தும் கூட இன்றைக்கும் சாதியம் பேசித் திரியும் மனிதர்களுக்கு இன்னும் வேதம் புதிதாக தேவைப்படுகிறது.
 

Leave a Reply