• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கனடாவின் மகிழ்ச்சி அறிவிப்பு! 3 வருடகால தற்காலிக விசா வழங்க திட்டம்

கனடா

காசா பகுதியில் உக்கிரமடைந்து வரும் போரில் சிக்குண்டு தவிக்கும் மக்களுக்கான மகிழ்வான அறிவிப்பொன்றை கனடா அரசாங்கம் அறிவித்துள்ளது.

கனடா நாட்டினரின் உறவினர்கள் காசாவில் வசிக்குமிடத்து அவர்களுக்கு தற்காலிக விசாக்களை வழங்க கனடா அரசு தீர்மானித்துள்ளது.

அதன்படி, இந்தத் திட்டத்தினை எதிர்வரும் ஜனவரி மாதம் 09 ஆம் திகதியிலிருந்து நடைமுறைப்படுத்தவுள்ளதாக கனடாவின் குடிவரவு அமைச்சர் மார்க் மில்லர் தெரிவித்துள்ளார்.

ஹமாஸ் மீது போர்ப் பிரகடனம் செய்து இஸ்ரேல் இராணுவம் காசா மீது தாக்குதல்களை நடத்தி வருகிறது, வடக்கு காசாவைத் தொடர்ந்து தெற்கு காசாவிலும் இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.

வடக்கு காசா ஏறக்குறைய முற்றிலும் சிதைந்து காணப்படும் நிலையில், தெற்குப் பகுதியில் உள்ள கான் யூனிஸ் நகரில் தற்போது பலத்த சண்டை நடைபெற்று வருகிறது.

இதன் காரணமாக தங்குவதற்கு இடமில்லாமல், அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் காசா மக்கள் கடும் இன்னல்களை சந்தித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் அவர்களுக்கு உதவுவதற்கு முன் வந்துள்ள கனடா அரசு, கனடா நாட்டினரின் உறவினர்களில் காசாவில் வசிப்பவர்களுக்கு தற்காலிக விசா வழங்க தீர்மானித்துள்ளது.

அந்த அறிவித்தலிற்கமைய, இதுவரை 660 கனடா நாட்டைச் சேர்ந்தவர்கள், அவர்களுடைய உறவினர்கள் காசாவில் இருப்பதாக கூறி அவர்களை அழைத்து வர விண்ணப்பித்துள்ளனர், அதில் அவர்களின் மனைவிகள்,குழந்தைகள், பெற்றோர்கள்,பேரக்குழந்தைகள் போன்றோர் தங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.  

அவர்களின் கோரிக்கையின் பிரகாரம் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதியான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு அவர்களுக்கு 3 வருடகால தற்காலிக விசா வழங்கப்படும் என கனடாவின் குடிவரவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனால் எத்தனை பேர் கனடாவிற்கு உள்வாங்கப்படவுள்ளார்கள் என சரியாக தெரியாவிட்டாலும், நூற்றுக்கும் அதிகமானோர் வருகை தர வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், தற்காலிக விசாக்களை கனடா வழங்கினாலும் இஸ்ரேல் இராணுவத்தால் முற்றுகையிடப்பட்ட காசாவில் இருந்து வெளியேற நாங்கள் உத்தரவாதம் அளிக்க முடியாது எனத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  
 

Leave a Reply